[X] Close

ஆண்களுக்கு ஆடம்பரப் பொருட்கள் பிடிக்க ஹார்மோன்களே காரணம்!


higher-testosterone-levels-makes-men-desire-luxury-goods

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jul, 2018 13:14 pm
  • அ+ அ-

ஒரு ஆணுக்கு பெண் மீதோ இல்லை பெண்ணுக்கு ஆண் மீதோ ஈர்ப்புவர ஹார்மோன் காரணமாக இருக்கலாம் ஆனால் ஆணுக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசை அதிகம்வரக்கூட ஹார்மோன்களே காரணம் என்கிறது ஓர் ஆய்வு.

ஒரு ஆணுக்கு கேல்வின் க்ளெயின் ஜீன்ஸ் மீதோ அல்லது லீவைஸ் பிராண்ட் மீதோ அப்படி ஒரு அலாதி ஆர்வம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவருக்கு டெஸ்டோடீரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது என்று அர்த்தமாம்.
கோலின் கேமரர் என்பவரே இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.  

ஆடம்பரமான பொருட்களை வாங்கும் அதை பிறருக்கு காட்சிப்படுத்தும் மனிதர்களின் மனநிலையை இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது. ஆண் மயில்களில் சில குணநலன்களை மனிதர்களின் குணநலன்களுடன் இந்த ஆய்வு ஒப்பிடுகிறது.
ஒரு ஆண் மயிலுக்கு அவ்வளவு நீளமான தோகை என்பது ஒருவகையில் அசவுகரியம்தான். அந்த தோகை இல்லாவிட்டால் அதனால் எதிரிகளை எளிதாக சமாளிக்க முடியும். தோகையை ஆண் மயிலானது இணை சேர்வதற்கு சமிக்ஞை காட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. அப்படியென்றால் அது அதற்கு ஒரு காட்சிப்பொருள். இதை உயிரியலில் costly signaling என்பார்கள். இதைத்தான் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து காரை வாங்கும் ஓர் ஆண் சமூகத்துக்கு காட்சிப்படுத்த விரும்புகிறார்.

இந்த ஆய்வுக்காக, 18 முதல் 55 வயதுக்கு இடையாயான 243 ஆண்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்குமே ஒரு டோஸ் டெஸ்டோஸ்டீரான் வழங்கப்பட்டது. ஜெல் வடிவில் தோல் வழியாக ஊடுருவம் வகையில் ஹார்மோன் செலுத்தப்பட்டது. 4 மணி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் என்ன மாதிரியான பொருட்களை வாங்க விரும்புகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

ஒரு ஸ்லைடர் அவர்கள் முன் வைக்கப்பட்டது. அதன் அருகே டாப் 10 பிராண்ட் பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த பிராண்டுகளில் அவர்கள் எதை வாங்க விரும்புவார்கள் என ஸ்லைடரை நகர்த்திக் காட்டுமாறு சொல்லப்பட்டது. அப்போது டெஸ்டோடீரான் செலுத்தப்பட்ட ஆண்கள் அனைவருமே இருப்பதிலேயே காஸ்ட்லியான பிராண்டையே தேர்வு செய்துள்ளனர்.
இதேபோல் கார், சன் கிளாஸ் போன்ற பொருட்களுக்கான விளம்பரங்கள் சிலவற்றை ஒளிபரப்பி அவற்றை ரேட் செய்ய செய்துள்ளனர். ஹார்மோன் செலுத்தப்பட்ட ஆண்கள் அனைவருமே பிராண்டட் பொருட்களையே தேர்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் கோலின் கேமரர், "விலங்குகளைப் போல் ஆண்களும் தங்கள் ஆதிக்கத்தை எப்போதுமே நிரூபிக்கத் துடிக்கின்றனர். ஆனால், ஆண்களின் ஆயுதம் விலங்குகளைப் போல் நகமும், பற்களும் அல்ல மாறாக அவர்கள் பயன்படுத்தும் வாகனமும், உடுத்தும் உடையும், வசிப்பிடமுமே. எனவேதான் ஆணுக்கு ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசை அதிகமாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close