[X] Close

மூட் அவுட்டிலிருந்து தப்பிக்க நீங்க என்ன செய்வீங்க?- 10 பேர் சொன்ன 10 பதில்கள்


10-quick-ways-to-get-out-of-a-bad-mood

  • பாரதி ஆனந்த்
  • Posted: 14 Mar, 2018 12:52 pm
  • அ+ அ-

காலை அலுவலகத்துக்கு வந்ததும் பக்கத்து சீட்டிலிருந்த தோழியிடம் 'கலக்கலா வந்துருக்கியேன்னு' கேட்டேன்.. ஆமா..'மூட் அவுட்டான நான் இப்படித்தான் நல்ல ட்ரெஸ் பண்ணிப்பேன்' என்றாள். சற்றே வியப்பாக இருந்தது.


மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது, கிளைக்கு கிளை குரங்கு தாவும் வேகத்தைவிட அதிவேகமாக மகிழ்ச்சி, துன்பம், பயம், சந்தேகம், கோபம், பொறாமை, வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளையும் ஒரேநாளில் தொட்டுவிட்டுவந்துவிடும். அதனாலேயே என்னவோ வாரத்தில் 7 நாளும் நம்மில் பெரும்பாலானோர் 7 விதமாக இருக்கிறோம். 


சரி தோழி சொன்னதை ஒரு மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு எனக்குத் தெரிந்த சிலரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன். உங்களுக்கு ரொம்ப மூட் அவுட்டாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று அவர்களிடம் கேட்டேன். 

என்னைவிட 15 வயது இளைய பெண். இப்போதுதான் பணி புரியத்தொடங்கியிருக்கிறார். அவரிடம், உனக்கு ரொம்ப மூட் அவுட் ஆனா என்னம்மா செய்வ என்றேன்... நானா மேடம் நல்லா டான்ஸ் ஆடுவேன் இல்லைன்னா புத்தகம் படிப்பேன் என்றார்.


கடமையே கண்ணாக இருக்கும் என்னோட நண்பரிடம் கேட்டபோது, 'ரொம்ப சிம்பிள். என்னோட செல்ஃபோனை ஆஃப் பண்ணிவச்சிட்டு ஒரு லாங் ட்ராவலுக்கு கிளம்பிருவேன்" என்றார்.


எப்பவுமே கேஸுவலாக இருக்கும் ஒரு சின்னப்பையன்கிட்ட இதே கேள்வியைக் கேட்க, 'தூங்கிடுவேன்' என மந்திரம்போல் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்.


திடீர், திடீர்னு வெளியபோய் சாப்பிடுவோமான்னு ஒரு நண்பர் கேட்பார் அவரிடம் மூட் அவுட்டுக்கு என்ன செய்வீங்கன்னு கேட்க.. "நல்லா சாப்பிடுவேன். மேக்ஸிமம் அது பிரியாணியாக இருக்கும்" என்றார்.


இவர் கொஞ்சம் பக்குவப்பட்டவர்தான் என நினைக்கும் அளவுக்கு இருந்தது சக ஊழியர் சொன்ன பதில், "தனிமையில் மனதுடன் பேசுவேன்". அப்புறம் என்ன பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைத்துக் கொண்டேன்.


வயதில் கொஞ்சம் மூத்த ஆன்மிக நாட்டம் கொண்ட ஒருவர் மூட் அவுட்டை சமாளிக்க இன்ஸ்டன்ட்டாக 5 டிப்ஸ் வைத்திருந்தார். அவர் பட்டியலிட்டவை, "1.குடும்பத்துடன்
செலவழிப்பேன். 2.கமல் படம் பார்ப்பேன். 3.பழைய டி.எம்.எஸ். பாடல்கள், இளையராஜா பாடல்களை பாடுவேன். 3.வண்டியை எடுத்துக்கிட்டு குடும்பத்தோட எங்கேயாவது போயிருவேன். 4.பசங்களுக்குப் பிடிச்சதை வாங்கித் தருவேன். 5.சொந்த ஊருக்கு ஒருநாள் டக்குன்னு கிளம்பிருவேன். இதே ஆர்டரில்தானா என்பதை மட்டும்
கேட்கவில்லை; சரி அது அவர் வசதி என்பதால்.


என்னுடைய நலம் விரும்பிகளில் ஒருவரிடம் கேட்டேன். "செம்மையா தூங்குவேன். இல்லைன்னா ஒரு நல்ல படம் பார்ப்பேன்" என்றார்.

இன்னொரு சின்ன பொண்ணு "நல்லா சாப்பிட்டு தூங்கிருவேன்னு" சிரித்தார். 


இலக்கியவாதி ஒருவரிடம் கேட்டேன். பெரிதாக ஏதாவது சொல்வார் என்று நினைத்தேன், "மூடு அவுட்டானால் சூடா ஒரு டீ சாப்பிடுவேன் சரியாயிடும்" என்றார். சூட்டை சூட்டால் தணிப்பார் போல.


