[X] Close

நலம் பெறுவோம்- 1: மூல நோயில் இருந்து மீள்வோம்


nalam-peruvom-piles

  • kamadenu
  • Posted: 02 Aug, 2018 12:59 pm
  • அ+ அ-

நாக்கைக் கட்டிப்போட்டுள்ள துரித உணவுகள், தூக்கத்தைகூட தவிர்த்து உலாவச் சொல்லும் இணையவெளி என மக்களின் வாழ்க்கை முறை இந்த வேகமான உலகத்தில் வேறு ஒரு வடிவத்தைப் பெற்றிருக்கிறது. அதற்கேற்ப மனிதர்களைத் தாக்கும் வியாதிகளும்கூட விதவிதமாக வந்து கொண்டே இருக்கிறது.

பெரும்பாலான நோய்களை நமது உணவுப் பழக்கவழக்கங்களாலும் உடற்பயிற்சிகளாலும் சரி செய்துவிடலாம் என்கிறது இயற்கை மருத்துவம். அதனால்தானோ என்னவோ நம் முன்னோர்கள் 'உணவே மருந்து' என்று அன்றே சொல்லிச் சென்றார்கள்.

சீரிய பழக்கவழக்கங்கள் இல்லாததால் மனிதர்களை அதிகமாகத் தாக்கும் சில நோய்கள் இருக்கின்றன. அத்தகையை நோயைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதோடு இயற்கை முறையில் அந்நோய்க்கு எப்படி சிகிச்சை பெறுவது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்தான் இந்தத் தொடரின் நோக்கம்.

இதற்கான மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார் அரசு சித்த மருத்துவ அலுவலர் பா.மாரியப்பன். 27 ஆண்டுகள் சித்த மருத்துவத் துறையில் அனுபவம் மிகுந்த மருத்துவர் மாரியப்பன் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களுக்கான சித்த மருத்துவ அலுவலராக இருக்கிறார். 15 ஆண்டுகளாக கொடக்கானல் அரசு மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ அலுவலராக அவர் இருந்திருக்கிறார். 

மதுரை, தேனி மாவட்டங்களில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுவருகிறார். பருவ நிலைக்கு ஏற்ப பொது மக்களுக்கு பொது இடங்களில் மூலிகை கஷாயங்களை வழங்குவது போன்ற பணிகளும் இவரது தலைமையில் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகளுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் பெண் மருத்துவரைக் கொண்டு யோகா பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார். இன்னும் பல மருத்துவ சேவைகளை செய்து வரும் மருத்துவர் பா.மாரியப்பன் தி இந்து குழுமத்தின் காமதேனு இணையதளத்துடன் இணைந்து மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

முதல் நோயாக மூல நோய் குறித்து மருத்துவர் பா.மாரியப்பன் கூறிய தகவல்கள்...

மூல நோய் ஏன் ஏற்படுகிறது?

ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவருக்கும் ஏற்படும் நோய் இது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

மூல நோயை மருத்துவத் துறையில் சுப்பீரியர் ரெக்டல் வெயின் (Superior Rectal Vein) ரப்சர் எனக் கூறுகிறோம். ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் தடுப்பு வால்வுகள் என எதுவும் அமையவில்லை. அதனால் இந்தக் குழாயில் அழுத்தம் ஏற்பட்டால் ரத்தம் தேங்கி வீங்கி விடுகிறது.

மலக்குடலில் உள்ள ரத்தக் குழாயான இந்த சுப்பீரியர் ரெக்டல் வெயின் முதலில் வீக்கம் கண்டு பின்னர் அதில் உராய்வு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. மூல நோயின் முதல் அறிகுறியே மலத்துடன் ரத்தம் வெளியேறுதலே. 
மூல நோய்களை 4 வகையாக பிரிக்கலாம். முதலாம் நிலையில், ஆசன வாயில் சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். இதை பைல் மாஸ் மூல முளை எனக் குறிப்பிடுகிறோம். நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். ரத்தப்போக்கு அதிகமாகும்.

