[X] Close

சங்கி மங்கி மீட்டிங்


sangi-mangi-meeting

பிரதிநிதித்துவப் படம்.

  • kamadenu
  • Posted: 08 Apr, 2018 13:15 pm
  • அ+ அ-

சங்கியும் மங்கியும் காமதேனு வாசகர்களுக்கு பல சுவாரஸ்யத் தகவல்களை கொண்டுவந்து சேர்க்க உள்ளனர். சங்கி போகாத இடமில்லை தொடாத விஷயமில்லை என்கிற அளவுக்கு புத்திசாலி. மங்கி சற்று மந்தம் ஆனால் நியாயத்தை உடனே கேட்கும் கேரக்டர். மங்கி கேட்கும் எடக்கு மடக்கான கேள்விகளால் சங்கியிடமிருக்கும் விஷயங்கள், ரகசியத் தகவல்கள் வாசகர்களுக்கு வெளிவரும். அதற்கு மங்கி கியாரண்டி கொடுக்கிறார். சங்கியும் மங்கியும் அலசும் விஷயங்கள் அரசியல், சினிமா, காவல்துறை, அரசுத்துறைகள் என அனைத்தும் வரும்.

நாட்டின் நடப்புகளை சுவாரஸ்யமாக, யாரையும் அவதூறு செய்யாமல் இருவரும் அலசப்போகிறார்கள், நாமும் கொஞ்சம் காதைக் கொடுப்போம்…

சங்கி வெளியில் போய் சுற்றிவிட்டு வேகமாக வந்து அமர்ந்தார், மங்கி தண்ணீர் பிடித்து கொடுத்தார் என்றெல்லாம் இழுக்க மாட்டோம். நேரடியாக விஷயத்துக்கு வருகிறோம். 'அண்ணே வணக்கம்' என மங்கி சங்கிக்கு வணக்கம் சொல்ல, 'வணக்கம்பா' என்ன விசேஷம் சொல்லு…

அண்ணே, நீங்கதான் சொல்லணும் நாங்க கேட்கணும். அப்படியா மங்கி, முதல்ல கொஞ்சம் சூடா ஆரம்பிக்கிறேன். நேத்து மைலாப்பூர் பக்கம் ஒதுங்கினேன். கூட்டுறவு சங்க தேர்தல் ஆளுங்கட்சிக்குள்ளேயே போட்டி சண்டை எல்லா வேடிக்கையும் நடந்ததை பார்த்தேன். போங்கண்ணே சண்டை போட்டவங்க எல்லாம் வெளியே போய்ட்டாங்கண்னு ஓபிஎஸ், ஈபிஎஸ் அங்கங்க கட்டிப்பிடிச்சு போஸ் கொடுக்குறாங்க நீங்க புதுக்கதை சொல்றீங்க.

மங்கி, அது ஊருக்கு நான் சொல்றது உள்குத்து என்னதான் இரண்டு அணியும் இணைஞ்சாலும் இது அதிகாரத்தை பங்கு போட்ற மேட்டர் அல்லவா? மைலாப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஓபிஎஸ் ஆட்கள் 3 பேருக்கு சீட்டு கொடுக்கலைன்னு பெண் நிர்வாகி ஓபிஎஸ்ஸிடமே நேரில் சொல்ல ஓபிஎஸ்ஸுக்கு வந்த கோபத்தை யாருமே இதுவரை பார்க்கவில்லையாம்.

அதிகாரிக்கு போன போடுன்னு சொல்லி கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கிட்டாரு. அதோடு விடாமல் பகுதியை வரச்சொல்லி அவரையும் லெப்ட் ரைட் வாங்கி, மாவட்டம் ரவியையும் கூப்பிட்டு என்ன ரவி இதெல்லாம் என்று வருத்தத்தைப் பதிவு செய்தாராம். தம்பி, இது வெறும் ட்ரெய்லர் தான். தமிழ்நாடு முழுக்க இந்தப் பிரச்சினை இருக்கு. அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வேற வருது அதுல என்னென்ன மோதல்களையெல்லாம் பார்க்கப் போறோமோ?

