[X] Close

அதிகரிக்கும் ‘வெயிட்’ பெண்கள்! ’ஃபாஸ்ட் ஃபுட்’ ஆபத்து


weight-girls-and-fast-food

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Mar, 2018 14:56 pm
  • அ+ அ-

கையெழுத்து குண்டுகுண்டாக இருக்கலாம். நாமே அப்படி இருக்கிறோமே என்கிற வேதனைதான் இன்றைய தேதியில்... பெண்களின் ஆகப்பெரிய கவலை.     

திருமணத்திற்கு முன்பு வரை ஃபிட்டாக இருக்கும் பலர், பின் குண்டாகி விடுகிறார்கள். திருமணத்திற்கு பின் பலர் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டு கொள்வதில்லை மற்றும் போதிய உடற்பயிற்சிகளை தினமும் செய்வதில்லை என்கின்றன ஆய்வு முடிவுகள்.

‘ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள் யோசிக்க யோசிக்க பகீர் கிளப்புகின்றன.

 ஒபிஸிட்டி அதிகரிக்க, மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம்.  உணவில் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு  மாறிவிட்டன. மக்களும் மறந்துவிட்டார்கள். மருந்துக்குக் கூட அந்த உணவை எடுத்துக் கொள்ளாததால், மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இதில் குறிப்பாக, பெண்கள்.

 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பல நோய்களை இலவசமாக, டிப்ஸ் மாதிரி வழங்குகின்றன.

தூக்கமே வரலை!

உடல் எடை அதிகரிப்பதற்குப் பின்னால் மறைந்திருக்கும் மற்றொரு காரணம்... தூக்கமின்மை. உடலில் அழுத்தம் ஏற்படும் செயல்முறை தொடங்கி விடும். இதனால் உடலில் கொழுப்பு தேங்கி விடும். மேலும் தூக்கமின்மையால், பகலில் அதிகமாக நொறுக்குத் தீனிகளைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள். இது ஹார்மோன் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் பசி எடுக்கும்; பசி எடுக்காமலும் போகும். எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிறையாத உணர்வே ஏற்படும்.

மருந்துகள்

சில மாத்திரைகள் உடல் எடை அதிகரிப்பு மீது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரையோடு அந்த மருந்துகளை நிறுத்தினால், மீண்டும் பழைய எடைக்குத் திரும்பி விடுவீர்கள்.

ஹார்மோன்  கோளாறு

மருந்துகள் உண்ணுதல் மற்றும் இறுதி மாதவிடாயினால் ஹார்மோன் சமமில்லாத  நிலை ஏற்படலாம். இறுதி மாதவிடாயின் போது ஈஸ்ட்ரோஜென் சுரப்பதன் அளவு குறைந்து விடும். இதனால் வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்புகள் தேங்கி விடுகின்றன. உடல் எடை அதிகரிக்கும். குழந்தையைச் சுமக்கும் வயதில் பெண்களுக்கு ஏற்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (என்ற ஹார்மோன் பிரச்சினையாலும் கூட உடல் எடை அதிகரிக்கலாம்.

ஊட்டச்சத்து  குறைபாடு

வைட்டமின் டி, இரும்புச்சத்து அல்லது மெக்னீசியம்  முதலான ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் இல்லையென்றால் உங்கள் மெட்டபாலிச  சதவீதம் பாதிக்கப்படும் அல்லது ஆற்றல் திறனின் அளவு குறையும். இதன் விளைவாக, உடற்பயிற்சி செய்ய போதிய தெம்பு இருக்காது. இதனால் ஆற்றல் திறனை ஊக்குவிக்க அதிக இனிப்பு பலகாரங்கள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்ஸ் போன்றவற்றை நாடிச் செல்வீர்கள். இது ஒருகட்டத்தி,ல், மேலும் பல வியாதிகளை உருவாக்கவும் காரணமாகிவிடும்.

தைராய்டு தாண்டவம்

வளரிளம் பருவத்தினர் என்று சொல்லப்படும் டீன் ஏஜ் வயதினரின்  உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை ஏழு மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. தகுந்த மருத்துவ ஆலோசனை அவசியம். தவிர, மரபியல் ரீதியிலான பிரச்சினைகளும் உடல் பருமனுக்குக் காரணம் என்கிறார்கள் டயட்டீஷியன்கள்!

என்ன செய்ய வேண்டும்?

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள்... தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. முக்கியமாக, முளைகட்டிய பயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். .

எடையை கவனியுங்கள்!

கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக 8 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சி வேண்டி இந்நேரத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவால் அதிகரிக்கும் எடை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. என்றாலும், முடிந்தவரை மாதத்துக்கு 1 முதல் 2 கிலோவுக்கு மேல் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பிறகும், பாலூட்டும் காரணத்தால் எடுத்துக்கொள்ளும் அதிக உணவு, உடல் எடையைக் கூட்டுவது இயல்பு. ஆனால், இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.

கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்துக்குப் பிறகும் சரி, மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. பால் கொடுக்கும் பெண்களின் வீட்டைச் சேர்ந்தவர்கள், ‘பச்ச உடம்பு நல்லா சாப்பிடணும்’ என்று கூறி, தேவையான காய்கறி, பழங்களைவிட, தேவையற்ற நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றை அதிகம் கொடுப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்யவிட மாட்டார்கள். ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் சரிவிகித உணவிலும், தகுந்த உடற்பயிற்சியிலும்தான் இருக்கிறதே தவிர, தேவையற்ற உணவிலும், தேவைக்கு அதிகமான ஓய்விலும் இல்லை. இப்படி உணவுக் கட்டுப்பாடு அறுந்து போவதுடன், உடற்பயிற்சியும் இல்லாமல் போவதுதான் பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் உடல் எடை அதிகரிக்கக் காரணம் என்று எச்சரிக்கிறார் கள் பெண்கள் நல மருத்துவர்கள்.

உணவைத் தவிர்க்கலாமா?

அதிக உணவு எடுத்துக்கொள்வதால் மட்டுமல்ல, அந்தந்த வேளை உணவை ‘ஸ்கிப்’ செய்தாலும்கூட, அதாவது சாப்பிடாமல் இருந்தாலும் கூட,  ரத்த சோகை, ஒபிஸிட்டி வரக்கூடும். இளம்பெண்களில் அதிகமானோர் காலை உணவைத் தவிர்ப்பதால் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதனால், சாதாரண நோய் தொடங்கி குழந்தை பாக்கியம் இல்லாமை வரை பலவித பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

விருந்து உஷார்!  

திருமணமான புதிய தம்பதிக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் விருந்து கொடுக்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். ஒரே மாதத்தில் அந்த விருந்துகள் அனைத்திலும் கலந்து கொள்ளாமல், கொஞ்சம் தள்ளிப் போடலாம்.புதிதாக திருமணமானவர்கள் உணவில்  மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திருமணமான புதிதில் வீட்டில் இனிப்பு பலகாரங்கள் அதிகம் இருக்கும். அவற்றை அதிகமாக உட்கொண்டு, உடலைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். மாறாக காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

தினமும் உடற்பயிற்சி

எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு பின் உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டாம். ஒரு வாரம் அப்படி தள்ளிப் போட ஆரம்பித்தால், பின் உடற்பயிற்சி செய்வதில் சோம்பேறித்தனம் வந்து, பின் தொப்பையைப் பரிசாகப் பெற வேண்டியது தான்.

தொப்பையில் இருந்து விடுபடுவோம்; ’குண்டு’ வீசும் வார்த்தை நக்கல்களில் இருந்தும் விடுபடுவோம்!

 - வி.ராம்ஜி

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close