மூலத்துக்கு முதல் மருந்து உணவு..
மூல நோயைப் பொருத்தவரை அதற்கு முதல் மருந்தே உணவுதான். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அதிகம் தண்ணீர் பருக வேண்டும். காய்கறிகள், கீரைகள், பழங்கள் உட்கொள்ள வேண்டும். நமக்கு மலச்சிக்கல் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மலசிக்கல் ஏற்பட்டால் கூடவே மூலமும் வந்துவிடும். அதிகக் காரமான உணவு, துரித உணவுகள், அசைவ உணவுகள் இவை மலச் சிக்கலை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இந்த உணவுகளை உட்கொள்வதில் சற்று கட்டுப்பாடு அவசியம்.

எனக்கு அசைவ உணவு சாப்பிடத்தான் அதிக விருப்பம் என்பவர்கள். அசைவ உணவு சாப்பிடுவதற்கு முன் காலை உணவிலேயே கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயம் சாப்பிடுவது நல்லது. அடுத்தமுறை நீங்கள் பிரியாணி சாப்பிட்டால் அதற்கு துணையாக வைக்கப்படும் தயிர்ப்பச்சடியைத் தவறாமல் சாப்பிட்டுவிடுங்கள். வெங்காயத்தில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

புகைப் பழக்கமும் மதுப் பழக்கமும் இன்னும் சில போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவதும்கூட மூல நோயை உண்டாக்கும்.

மூல நோய்க்கு சில மருந்துகள்..
சித்த மருத்துவத்தில் மூல நோய்க்கு திராட்சாதி குடிநீர், நிலவாகை சூரணம், திரிபலா சூரணம் ஆகிய அடிப்படை மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஒரு தேக்கரண்டி இந்தச் சூரணத்தை எடுத்து தண்ணீரில் கலந்து இரவு தூங்கச் செல்லும் முன் குடித்தால் இந்த நோய் குணமாகும்.

ஆனால், மலத்துடன் ரத்தம் வெளியேறுவதால் அதற்கு மூலம் மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. குடலில் புண் சில நேரங்களில் புற்றுநோய் காரணமாகக்கூட இவை நடக்கலாம். எனவே, மூல நோய் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலேகூட உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகள் வாயிலாக அதனை உறுதிப்படுத்தி அதன் பின்னர் மருந்துகளை உட்கொள்வதே நலம் சேர்க்கும்.

வெட்கம் தவிர்ப்போம்..
மூல நோயால் அவதிப்படுபவர்கள் பலரும் கடைசி நிலை மூல நோய் வந்தவுடன்தான் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆசன வாயில் ஏற்படும் நோய் என்பதால் அதை ஆரம்ப நிலையிலேயே மருத்துவர்களிடம் காட்ட வெட்கம் கொள்கின்றனர். அதுவும் குறிப்பாக பெண்கள் இதை அதிகமாக செய்கின்றனர். எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்துவது மிகவும் எளிது. நோயை முற்றவிட்டால் அது நோயாளிக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும். அதுவும் மூல நோய் முற்றிவிட்டால் இயல்பு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை விழுந்துவிடும். அதனால் வெட்கத்தைத் தவிர்த்து ஆரம்ப நிலையிலேயே மூலத்தை குணப்படுத்துதல் வேண்டும்.

நெறிப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கவழக்கம், ஆரோக்கியத்தைத் தரும் உடற்பயிற்சிகள், தாராளமாக தண்ணீர் பருகுதல், உடல் பருமனை கட்டுப்படுத்துதல் போன்றவை மூலம் ஏற்படாமல் தடுக்கும். மூலம் ஏற்பட்டுவிட்டால் ஆரம்ப காலத்திலேயே முறையான சிகிச்சை செய்து கொள்வது நலம் தரும்.

ஆரோக்கியம் பேணுவோம்.. ஆனந்தமாய் வாழ்வோம்!
 

தொடர்புக்கு: dsmomadurai@gmail.com

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close