அண்ணே, இந்த ஸ்டாலின் நடைபயணம் போறாரே, மங்கி நிறுத்து அவர் நடைபயணம் போறாருன்னு யார் சொன்னது. படிச்சேனே அண்ணே, காவிரி மீட்புப் பயணம்னு. அடேய் அதில எங்க நடை பயணம்னு வருது சொல்லு. மீட்புப் பயணம்னா நடை பயணம் இல்லையாண்ணே? ஏண்ணே இவ்வளவு அழுத்தமா போராட்டம் நடந்தும் ஏண்ணே அவங்க அசையவே மாட்டேங்கிறாங்க?

இந்த அழுத்தம் சரியில்லையோ, கூட்டணி சேர்க்கத்தான் ஸ்டாலின் போராட்டம் நடத்துறாருன்னு பொன்னார் பேட்டி கொடுத்துருக்காரு. இதுல ஒரு ட்விஸ்ட்டைப் பார்த்தியா? தமிழகத்துக்கு காவிரி நீரைக் கொடுக்காத காங்கிரஸ் ஆட்சியை கர்நாடகாவில் இருந்து அகற்றுவதே லட்சியம்னு வேற பொன்னார் சொல்றார். என்னதான் நடக்குது நாட்டுல. அப்ப காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை என்ன செய்யலாம்னு நீ கேட்டியாண்ணே? நான் எங்கடா கேக்குறது மைக்க நீட்டுகிறவர்கள் தான் கேக்கணும், நாம் வேடிக்கை பார்க்கிறவங்க தானே.

அண்ணே, கேப்டன் இதில ஒரு அருமையான கருத்து சொன்னாருண்ணே கவனிச்சிங்களா? நீ சொல்லு அருமையான கருத்தா இல்லையான்னு நான் சொல்றேன். அதாவதுண்ணே ஏண்டா காவிரிக்காக உண்ணாவிரதப் போராட்டம் அது இதுன்னு நாடகம் நடத்துகிறீர்கள். முதல்ல எல்லோரும் போய் சித்தராமய்யாவ பாருங்கப்பான்னு சொன்னவர் தமிழ்நாட்டுல இருந்து ரெண்டு மத்திய அமைச்சருங்க இருக்காங்க என்னதுக்கு பிரயோஜனம்னு கேட்டாருண்ணே. பாவம்ணே அதுக்கு மேல அவரால பேச முடியலண்ணே

என்னடா செய்றது, அவரு உடல்நிலை அப்படி இருக்கு. அவர் நினைப்பதை அவரால் பேச முடியாத நிலைல இருக்காரு ஆனா அவரு சொல்றதிலேயும் உண்மை இருக்குல்ல? ஆனா இரண்டு முதலமைச்சர்கள் கூடி பேச இவரு கருணாநிதியும் இல்ல அவரு ஈஎம்எஸ்ஸும் இல்ல. எண்ணண்ணே சொல்றீங்க புரியல? அடேய் அது பழைய கதை கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ள பிரச்சனையை பேச அதிகாரிகள் குழு போட்டப்ப இதுக்கு எதுக்கு அதிகாரிகள் நாமே பேசிக்கலாமேன்னு கேரள சிபிஎம் முதல்வர் ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாட் சொல்ல நல்ல ஐடியாவா இருக்கேன்னு கருணாநிதி சொல்ல இருவரும் நேரா சந்திச்சு பேசி மாநில பிரச்சினைய முடிச்சாங்கன்னு சொல்வாங்க.

அதெல்லாம் அந்த காலம் இப்ப எங்க அந்த பண்பாடு, விட்டு கொடுக்கும் எண்ணம் இருக்கு. அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்? சொல்லு மங்கி, அண்ணே இந்த துணைவேந்தர் நியமனத்துல அமைச்சர்களுக்குள்ளேயே ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்றாங்களேண்ணே எப்படி. அடேய் அது சகவாச தோஷம்டா. ஒருத்தர் எதிர்ப்பாரு, ஒருத்தர் ஆதரிப்பாரு, ஜனங்க அப்படியே குழம்பி போயிடணும். டெல்லிக்காரவுக அப்படித்தானே செய்றாங்க. ஓ அதே டெக்னிக்கா அண்ணே. ஆமாண்டா இப்பல்லாம் அதுதாண்டா ஃபேஷன்.

