[X] Close

ஹாட் லீக்ஸ்: ‘செயல் புகழ்’ சேகர் பாபு


hot-leaks-seyal-pugazh-sekarbaboo

  • kamadenu
  • Posted: 28 Mar, 2018 09:43 am
  • அ+ அ-

செயல் புகழ்சேகர் பாபு

சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சேகர் பாபு சொந்த வேலையாகப் போனால்கூட செயல் தலைவர் ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுத்தான் போகிறாராம் (தாய்க் கழகத்துப் பழக்கமோ!). அவரது இந்த ஓவர் பணிவை, சுற்றியிருக்கும் மற்ற நிர்வாகிகளிடம் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறாராம் ஸ்டாலின். ‘நல்ல பேரை வாங்கிபுட்டேன் பிள்ளைகளே’ என்று சேகர் பாபுவும் புளகாங்கிதம் காட்ட... கட்சியின் மற்ற உயர் மட்ட நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பு. 

நடராஜனும் முள்ளிவாய்க்கால் முற்றமும்

மறைந்த ம.நடராஜன் உடலை தஞ்சையில் உள்ளமுள்ளிவாய்க்கால் முற்றத்தில் அடக்கம் செய்யத்தான்  முதலில் திட்டமிட்டார்களாம். “முற்றம் அனைவருக்கும் பொதுவான அடையாளம். நடராஜனுக்கு அங்கே இடமளித்தால் நாளை

இன்னொரு பிரபலத்துக்கும் இதேபோல் கோரிக்கை எழும்” என்றுதமிழ் அமைப்புகள் எச்சரித்தனவாம். இதையடுத்தே, முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜன் அடக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்தில் சமாதி எழுப்பி நினைவிடம் அமைக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

பிராது வாசிக்கும் நீதிபதி

சசிகலாவுக்கு பேரவை தொடங்கியதால் ஜெயலலிதாவின் கோபத் தீர்ப்புக்கு ஆளானவர் உசிலம்பட்டி அதிமுக எம்.எல்.ஏ.வான நீதிபதி (பேரே அதுதான்!).  இப்போது எடப்பாடி அணியில் இருக்கும் நீதிபதிக்கு ஏக அதிருப்தியாம். வருடம் ஒன்றாகியும் தனக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை கண்டுகொள்ளவில்லை என்பதால்தான் அதிருப்தி.  “வாரியம் கீரியம் ஏதாச்சும் போடுவாங்கன்னு பார்த்தா... அதுவும் நடக்கமாட்டேங்குது... இனிமேலும் இப்படியே இருக்கணுமான்னு யோசிக்க வேண்டியிருக்கு” என்று நெருக்கமானவர்களிடம் பிராது வாசிக்கிறாராம் நீதிபதி! 

மாநாட்டை புறக்கணித்த சிதம்பரம் விசுவாசிகள்

டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ளப் புறப்பட்ட ப.சிதம்பரம் விசுவாசிகளில் பலர், கடைசி நேரத்தில் அந்தப் பயணத்தைத் தவிர்த்துவிட்டார்கள். கார்த்தி கைது விவகாரத்தில் கட்சித் தலைமை போதிய எதிர்ப்புக்காட்டவில்லை என்ற வருத்தத்தின் தாக்கமே இது என்கிறார்கள். இன்னொரு தரப்பிலோ, “கார்த்தி சிதம்பரத்தை 24-ம் தேதி கோர்ட்டுக்கு அழைத்து வருவார்கள். அப்போது எப்படியும் டெல்லியில் அட்டென்ட்டன்ஸ் போடவேண்டியிருக்கும். அதான் டபுள் செலவு வேண்டாமென்று மாநாட்டுப் பயணத்தை தவிர்த்துவிட்டார்கள்” என்றும் சொல்கிறார்கள்.

கொசுத்தொல்லை தாங்கல!

அண்மையில் டெல்லியில் காங்கிரஸ் மாநாடு நடந்த நேரு ஸ்டேடியத்தில் கொத்து கொத்தாகக் கொசுத் தொல்லை. கடியிலிருந்து மேடைத் தலைவர்களைக் காப்பாற்ற  சோனியா காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் கொசுவிரட்டும் ஜெல் தந்தார்கள். அதைப் பூசி கொசுக்கடியிலிருந்து தப்பினர். கொசுக் கடி சரி.. கோஷ்டி கடி!?

