[X] Close

ஹாட் லீக்ஸ்!: ஆட்சியரைத் தூக்கி அடித்த அதிகாரம்!


hot-leaks-news

  • Team
  • Posted: 04 Mar, 2018 21:23 pm
  • அ+ அ-

சூப்பர் சுப்பு

சுனந்தா புஷ்கர் தொடங்கி ஸ்ரீதேவி மரணம் வரைக்கும் சகட்டு மேனிக்குச் சந்தேக வெடிகுண்டுகளைக் கடித்து வீசும் தமிழகத்து ‘டிடெக்டிவ்’ தலைவர் உறுதியாக முடிவெடுத்துவிட்டாராம்.  

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சித் தலைமையிடம் போராடியாவது ஒரு சீட்டை வாங்கி தமிழகத்தில் போட்டியிட மெனக்கெடுகிறாராம்.

தலைமை மறுத்தால் ஒன்மேன் ஆர்மியாகக் (துணிச்சலுடன்!) களமிறங்கவும் தயாராய் இருக்கிறாராம். எல்லாம் சரி, இவரு எங்க போட்டியிட்டாலும் அங்கேயும் நோட்டா பட்டன் இருக்குமே!

சூனியம் வெச்சிட்டாங்களாம்!

இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முக்கியஸ்தரும் போயிருந்தார். அந்த ஜல்லிக்கட்டில், கோயில் காளைக்கு அடுத்து இரண்டாவதாகத் தன்னோட காளைதான் வாடிவாசலுக்கு வர வேண்டும் என முன்கூட்டியே கரெக்ட் பண்ணி வைத்திருந்தாராம் ஊசி மாஸ்டர்.

இதனிடையே, முதல் நாள் இரவே மதுரைக்கு வந்துவிட்ட முக்கியஸ்தரிடம் தனது காளையின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டே இருந்தாராம் மிஸ்டர் ஊசி. இதனால் பொறுமையிழந்த வருமானப் புள்ளி, ‘மனுசன் தூங்கப் போற நேரத்துல இது ரொம்ப முக்கியமாக்கும்’ என்று வெடிக்க,  வேட்டியை மடித்துக் கட்டியபடி இருவரும் குஸ்திக்குத் தயாரானார்களாம். முக்கியஸ்தர்தான் சமாதானம் செய்திருக்கிறார்.

இதைப் பெருத்த அவமானமாகக் கருதிய வருமானப் புள்ளி, ‘நாளைக்கு கருத்த மச்சாங் காளை எப்படி ரெண்டாவதா வருதுன்னு பாத்துருவோம்டி மாப்ள’ என்று சவால்விட்டுச் சென்றாராம். அதுபடியே செய்துவிட்டாராம். ஜல்லிக்கட்டு முடிந்து எதிர்பாராத விதமாக சோகம் ஒன்று நிகழ்ந்துவிட, ‘மதுரைக்காரங்க சூனியம் வெச்சுட்டாங்கப்பா’ என்று இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறாராம் மிஸ்டர் ஊசி.

ஆட்சியரைத் தூக்கி அடித்த அதிகாரம்!

அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த லட்சுமி பிரியா கடந்த வாரம் அதிரடியாக அங்கிருந்து மாற்றப் பட்டிருக்கிறார். இதற்குக் காரணம், அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அந்த மாவட்டத்தின் ஆளும் கட்சிப் புள்ளிதான் என்கிறார்கள். அனைத்திலும் கொழிக்க நினைக்கும் அந்தப் புள்ளி, தலையாரிகள் நியமன விவகாரத்திலும் லகரங்களில் லாபம் பாடிவிட்டாராம். ஏற்கெனவே, அங்கன்வாடி பணியாளர்கள் நியமனத்திலும் அண்ணாத்தே வீட்டு வாசலில் உண்டியல் வைக்காத குறை. இதைத் தெரிந்துகொண்ட ஆட்சியர், அவரை ஓவர் டேக் செய்து மெரிட்டில் நியமனங்களை முடித்துவிட்டாராம். 

இந்த நிலையில் தலையாரிகள் விஷயத்திலும் ஸ்டிரிக்டாக இருந்தார் ஆட்சியர். ஆனாலும் அவர் விடுப்பில் இருந்த சமயம் பார்த்து தலையாரி நியமனத்தில் புகுந்து விளையாடிவிட்டார் அதிகாரப் புள்ளி. இதை எதிர்த்து இரண்டு பேர் கோர்ட்டுக்குப் போனதால் இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஆட்சியருக்கு. அதுவரை இவரை வைத்திருந்தால் அறிக்கை மூலம் நமக்கு அபாய சங்கு ஊதிவிடுவார் என்பதால், ஆட்சியரை அதிரடியாக அங்கிருந்து தூக்கியிருக்கிறது ஆளும் அதிகாரம்.

ஸ்ரீரங்கத்தை வட்டமடிக்கும் சூப்பர் படை

காங்கிரஸில் இருந்தபோது மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு கொடுத்திருந்தாராம் சூப்பரை வழிநடத்தும் அந்த காந்தியவாதி. இப்போது சூப்பரை அங்கு போட்டியிடச் சொல்லி அவர் தரப்பிலிருந்து யோசனை சொல்கிறார்களாம். ஆனால், சூப்பர் தரப்போ ஸ்ரீரங்கம் தொகுதியின் ஆதி அந்தங்களை அலசி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறதாம்.

கேப்டன் வீட்டுக் கிச்சனிலே..!

