[X] Close
 

மெனோபாஸ் ... நோ டென்ஷன்!  


menopas

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Mar, 2018 15:24 pm
  • அ+ அ-

பூப்படைதல் எப்படி ஒரு சிறுமிக்கு  ஆரம்பத்தில் பயமும் பதற்றமும் தருமோ அப்படித்தான் மெனோபாஸ் என்பதும் பெண்களுக்கு ஒருவித பயத்தையும் கலக்கத்தையும் கொடுக்கின்றன. கொஞ்சம் புரிந்துகொண்டால், மெனோபாஸ் படபடப்பில் இருந்து விலகி, மிக எளிதாகக் கடக்கலாம். இனிதே வாழ்வைக் கழிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் தெரியுமே தவிர, மாற்றங்களை மனரீதியாக எப்படி எதிர்கொள்வது என்ற விவரங்கள் தெரிவதில்லை.  அல்லது இன்னும் போதவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.  

குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையிலிருந்து, உடலானது  விலகுவதன் ஆரம்பம்தான் மெனோபாஸ். குழந்தை உருவாக்கும் திறனை உடல், முடித்துக்கொள்ளும் தொடக்கம் தான் மாதவிடாய் நிற்றல். மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி நிற்பதில் தொடங்கும் இந்த மாற்றம் முழுமையடைய 10 ஆண்டுகள்வரை ஆகலாம்.

பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் ஏராளம். இதற்கான அறிகுறிகள் மாதவிடாய் நிற்பதற்கு முன்பாகவே  உணரத் தொடங்கிவிடுகின்றனர். தொடர்ந்து 12 மாதங்களுக்கு மாதவிடாய் ஏற்படாத போதுதான் அதை இறுதி மாதவிடாய் என்று கூறமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  

மாதவிடாய் நிற்பது இரண்டு விதங்களில் நிகழலாம். ஒரு பெண்ணுக்கு 42 வயது முதல் 45 வயதுக்கு இடைபட்ட காலத்தில் தொடங்கும் மாதவிடாய் நிற்றல் செயல்பாட்டு மாற்றங்கள், அடுத்த மூன்று முதல் பத்து ஆண்டுகளுக்குத் தொடரலாம்.

மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. இயற்கையான முறையில் மாதவிடாய் நிற்றல் ஏற்படும் சராசரி வயது ஐம்பது என்கிறார்கள். 40 வயதுக்கு முன்பாக மாதவிடாய் நிற்றல் ஏற்படுவது இயல்புக்கு மாறான முன்முதிர்ச்சி நிலை என்றுதான் மருத்துவம் பார்க்கிறது. அறுவைச்சிகிச்சை காரணமாகவும் மாதவிடாய் நிற்றல் நடைபெறும். கருப்பைநீக்க அறுவைச் சிகிச்சை அல்லது சினைப்பை நீக்க அறுவைச்சிகிச்சை  ஆகியவற்றாலும் இது நிகழ்கிறது.

கவனியுங்கள்!

மாதவிடாய் நிற்கும் நிலையில், அதாவது மெனோபாஸ் தருணத்தில்,  உடல் பல அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. இதில் முதன்மையானது மாதாமாதம் வரும் மாதவிலக்கு நிற்பது. சிலருக்கு திடீரென முற்றிலுமாக நின்று போகலாம். சிலருக்கு பல மாதங்கள் தள்ளிப் போகலாம். இந்தக் காலகட்டத்திலும் கருத்தரிக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு உண்டு என்பதுதான் சுவாரஸ்யம் என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதனால், கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஓராண்டுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுவது நல்லது. அதேபோல, கடைசி மாதவிலக்கு ஏற்பட்டதில் இருந்து ஆறு மாதத்துக்குப் பிறகு ஏதேனும் ரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

அடுத்து திடீரென உடல்சூடு பரவுதல் மற்றும் அடிக்கடி வியர்த்தல் என அறிகுறிகள் வரலாம். சிலருக்கு தலைவலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படலாம். முகம், கழுத்து, மார்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் என சூடு மற்றும் எரிச்சல் உணர்வு  அடிக்கடி இருந்துகொண்டே இருக்கும். பெண்ணுறுப்பில் ஈரத்தன்மை குறைந்து வறண்டு போகத்தொடங்குவது மற்றொரு பொதுவான அறிகுறி. இதனால், சிலருக்கு பாலியல் ரீதியான ஆர்வம் குறையலாம். ஒரு சிலருக்கு இருமும்போதும் தும்மும்போதும் சிறுநீர் கசிதல் ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் போவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படும்.

மூட்டு மற்றும்  தசைப் பகுதியில் வலி ஏற்படும். ‘ஆஸ்டியோபோரோஸிஸ்’என்னும் எலும்பு அடர்த்திக் குறைதல் நிலை ஏற்பட்டால், சிறு காயங்களுக்கே எலும்பு முறிவு ஏற்படும். இடுப்பு, கை, முதுகுத் தண்டு எலும்புகள்தான் பொதுவாக பாதிப்புக்கு உள்ளாகும் என்கிறார்கள் பெண் மருத்துவர்கள்.

இந்தக் காலகட்டத்தில் தான் இதயம் மற்றும் ரத்தநாளத் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுபோல, அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, சோகம் என்று என  எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் இந்தக் காலகட்டத்தில், பொறுப்புகள் அதிகரிப்பதால் உண்டாகும் மன அழுத்தத்துடன், இந்த உடலியல் மாற்றங்கள் கொடுக்கும் அசௌகரியங்களும் சேர்ந்து மாதவிடாய் நிற்கும் பெண்களின் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.  அதுவொரு  சோகத்தை, கவலையை உண்டுபண்ணும்.

உடலியல் மற்றும் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும் இந்தக் காலக்கட்டத்தில், நல்ல ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடித்தால், எந்த மாற்றங்களையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.

சத்தான சரிவிகித உணவுகள் எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம். கால்சியம் நிறைந்த உணவைச் சேர்த்துக்கொள்வது, முடிந்த அளவுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மனநிலையுடன் இருப்பது, மருத்துவர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களின் அறிவுரையைப் பெறுவது என எளிதாகவே இந்த கட்டத்தைப் பெண்கள் கடக்கமுடியும். கடப்பதும் எளிது.  

இன்னும் இருக்கு டிப்ஸ்!  

மெல்லிய காற்றோட்டமான உடைகளை அணியவும். பதட்டம் அடையாமல் இருந்தால் இந்த விளைவு தணிந்துவிடும் என்று அமைதியாக இருக்கவும். ரொம்பவே சிரமமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

குளிர்ந்த பானங்களைத் தவிர்க்கவும். அதேபோல், காபியோ டீயோ எதையும் ரொம்பவே சூடாக குடிக்காதீர்கள். காரமான உணவுகள் தவிர்த்துவிடுங்கள். தூக்கம் குறித்த சரியான நெறிமுறைகளைக் கடைபிடியுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபட, தூக்கமும் வந்துவிடும். துக்கமும் காணாமல் போய்விடும்.

பகலில் நல்ல உடல் உழைப்பு தருவது மாதிரியான வேலை செய்யுங்கள். மெனோபாஸ் காலகட்டத்தின் ஆரம்பம் தருகிற அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு, புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். அது கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி, எம்ப்ராய்டரிங்காக் இருந்தாலும் சரி... இந்தக் கற்றல்... உங்களைப் புதுமனுஷியாக்கும். உத்வேகத்துடன் வைத்திருக்கும்.

ஆகவே நோ டென்ஷன் ரிலாக்ஸ்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close