மாநிலம் எதிர்க்கிறது; மத்தி அழைக்கிறது

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்,  ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே இருவருக்கும் அவரவர் மாநிலத்தில் பாஜக-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. இனியும் இவர்களை வைத்துத் தேர்தலை சந்தித்தால் மாநில அதிகாரத்தை தாரைவார்க்க நேரிடலாம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டதாம் டெல்லி. பேசாமல், இவர்களை மத்திய அமைச்சரவைக்குள் இழுத்து கவுரவம்(!) அளித்துவிட்டு, புதியவர்களை முதல்வர் வேட்பாளராக பிரகடனம் செய்தாலும் ஆச்சரியம் இல்லை!

மாஸ்டர் பிளான் மாயாவதி

இடைத் தேர்தல் வெற்றியை அடுத்து மாயாவதிக்கு நன்றி சொல்ல அவரது இல்லம்தேடி போனார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் . போகும்போதே தனது ஆஸ்தான போட்டோகிராபரையும் உடன் அழைத்துச் சென்றார் ஆனால், ”நீங்கள் இங்கேயே இருங்கள்” என போட்டோகிராபரை வெளியிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்களாம். அதேபோல், மாயாவதி - அகிலேஷ் சந்திப்பை படமெடுக்க மீடியாக் காரர்களையும் அனுமதிக்கவில்லையாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வரும் என்பதுபோல தோற்றம் உருவாகி... பின்னர் உடன்பாடு ஏற்படாமல் போனால் சிக்கல் என்பதாலேயே மாயாவதி வீட்டில் போட்டோ தடையாம்.

வட்டி தொழிலில் அண்ணன் பிஸி

அவ்வப்போது  தம்பிக்கு எதிராகவே அதிரடி கிளப்பும் தெற்கத்திப் புள்ளி கொஞ்ச நாட்களாக அமைதி காக்கிறார். அவரது வட்டாரத்தில் விசாரித்தால்,  “அண்ணன் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவாரு” என்கிறார்கள். உண்மையில் இப்போதைக்கு அரசியலைவிட வட்டித் தொழிலில்தான் அண்ணன் பிஸியாம்.   “மூணு வட்டிக்கு துட்டு ரெடி. ஆனா, குறைஞ்சது ஒரு  ‘சி’யாவது வாங்கணும்” என்கிறார்கள் தெற்கத்தித் தம்பிகள். 

அடுத்த விசில் பெங்களூரு வண்டிக்கு!

குக்கர் தலைவரை கட்சிக்குள் சர்வாதிகாரியாகச்  சித்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கட்சியினரிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக தடாலடி கிளப்புகிறாராம் இப்போதெல்லாம். ‘கார்’மோகர் ஐந்தே ஐந்து நிமிடம் மனம் திறந்து பேச நேரம் கேட்டாராம். அதற்கே நேரம் ஒதுக்கவில்லையாம். அந்த வெறுப்பெல்லாம் சேரத்தான் வண்டியைக் கிளப்பிவிட்டாராம். அடுத்து விசில் கொடுத்துக் கிளம்புவது பெங்களூரு வண்டியாக இருக்கலாம் குக்கர் கடை.

திகைப்பில் தியான யுத்த தலைவர்

“எதிர் முகாம் தலைவருடன் முதன்மை தலைவர் அடிக்கடி அலைபேசியில் கலக்கிறார். அதன் விளைவுதான் வரம்பு மீறி சொத்துச் சேர்த்ததாக உங்கள் மீது எதிர் முகாமிலிருந்து வழக்குப் போட்டிருக்கிறார்கள்” என்று தியான யுத்த தலைவரின் காதில் உளவுத்துறை விசுவாசிகள் ஊதிவிட்டார்களாம். திகைத்துப்போன தியான யுத்தத் தலைவர்,  “விவகாரத்தை டெல்லி நாட்டாமையின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்” என்கிறாராம் கொதிப்பாக!

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close