ஒருகாலத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அசைவம் சாப்பிடுகிற அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு ரசனையாக ருசிப்பார். இப்போது கேப்டன் வீட்டு சமையலறையில் சாமை பொங்கல், வரகு இட்லி என்று சிறுதானிய சிற்றுண்டிகளும், இன்னபிற இயற்கை அயிட்டங்களுமாக அமர்க்களப்படுகிறது. 

பொட்டுக்கே பூட்டா?!

துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெரும்பாலும் டெல்லிக்குப் போனால் ஜன்பத்தில் உள்ள மைத்ரேயன் இல்லத்தில்தான் தங்குவார். மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பொட்டுக்காரர் கடந்த மாதம் டெல்லி போனபோது மைத்ரேயன் இல்லம் பூட்டி இருந்ததாம். ‘பாலின்றி டீ இல்லை; நீயின்றி நானில்லை’ என்று இருந்த தலைகளா இப்படி!

தயங்கும் தமிழிசை!

கட்சியின் மாநிலத் தலைவியாக கலக்கிக்கொண்டு இருந்தாலும், தன் சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டத் தயங்குகிறாராம் தமிழிசை சவுந்தரராஜன். அதே மாவட்டத்தின் அதிரடி பாஜக சீனியரான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை எண்ணித்தான் இந்தத் தயக்கம் என்கிறார்கள். பொன்னாருக்கு எதிராகப் போட்டி அரசியல் பண்ணுகிற மாதிரி ஆகிவிடுமோ என்று பயந்து, குமரி மாவட்ட கட்சிக்காரர்களும் தமிழிசையைக் காது குத்துக்குக்கூட கூப்பிடத் தயங்குகிறார்கள்.

ஈ.பி.எஸ். பரிகாரம்

ஹோமம், பூஜை, ஜோதிட சமாசாரங்களைத் தவறாமல் பின்பற்றுவதில் முதல்வர் ஈ.பி.எஸ். அப்படியே ’அம்மா வழி’! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்துக்கு பிறகு ‘ஆட்சியாளர்களுக்கு ஆபத்து’ என சில ஜோதிடர்கள் மணி அடிக்க, அதுக்கும் ஒரு பரிகார பூஜை நடத்திவிட்டார் ஐயா.

ஸ்டாலின்லு தெலுங்குலு!

எ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். என்று மு.க.ஸ்டாலினைச் சுற்றிப் புழங்குகுற முக்கியஸ்தர்கள் அவர்களுக்குள் அடிக்கடி தெலுங்கில் மாட்லாட, அது காதில் விழுந்தால் சட்டென்று ‘ஷார்ப்’பாகி... தெலுங்கு வார்த்தைகளுக்குப் பொருள் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்கிறாராம் செயல் தலைவர்

அரசருக்கு டெல்லி ஆறுதல்!

‘தமிழக காங்கிரஸ் தலைவரை மாத்தப் போறாங்கோ’ என்று போகுமிடமெல்லாம் புகை போட்டு திருநாவுக்கரசருக்கு ‘திடுக்’ மூட்டி வருகிறார் பழைய தலை ஈ.வி.கே.எஸ். ‘யாமிருக்க பயமேன்’ என டெல்லியிலிருந்து கேட்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய சிங் அபயக் குரல்தான் அரசருக்கு ஆறுதலே.

வைகோ சினிமா... இசை ராஜா

முதன்முறையாக வைகோ திரைக்கதை வசனம் எழுதி தனது கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் வீரமங்கை வேலு நாச்சியார் திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

பாலகிருஷ்ணனைப் பாருங்கய்யா..

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக வந்திருக்கும் கே.பாலகிருஷ்ணனை ‘ஊருக்கு நேந்து விட்ட பிள்ளை’ என்றுதான் அவரது தந்தையார் குறிப்பிடுவார். மாணவப் பருவத்திலிருந்து கட்சிப் பணியில் இருக்கிறார் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ஜான்ஸி ராணியும் முழு நேரக் கட்சி ஊழியராக இருப்பதால் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே அதிகபட்சமாக மாதத்தில் ஒருசில நாட்கள்தான்.  எம்..எல்.ஏ-வாக இருந்தபோதும் சரி.. கே.பி-க்கு உதவியாளரோ, சொந்த காரோ கிடையாது. 

திருமண மறுப்பு திருமா! 

மகனுக்கு ஒரு கல்யாணத்தை நடத்திப் பார்த்துவிட வேண்டும் என இன்னமும் தவிக்கிறார் தொல்.திருமாவளவனின் தாயாரான பெரியம்மா.  ஆரம்பத்தில் இந்தப் பேச்சு வந்தபோதிலிருந்து இன்று வரை இதற்குப் பிடி கொடுக்காமல், கட்சி - பொதுவாழ்க்கை என்றே பிடிவாதமாகக் கவனம் காட்டுகிறார் திருமா.  தினமும் மகனோடு அலைபேசியில் தவறாமல் பேசிவிடும் தாயார், சமீபத்தில். ஒரு வார காலம் பேசாவிரதம் இருந்தும் திருமா இறங்கி வரவில்லையாம். 

அன்புமணியின் ‘மாயை’ அட்டாக்!

இப்போதெல்லாம் கட்சி மேடைகளில் பேசும்போது, ‘சுப்பிரமணிய அய்யர் அவர்களே, செந்தில்குமார் முதலியார் அவர்களே..’ என (வன்னியர் அல்லாத) கட்சிப் பொறுப்பாளர்களை சாதிப் பெயரைச் சொல்லி விளிக்கிறார் அன்புமணி ராமதாஸ். பாமக ஒரே ஒரு சாதிக்கான கட்சி என்ற மாயத் தோற்றத்தை உடைக்கவாம் இந்த டெக்னிக். 
 

ஓவியங்கள்: வெங்கி

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close