அந்தப் பையனுக்கு நல்ல குரல்வளம் அதனால கேள்வி கேட்கும்போதே பாட்டுபாடுவேன்னு சொல்வாரோ என்ற எதிர்பார்ப்போடு கேட்டேன், ஆனால் அவரோ பாட்டு கேட்பேன் என்றார். இதோ அவரது சாய்ஸ் "பெரும்பாலும் பாட்லகள் கேட்பேன்.. இல்லையென்றால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முயற்சிப்பேன். எதுவும் இல்லையென்றால் அமைதியாக பேஸ்புக், வாட்ஸ் அப் என்று பார்க்க ஆரம்பித்துவிடுவேன்" என ஒரு லிஸ்ட் போட்டார்.


இந்த நண்பர் எப்போதுமே எல்லாத்தையும் விரிவாக பேசுவார், எழுதுவார். அதேபோல் அந்த ஒரு கேள்விக்கும் விரிவாக பதிலளித்தார். "எதனால் மூட் அவுட் என்று யோசிப்பேன். சின்ன சண்டை, சாலையில் யாருடனாவது வாக்குவாதம் போன்றவை இருந்தால் அதை புறந்தள்ள பார்ப்பேன். மூச்சை பெரிதாக இழுத்து வெளியே கோபத்தை
தள்ளுவது போல் நினைப்பேன். பெரும்பாலான மூட் அவுட்கள் காரணமே இல்லாமல் இருக்கும். ஏன் இதற்கு நாம் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று நமக்குள் கேள்வி எழுப்ப வேண்டும். சில விஷயங்களை தயவு தாட்சண்யமின்றி அடித்து மனதை விட்டு துரத்தணும். சுய பட்சாதாபமும் மூட் அவுட்டுக்கு முக்கிய காரணம். அது கூடவே கூடாது. காரணமில்லாத ஈகோவும் மூட் அவுட்டை கொண்டு வரும் அதை இனங்கண்டு கண்டிப்பாக ஒதுக்க நினைப்பேன். ஏதாவது ஒரு வேலையை
இழுத்துப்போட்டுக்கொள்வேன். நல்ல நண்பர்களுடன் அரட்டை அடிப்பேன். நெகடிவ் எண்ணத்தை கூடியவரை புறந்தள்ள நினைப்பேன். எல்லாவற்றிற்கும் மேல் எம்ஜிஆர் பாட்டு கேட்பேன்" என்றார். 

சரி நமக்கு இனி மூட் அவுட் ஆனா இவரிடம் கவுன்சிலிங் பெற்றுக்கொள்ளலாம் என எண்ணவைத்தது அவரது பதில்கள்.


இப்படி நல்லா தெரிந்த 10 பேர் சொன்ன பதில்கள் 10 விதமாக இருந்தன. அடடே என்று சொல்லும் அளவுக்கும் இருந்தன.


சரி, சாதாரண மனிதர்களின் மூட் அவுட் சமாளிப்பு முயற்சிகள் இப்படி இருக்கிறதே. மனநல ஆலோசகர்களின் டிப்ஸ் என்னவென்று தெரிந்துகொள்ள முயன்றபோது. பிரபல மனநல ஆலோசகர்கள் சிலர் இணையத்தில் 10 டிப்ஸ் வழங்கியிருந்தனர்.


அவை:
1. குற்ற உணர்ச்சியை விலக்கி வையுங்கள்.
2. எதையும் ரொம்ப பெர்ஸனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
3. நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்த பணியை கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
4. மன அழுத்தத்தை தரும் விஷயங்களை திரும்பத்திரும்ப அசை போடாதீர்கள்
5. உங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள்
6. தோல்விகளைக் கண்டு எப்போதுமே அஞ்சாதீர்கள். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு அமைதியாக இருங்கள்.
7. உங்களுக்குப் பிடித்தவருடன் பேசுங்கள் அல்லது உங்கள் செல்லப் பிராணியுடன் விளையாடுங்கள்.
8. நீங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கும் ஐந்து பேரை அடையாளம் கண்டு நன்றி தெரிவியுங்கள்.
9. நல்லா சாப்பிடுங்க

10. தூங்க முயற்சி செய்யுங்க. நீண்ட தூக்கம்கூட தேவையில்லை. ஒரு 15 நிமிடம் தூங்கிப்பாருங்கள்.


மனநல ஆலோசகர்களின் டிப்ஸில் எனது நண்பர்கள் பின்பற்றும் சில பழக்கங்களும் இருந்ததைக் கண்டு வியப்பாகவே இருந்தது. எது எப்படியோ இந்த அவசர உலகத்தில் மூட் அவுட்களில் இருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வது நலம்.

-பாரதி ஆனந்த்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close