[X] Close

ஹாட் லீக்ஸ்: அந்தமானில் ஜெயலெட்சுமி!


hot-leaks-jeyalakshmi-in-anadaman

  • kamadenu
  • Posted: 09 Apr, 2018 09:23 am
  • அ+ அ-

கதையே வேற..!

கடந்தவாரம், `காவிரிக்காக எனது பதவியைத் துறப்பேன்’ என இலைப் புள்ளி ஒருவர் தடாலடி கிளப்பி, சில பல ‘லைக்’குகளை அள்ளினார். ஆனால், அதன் பின்னணிக் கதையே வேறாம்! சின்னம்மா பக்கம் இருந்தவர் என்பதால், அண்ணனைக் கழகத்தில் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களாம். அதை உணர்த்தவே ராஜினாமா அஸ்திரம் தூக்கினாராம். உள்ளர்த்தம் புரிந்துகொண்ட ஒருங்கிணைப்புத் தலைகள், உடனடியாக போன் போட்டு ஆளை சமாதானம் செய்தார்களாம். அதிரடி கிளப்பியவருக்கு கூடிய விரைவில் கட்சிப் பதவி கொடுத்து கவனிக்கப்படலாம் என்பது அண்மைச் செய்தி!

மணல் குவாரி ‘ஷேரிங்’!

வாரியம் கேட்டு தமிழ்நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மணல் குவாரிகள் ஒதுக்கீட்டில் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். தலைக்கு 24, அடுத்தவருக்கு 7, எதிரணி தலைக்கு 9. இதுதான் அந்த ஒப்பந்தம். இதில், தமக்கு 7 போதாது என்று மனஸ்தாபப்பட்டு நிற்கிறாராம் நம்பர் டூ. மேலதிக வருமானங்களில் பங்கு தருவதிலும் பெறுவதிலும்  இப்போதிருப்பவர்கள் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது!

அவங்களுக்கும் வண்டி ஓடுது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு, வெளியிலிருந்து ஒப்பந்த அடிப்படை யில் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், முரட்டான திராவிடக் கட்சிப் பிரமுகரின் பெண் வாரிசு ஒருவரும், கொஞ்ச காலம் ‘பம்பரம்’ சுற்றிக் களைத்துவிட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரும் தான் அதிக அளவில் வாகனங்களை இயக்குகிறார்களாம்.

தாவல் தந்த யோகம்!

புலிப்படை நாயகர் முதலில் குக்கருக்கு விசிலாய் இருந்தார். அங்கு கேட்டது கிடைத்தது. போகப்போக அங்கே வரும்படிக்கு வறட்சியானதால் எதிரணிப் பக்கம் எட்டிப் பார்த்தார். அங்கு, இப்போது இவர் எது சொன்னாலும் அப்பீல் இல்லாமல் நடக்கிறதாம். இதனால், கஜானாவும் கணிசமாக நிரம்பியிருக்கிறதாம். முன்பு, படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டவர், தற்போது கடன்களை அடைத்து, மீண்டும் படம் எடுக்குமளவுக்கு சவுண்டாம். எல்லாம் தாவல் தந்த யோகம்!

வளைக்க வரும் வலை கம்பெனி!

முன்பு, குஜராத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு களப்பணி செய்த சமூக வலைதள கம்பெனிகள் சீக்கிரமே தமிழகத்திலும் வேலையைக் காட்ட இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக-வுக்கு தமிழகத்தில் செல்வாக்கை அதிகரிக்கும் உத்திகளை உருவாக்குவதே இவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஸ்பெஷல் அசைன்மென்ட். ஏப்ரல் 2-ம் தேதி, இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. தமிழகத்திலுள்ள முக்கிய வலை ஜித்தர்கள் சிலரை அழைத்து, இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியவர்கள், “இனிமேல் மாதா மாதம் இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் இப்படி நடக்கும். அப்போதெல்லாம் நீங்கள் வரவேண்டியிருக்கும்” என்று உற்சாகம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

அந்தமானில் ஜெயலெட்சுமி!

