[X] Close

அதிக அளவில் வைட்டமின் ‘டி’ எடுத்துக் கொண்டால் கேன்சர் வாய்ப்பு குறையும்: புதிய ஆய்வில் தகவல்


vitamin-d-uses-and-effects-cancer-treatment

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 09 Mar, 2018 09:42 am
  • அ+ அ-

அதிக அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொண்டால் லிவர் கேன்சர் உட்பட பிற புற்றுநோய்களுக்கான வாய்ப்பு பெருமளவு குறைவதாக புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது. 

ஜப்பானைச் சேர்ந்த பன்னாட்டு ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் படி சிலவகை புற்றுநோய்களை வைட்டமின் டி தடுப்பதாகத் தெரியவந்துள்ளது. வைட்டமின் டி என்பது சூரிய ஒளியின் மருத்துவ நன்மைகளுடன் தொடர்புடையது நாம் அறிந்ததே.

வைட்டமின் டி என்பது உடலின் கால்சியம் அளவுகளை முறையாகப் பராமரித்து எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாகப் பரமாரிக்க உதவுகிறது. 

எலும்பு தொடர்பான நோய்களில் வைட்டமின் டி ஆற்றும் பயனுள்ள பங்களிப்பு நன்கு அறியப்பட்ட ஒன்று என்ற நிலையில் பிற நீண்ட நாள் நோய்களுக்கும், சிலவகை கேன்சர் நோய்களுக்கும் தடுப்புச் சுவராக வைட்டமின் டி செயல்படுவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 

ஆனாலும் வைட்டமின் டி சேர்க்கைகள் இனம், பிரதேசம் உள்ளிட்டவை பொறுத்து மாறுபடவே செய்யும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. 

எனவே வைட்டமின் டி என்பது மொத்தமான புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதில் சிறந்ததா அல்லது குறிப்பிட்ட உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பைக் குறைப்பதா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. 

இதற்காக 40-69 வயது 33,376 ஆண்கள் மற்றும் பெண்களை இது தொடர்பான ஆய்வில் ஈடுபடுத்தினர் ஜப்பானிய ஆய்வாளர்கள். 

ஆய்வின் ஆரம்பக்கட்டத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்கள் தங்கள் உணவுப்பழக்கவழக்கம், ரத்த மாதிரி தங்கள் மருத்துவ வரலாறு குறித்த விவரங்களை அளித்தனர். இதில் வைட்டமின் டி அளவும் பரிசோதிக்கப்பட்டது.

அப்போது கோடைக்காலத்தில் வைட்டமின் டி அளவு குளிர் காலத்தை ஒப்பிடும் போது அதிகமிருப்பது தெரியவந்தது. இந்த சீசன் சார்ந்த மாறும் தன்மைகளைக் கணக்கில் கொண்டு மாதிரிகள் 4 வகையாகப் பிரிக்கப்பட்டன. அதாவது குறைந்த வைட்டமின் டி முதல் அதிக வைட்டமின் டி அளவு என்று பிரிவுகள் பிரிக்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள் குறைந்தது 16 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர். இதில் 3,301 புதிய புற்றுநோய் சந்தர்ப்பங்கள் பதிவாகின. 

இந்த ஆய்வில் பல்வேறு காரணிகளையும் (அதாவது புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட) கணக்கிலெடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்ட போது வைட்டமின் டி அதிகமாக இருப்பது புற்றுநோய் வாய்ப்பை ஒட்டுமொத்தமாக குறைப்பது தெரியவந்தது. 

குறிப்பாக ஆண்களில் லிவர் கேன்சர் ரிஸ்க் என்பது வைட்டமின் டி அளவுகளினால் குறையும் வாய்ப்பு தெரியவந்தது. 

வைட்டமின் டி அளவுகள் புற்றுநோய் வாய்ப்புகளை குறைப்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை என்று கூறும் இந்த ஜப்பானிய ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகியுள்ளது.

- ஏஎன்ஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close