[X] Close
 

சர்க்கரை நோயாளிகளைக் குறிவைக்கும் புற்றுநோய்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்


increased-cancer-risks-for-diabetics

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jul, 2018 13:24 pm
  • அ+ அ-

சர்கரை நோயாளிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதுவும் சர்க்கரை நோய் கொண்ட பெண்களுக்கு இதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் இன்ஸ்டிட்யூட் ஃபார் குளோபல் ஹெல்த் (George Institute for Global Health) என்ற ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரத்தப் புற்றுநோய், வயிறு, வாய், சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 47 ஆய்வுகளின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் டயபட்டாலஜியா என்ற மருத்துவ நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜ் இன்ஸ்டிட்யூட் ஃபார் குளோபல் ஹெல்த் ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட இந்த ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளரான ஒக்குஹோமா, "கேன்சரை ஏற்படுத்துவதில் சர்க்கரை நோயின் பங்கினை அதுவும் பாலினம் சார்ந்த பங்கினை மேலும் மேலும் ஆய்வு செய்ய இந்த தகவல்கள் அடித்தளமாக அமையும்.  
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரத்தப் புற்றுநோய், வயிறு, வாய், சிறுநீரகப் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக நாங்கள் முதன்முதலில் கண்டறிந்துள்ளோம்" என்றார்.

கடந்த 30 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருக்கிறது என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

பெண்களுக்கு ஏன் வாய்ப்பு அதிகம்?
சர்க்கரை நோய் கொண்ட பெண்களை ஏன் கேன்சர் தாக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை விளக்கிய ஆராய்ச்சியாளர் சான் பீட்டர்ஸ், "பெண்கள் ப்ரீ டயபட்டீஸ் என்ற ஒரு நிலையைக் கடக்கின்றனர். பெண்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக முதன்முதலில் கண்டறியும்போது அவர்களுக்குப் போதிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. ப்ரீ டயபட்டீஸ் ஸ்டேஜ் பொதுவாக இவர்களுக்கு சிகிச்சையற்ற நிலையாக அமைந்துவிடுகிறது. ஆனால், ஆண்களுக்கு சர்க்கரை நோய் அறிகுறி தெரிந்தவுடனேயே தீவிர மருத்துவம் தொடங்கிவிடுகிறது. இப்படி,  ப்ரீ டயபட்டீஸ் நிலையில் பெண்கள் மருத்துவம் செய்து கொள்ளாததும் கேன்சர் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கிறது" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close