[X] Close

வெயிலைத் தவறவிடாதீர்கள், வைட்டமின்-டி அவசியம்!


medical-facts-of-sunlight

  • Team
  • Posted: 02 Mar, 2018 09:06 am
  • அ+ அ-

பனிக்காலம் ஏறத்தாழ முடிந்து வெயில் காலம் தொடங்கவிருக்கிறது. மாறிவிட்ட சுற்றுச்சூழல் காரணமாக இந்தியாவில் கோடையின் வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. அதனால் இங்கு வெயிலுக் குப் பஞ்சமிருக்காது. ஆனால், இத்தனை வெயில் இருந்தும் இங்குதான் வைட்டமின் டி பற்றாக்குறை அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

“நம் நாட்டில், பிறந்த குழந்தைகள் தொடங்கி, பள்ளிக்குச் செல்லும் வயதுள்ளோர், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் அம்மாக்கள், முதியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் வைட்டமின் - டி3 பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்” என்கிறது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அகச்சுரப்பியல் துறை மருத்துவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வு.

வெயிலுக்கும் வைட்டமின் - டிக்கும் என்ன தொடர்பு? நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான முக்கிய வைட்டமின்களில் இலவசமாக ஒரு வைட்டமின் கிடைக்கிறது என்றால், அது வைட்டமின் - டி3தான். ‘கொலிகால்சிஃபெரால்’ என்பது அதன் வேதிப்பெயர்.

வெயிலில் வைட்டமின் கிடைப்பது எப்படி?

சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் உள்ளன. நம் சருமத்துக்கு அடியில் உள்ள கொழுப்பு செல்களில் ‘எர்கோஸ்டீரால்’ எனும் கொழுப்பு உள்ளது. இதனுடன் புற ஊதாக்கதிர்கள் - பி வினைபுரியும்போது, ‘கொலிகால்சிஃபெரால்’ உற்பத்தியாகிறது. இப்படித்தான் வைட்டமின் - டி3 நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

இது கிடைப்பதற்கு வெண்ணிறச் சருமம் கொண்டவர்கள் தினமும் சுமார் 20 நிமிடம் நேரடி வெயிலில் இருந்தால் போதும். கறுமை நிறச் சருமம் கொண்டவர்கள் 40 நிமிடம் நேரடி வெயிலில் இருக்க வேண்டும். கடுமையான கோடையில், 15 நிமிடம் வெயிலில் இருப்பதும் குளிர் காலத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் நம் சருமத்தில் வெயில்பட வேண்டியதும் பொதுவான ஆலோசனைகள்.

எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவை. நாம் சாப்பிடும் உணவிலிருந்து கால்சியத்தை உறிஞ்சு வதற்கு வைட்டமின்-டி அவசியம். இதன் தேவை எலும்புகளோடு நிற்கவில்லை. இது இதயத்துக்குத் தேவைப் படுகிறது. சிறுகுடல், சிறுநீரகம், கணையம், மூளை எனப் பலதரப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் தேவைப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு இது மிகவும் அவசியம்.

நம் ரத்தத்தில் வைட்டமின் - டி3யின் அளவு 30 நானோகிராம் / மில்லி லிட்டர் எனும் அளவைவிட அதிகமாக இருந்தால், அது இயல்பானது. இதற்குக் குறைந்தால், வைட்டமின் - டி3 பற்றாக்குறை உள்ளது என்று பொருள். நம் நாட்டில் பத்தில் 7 பேருக்கு வைட்டமின் - டி3 பற்றாக்குறை உள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தப் பற்றாக்குறை ஏற்பட்ட ஒருவருக்குக் கை, கால் குடைச்சல், உடல் சோர்வு, எலும்பு வலி, மூட்டு வலி எனும் சாதாரண தொல்லைகளில் தொடங்கி, ரிக்கெட்ஸ், எலும்பு வலுவிழப்பு நோய், எலும்பு முறிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய், கருத்தரிப்பில் பாதிப்பு என ஆபத்தான நோய்கள் வரை எதுவும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது அதே ஆய்வு.

பற்றாக்குறைக்கு என்ன காரணம்?

வெயிலே நுழையாத மாடி வீடுகளிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகங்களிலும் முடங்கிக்கிடக்கும் இன்றைய வாழ்க்கை முறைதான் இதற்கு முக்கியக் காரணம். முன்பெல்லாம் பகலில் வெளியில் செல்ல சைக்கிள், ரிக்சா, ஸ்கூட்டர் போன்ற வாகனங் களைத்தான் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். இப்போதோ பெருநகரங்களில் வாடகை கார் வசதிகளை எளிதாகப் பெறமுடிவதால், வெளியில் செல்வதற்கு நான்கு சக்கர வாகனங்களையே அதிகம் பயன் படுத்துகின்றனர். இதனால், உடலில் வெயில் படுவதற்கான வாய்ப்பு இல்லாமலே போகிறது. மேலும், இப்போது இரவுப் பணிச்சூழல் அதிகரித்துவிட்டதால், பலருக்கும் சூரியனை வாரத்துக்கு ஒருமுறை பார்ப்பதே வியப்புக்குரிய விஷயமாகிவிட்டது.