ஏட்டு முதல் எஸ்.பி., வரை அலறவிட்ட சிவகாசி ஜெய லெட்சுமியை யார் மறந்தாலும் காக்கிகள் மறக்க மாட்டார்கள். தடாலாடி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி போலீஸ் தலைகளை உருட்டிய ஜெயலெட்சுமி மீது, சி.பி.ஐ-யும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. அனைத்து வழக்குகளிலும் இருந்து விடுபட்டவர், சிலகாலம் சிவகாசி பக்கம் காக்கிவாடன்பட்டியில் அப்பா அழகிரிசாமியுடன் சேர்ந்து விவசாயம் பார்த்தார். அவர் இறந்த பிறகு சொந்த ஊரைவிட்டுப் பறந்தவர்,  தற்போது அந்தமானில் தோழி ஒருவரின் நிழலில் இருக்கிறார். அங்கே கார்மெண்ட்ஸ் பிசினஸ் செய்கிறார் ஜெயலெட்சுமி. அவரது மகனும் மகளும் கோவையில், அவரது சகோதரர் வீட்டில் இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவருமே பொறியியல் பட்டதாரிகள் என்பது கூடுதல் தகவல்!

அமைச்சருக்காக காத்திருந்த முதல்வர்!

முன்பெல்லாம் முதல்வருக்காகத்தான் மற்ற அமைச்சர்கள் காத்திருப்பார்கள். அந்த மரபைத்(!) தகர்த்து, கோவை விமான நிலையத்தில், சக அமைச்சருக்காக 15 நிமிடம் காத்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கடந்த வாரம், சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார் எடப்பாடியார். அங்கு, உள்ளூர் ரத்தங்கள் பலரும் அவருக்கு சால்வை அணிவித்து விடைகொடுத்தனர். அவர்களை ஒதுக்கிவிட்டு, மண்டலத்து அமைச்சர் வேலுமணியைத் தேடினார் முதல்வர். “அண்ணன் ‘ஆன் தி வே’. வந்து சேர பத்திருபது நிமிஷம் ஆகும்” என்று யாரோ சொல்ல... “பரவாயில்ல... வந்ததும் பார்த்துட்டே போறேன்” என்று சொல்லிவிட்டு காத்திருந்தார் முதல்வர். பதினைந்து நிமிடங்கள் கழித்து அமைச்சர் வந்து சால்வை போர்த்திய பிறகே ‘நிம்மதி’யாக அங்கிருந்து புறப்பட்டார் முதல்வர்!

நேரு ஏன் சசிகலாவை சந்தித்தார்?

சசிகலா மீண்டும் சிறைக்குக் கிளம்ப இருந்த கடைசி நேரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரைச் சந்தித்தார். சந்திப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மையில், நேருவின் தம்பி ராமஜெயமும் நடராஜனும் நல்ல நட்பில் இருந்தார்கள். இவருக்கும் வெளி நாடுகளில் ரியல் எஸ்டேட் தொடர்புகளும் உண்டாம். வெளிநாட்டு சொத்து சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தொடர்பாகப் பேசவே, சசிகலா நேருவை அழைத்ததாகவும் தஞ்சைப் பக்கம் ஒரு தகவல் சுற்றுகிறது.

லெட்டர் பேடில் சின்னம்மாவை காணோம்!

தினகரனின் அமமுக லெட்டர் பேடில் சசிகலா படம் இல்லை.  முன்பெல்லாம் தினகரனின் அறிக்கைகளில், ‘தியாகத் தலைவி சின்னம்மாவின் ஒப்புதலுடன்’ என்ற வாசகம் கட்டாயம் இருக்கும். இப்போது அதுவும் மிஸ்ஸிங்! அம்மா தொலைக்காட்சியிலும் தினகரன் செய்திகளுக்கு முக்கியத்துவம் குறைகிறது. இதுபற்றி, தினகரன் விசுவாசிகளிடம் கேட்டால்,  “அதிமுக-வுக்கு சின்னம்மாதான் இன்னமும் பொதுச்செயலாளர். தினகரன் தனிக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அந்தக் கட்சிக்கு எப்படி சின்னம்மா பெயரைப் பயன்படுத்த முடியும்? அப்படிப் பயன்படுத்தினால் நாளைக்கு சட்டச் சிக்கல் வராதா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

துரைமுருகனுக்கு ஸ்டாலின் ஐஸ்!

முக்கியத் தலைவர்கள் சந்திப்பிலும் செய்தியாளர்கள் சந்திப்பின் போதும் ஸ்டாலினுக்குப் பக்கத்தில் அட்டையாய் ஒட்டி நிற்பார் துரைமுருகன். பல நேரங்களில் தனது உடல் மொழியால் செய்தியாளர்களையே சங்கடப்பட வைப்பார். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்டாலின்,  “தலைவருக்கு பேராசிரியர் எப்படியோ அதுமாதிரி எனக்கு நீங்கள்” என்று சொல்லி, துரைமுருகனை உச்சி குளிர வைத்திருக்கிறாராம். வழக்கமாக ஸ்டாலினைச் சுற்றி நிற்கும் பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட தலைகளுக்கு இதைக்கேட்டு கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close