ஏண்ணே எதாவது புது மேட்டரா இருந்தா எடுத்து விடுங்கண்ணே, புது மேட்டரா கேட்டுக்க நாளைக்கு நடக்குதுல்ல சினிமா நடிகர்கள் போராட்டம் அதுல தங்களுக்கு மரியாதை வேணும்னு இரண்டு தரப்பும் நினைக்குதாம். நம்ம தலைவர் பேச்சுதான் சூடா இருக்கணும்னு இரண்டு தரப்பும் நினைக்குதாம். இவர்கள் போட்டி போட்டு எதையாவது பேசி வைக்கப்போகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் யோசிக்கிறாங்களாம்.

என்னத்தண்ணே பேசப் போறாங்க, திருச்சி கூட்டத்துல ஆண்டவர் பேச்சு ஒண்ணும் எடுபடலையேண்ணே. எப்படிடா எடுபடும் ஸ்கூல் பசங்களுக்கு பாடம் எடுக்கிற மாதிரி பேசிக்கிட்டிருந்தா எப்படிப்பா? நல்லா அடிச்சு விடணுமில்ல. ஏண்ணே சப்ஜக்டு பேசுறாருன்னு சொல்றாங்களே. என்ன சப்ஜக்டோ போ. இவரு இதே மாதிரி பேசிக்கிட்டிருந்தா வர்ற கூட்டம் கூட வராது. சரி அத விடு ஒரு கூத்து ஒன்னு அந்த கூட்டத்துல நடந்ததாம் அத சொல்றேன் கேளு.

திருச்சி கூட்ட மேடையில சினிமா டீமை மட்டும் ஏத்துனாங்களாம், கூடவே பிக்பாஸ் டீமை மட்டும் ஏத்துனதுல கட்சி நிர்வாகிகளுக்கு வருத்தமாம். வளருவதற்கு முன்பே இவ்வளவு பிரச்சனையா ஆண்டவரே.

அடுத்த மேட்டர கேளு பெரிய அளவுல ஐபிஎஸ் டிரான்ஸ்பர் வரப்போகுது. பெரிய பெரிய ஆஃபீசருங்க தலை உருள போகுது. உளவுத்துறைக்கு பெரிய அதிகாரி ஒருத்தர் வர்றாராம். சென்னையில் உள்ள ஒரு அதிகாரி சேலத்துக்கு ஆணையரா போகிறாராம். சென்னையிலேயே பெரிய அளவில் மாற்றம் வருதாம். எப்ப வேண்டுமானாலும் இது நடக்கும்னு எதிர்பார்க்கிறாங்க. அய்யய்யோ ஏன் நல்லாதான போய்கிட்டிருக்கு? நல்லா தான் போகுது ஆனாலும் இது நடக்குது புரிஞ்சுக்க.

அடுத்த மேட்டர கேளு சென்னையில போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கார்களை 15 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் போலீஸார் துணையுடன் சேர்ந்து அகற்றுவோம்னு சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுச்சு, ஆனால் ஒரு மாதம் ஆகப்போகுது ஒன்றும் நடக்கல எல்லாம் அறிவிப்போடு நிக்குது. அண்ணே வாகனங்களை அகற்றும்போது கூடவே சாலையில் இடைஞ்சலா இருக்குற குப்பைதொட்டிகளையும் சேர்த்து அகற்றச்சொல்லுங்கண்ணே, பாதி டிராபிக் ஜாமுக்கு குப்பை தொட்டிகள் தான் காரணமா இருக்குண்ணே.

சரி போதும் நான் நடிகர்கள் போராட்டக்களத்த பார்க்கப்போறேன் நாளை பேசுவோம். சங்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார்.  
 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close