[X] Close

ஹாட் லீக்ஸ்: செரினாவும் செல்ல மகனும்!


hot-leaks-and-serenavum-sella-maganum

  • kamadenu
  • Posted: 02 Apr, 2018 09:59 am
  • அ+ அ-

மல்லுக்கட்டத் தயாராகும் மணியனும் ஜெயபாலும்!

நாகை மாவட்ட அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், ஓ.பி.எஸ். பக்கம் நின்றவர். ஆனால், கழகங்கள் இணைந்த பிறகு இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லையாம். அதற்காக அதிருப்தியில் இருந்தார். இது தெரிந்ததும் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான பொறுப்பாளராக ஓ.எஸ்.மணியனுடன் இவரையும் சேர்த்துப் போட்டு வாட்டம் போக்கியிருக்கிறார்கள். இதையடுத்து ஜெயபால் இப்போது குஷி. அடுத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக பதவிகளை வென்றெடுப்பது யார் என்ற கோதாவில், மணியனும் ஜெயபாலும் மல்லுக்கட்டத் தயாராகி வருகிறார்கள்.

செரினாவும் செல்ல மகனும்!

செரினாவை ஞாபகம் இருக்கிறதா? கஞ்சா வைத்திருந்ததாக 2003-ல் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டவர். உண்மையில் அப்போது செரினா சிறைவைக்கப்பட்டதன் காரணம் வேறு. 10 கிலோ கஞ்சாவும் ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாயும் செரினாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொன்னது. வழக்கின் இறுதியில் செரினா குற்றமற்றவரானார். அந்த செரினா இப்போது சென்னையில் வசிக்கிறார். வெளிநாட்டு வங்கி ஒன்றில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவருக்கு, இப்போது ஒரு வயதில் செல்லமாய் ஒரு மகனும் இருக்கிறார்.

குத்துவெட்டு சங்கத் தேர்தல்!

கட்சியின் கீழ்மட்டத்தைச் சமாதானப்படுத்த கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துகிறது ஆளும்கட்சி. அதிகப்படியான பதவிகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைகளை தேர்தல் பொறுப்பாளர்களாகப் போட்டிருக்கிறார்கள். முடிந்தவரை, எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை ஒதுக்கித் தள்ளவும் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவுகள் பறந்திருப்பதால், கூட்டுறவு சங்கத் தேர்தலில் இன்னும் தூக்களாக குத்து வெட்டு நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

உதயநிதிக்கு தடைபோட்ட தலைவர்கள்!

திமுக-வின் ஈரோடு மண்டல மாநாட்டில் மடைதிறந்த வெள்ளமாய் பேசவேண்டும் என்று இருந்தாராம் உதயநிதி ஸ்டாலின். ஆனால், “அப்பா, செயல்தலைவரான பிறகு நடக்கும் முதல் மாநாடு இது. இப்போது நீங்கள் மேடையேறினால், குடும்ப அரசியல் என்று மறுபடியும் விமர்சிப்பார்கள். காலம் இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சீனியர்கள் அணைபோட்டு விட்டார்களாம். அதனால், தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு தொண்டர்கள் பக்கம் முன்வரிசையில் அமர்ந்துவிட்டார் உதயநிதி.

சசிகலா வைத்த வேண்டுகோள் !

பரோலில் வந்திருந்த சசிகலாவை அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். இதில்லாமல், முக்குலத்தோர் அமைப்புகளின் முக்கியத் தலைகளும் அவரைச் சந்தித்தார்கள். அப்போது, “நம்பியவர்கள் கழுத்தறுத்து விட்டார்கள். எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்வரை எல்லாம் காத்திருக்க முடியாது. அதற்குள்ளாக இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப என்ன செய்யவேண்டுமோ அதை தாமதிக்காமல் செய்யுங்கள்” என்று சொன்னாராம் சசிகலா. இதைத் தொடர்ந்து, மேலும் சிலமுக்குலத்து எம்.எல்.ஏ-க்களோடுபேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறது தூதுக்குழு.

ஆபரேஷன் ஆதித்யநாத்!

இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். விரைவில் விரிவாக்கம் செய்யவிருக்கும் அமைச்சரவையில் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கவும் முடிவெடுத்திருக்கிறார் யோகி.

மிஸ்ரா பின்னணியில் மிரட்டும் அயோத்தி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் எம்.பி-க்கள் கடிதம் அளித்துள்ளனர். மிஸ்ரா, வரும் அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். அதற்குள் அயோத்தி வழக்கின் மீதான மேல்முறையீட்டுத் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து, அரசியல் காட்சிகள் பெரிய அளவில் மாறும் வாய்ப்பு இருப்பதாலேயே, கண்டனத் தீர்மான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறதாம் காங்கிரஸ்!

அங்காளி பங்காளி கூட்டணி!

கதர் தலைவர் ஆரம்பத்திலிருந்தே மன்னார்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். இப்போதைக்கு அறிவாலயம் தான் ரூட் என்றாலும் வாய்ப்பும் சமயமும் அமைந்தால் அப்படியே குக்கர் கடைக்கும் போய்வரலாமா என்று யோசிக்கிறாராம் தலைவர். குக்கர் கடைக்கு அட்வைஸராக இருக்கும் தனது சம்பந்தியிடம் இதுபற்றி அடிக்கடி ஆலோசனையும் நடக்கிறதாம். அறிவாலயக் கூட்டணியைவிட அங்காளி பங்காளி கூட்டணியில் ‘கேட்டதெல்லாம்’ கிடைக்கும் என்பதும் இதற்குக் காரணமாம்.

போட்டுக் கொடுத்த பூட்டு?

பூட்டு மாவட்டத்தின் மன்றப் பொறுப்பாளர் விவகாரத்தில் தலைவரின் குடும்பத் தலைவி ஏகத்துக்கும் மெனக்கெட்டாராம். மலைக்குப் போய்விட்டு வந்த தலைவர் விசாரணை நடத்தியபோது, ‘அனைத்தையும் நான் அம்மாவிடம் பேசிவிட்டேன்’ என்று தெம்பாகச் சொன்னாராம் பூட்டு மாவட்டப் பொறுப்பாளர். இதைக் கேட்டுக் கடுகடுப்பான தலைவர், ‘இனிமேல், மன்ற விவகாரங்களில் யாரும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று குடும்பத்துக்கு தடை விதித்துவிட்டாராம்.

ஆன்மிக அரசியலில் குளிர்காய...

அறிவாலயத்தில் அடைக்கலமாகியிருக்கும் முன்னாள் அதிமுக-வினர் சிலரும் அங்கே அதிருப்தியில் இருக்கும் சிலரும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆன்மிக அரசியல் சூடுபிடித்ததும் அங்குபோய் குளிர்காயலாம் என்பது இவர்களின் திட்டமாம்.

திடீர் ஆலோசனையும் திகைப்பான அழைப்பும்!

நீங்கள் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுங்கள். காவிக்கட்சி என்றுகூட விமர்சனம் செய்யுங்கள்; ஆட்சேபனை இல்லை. ஆனால், காங்கிரஸை கொஞ்சம் விலக்கி வையுங்கள். அப்புறம் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று டெல்லியிலிருந்து ஆலோசனை வந்திருக்கிறதாம். சந்திக்க வருமாறு ராஜ்பவனிலிருந்து தீடீர் அழைப்பு வந்ததுகூட இதன் பின்னணியில்தானாம்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close