அடுத்தது நம் உணவுமுறை. வளர்ந்துவரும் இன்றைய இளைய தலைமுறை ஆரோக்கிய இந்திய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கொழுப்பு மிகுந்த மேற்கத்திய உணவுகளையும், நேரமின்மை எனும் காரணம் காண்பித்து, வீட்டு உணவுகளை ஓரங்கட்டிவிட்டு, அலுவலக உணவக உணவுகளையும், நொறுக்குத்தீனி எனும் பெயரில் சக்கை உணவு களையும் விரும்பி உண்கிறார்கள். இதனால், இளம் வயதிலேயே உடற்பருமன் வந்து அவதிப்படுகின்றனர். இவர்கள் ஒரு மணி நேரம் வெயிலில் நின்றாலும் தேவையான அளவுக்கு வைட்டமின் - டி3யைப் பெறுவதற்கு உடல் அமைப்பு இடையூறாக இருக்கிறது.

விளையாட்டும் உடற்பயிற்சியும் இல்லாத வாழ்க்கைமுறை அடுத்த காரணம். குழந்தைகள் என்றில்லாமல் வயதுவந்தவர்களும் வெயிலில் வியர்க்க வியர்க்க விளையாடியது அந்தக் காலம். இப்போதோ விளையாட்டுத் திடல்களில் விளையாடும் பழக்கத்தைத் தொலைத்துவிட்டு, அலைபேசிகளிலும் கணினி களிலும் விளையாடுவது நாகரிகமாகிவிட்டது. பெண்களோ, வீட்டு வாசலில் கோலம் போடுவதற்குக்கூட மாடியிலிருந்து இறங்குவதில்லை. மாலை வேளைகளில் கோயில், பூங்கா என்று குடும்பத்துடன் வெளியில் சென்றது அந்தக் காலம். இப்போதோ பகலானாலும் இரவானாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குடும்பமே மூழ்கிப்போகிறது. இந்த நிலைமையில் இவர்கள் உடலில் வெயில் படுவதற்கு வாய்ப்பு குறைகிறது.

இது கடைசிதான் என்றாலும் முக்கியம். இந்தியர் களுக்கே உரித்தான அடர்த்தியான கறுப்புச் சருமம் சூரிய ஒளிக்கு ஒரு தடுப்பணை கட்டுவது ஒருபுறமிருக்க, நாகரிகத்துக்காகப் பெண்கள் அழகுசாதனப் பொருட்களை உடலில் அள்ளிப் பூசிக்கொள்வதும், அவர்கள் அணியும் சில ஆடை அலங்காரங்களும், உடலில் படும் சிறிதளவு சூரிய ஒளியையும் தடுத்துவிடுகின்றன.

 

என்ன செய்ய வேண்டும்?

இலவசம் என்றால், ஓடிச்சென்று பெறக்கூடிய சமுதாயம் இது. ஆனால், வைட்டமின்- டி3யைப் பொறுத்தவரை, நாட்டில் சாமானிய மக்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் இந்த வைட்டமினைப் பெறத் தவறி, உடல் ஆரோக்கியம் கெட்டு, பல விதங்களில் வேதனைப் படுகின்றனர்.

அந்த வேதனைகளைக் குறைக்க, மாத்திரைகளிடம் தஞ்சம் அடைவதைவிட தினமும் அரை மணிநேரம் வெயிலுக்கு வாருங்கள். பகல் 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வைட்டமின் -டி3யைப் பெறுவதற்கான நல்ல நேரம். காலை அல்லது மாலையில்தான் வெளியில் வர நேரம் இருக்கிறது என்றால், குறைந்தது ஒரு மணி நேரம் அதற்கு ஒதுக்குங்கள். அப்படியும் வெளியில் வரமுடியாத முதியோர், உடல் நலன் குறைந்தவர்கள் காளான், மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல் பால், தயிர், சீஸ், ஆரஞ்சுச்சாறு ஆகியவற்றைச் சாப்பிடுங்கள். பருத்தித் துணிகளையே அணியுங்கள். தளர்வான ஆடைகள் நல்லது. அடர் நிறங்களைத் தவிர்க்கலாம்.

பொதுமக்களிடம் வைட்டமின் - டி3 பற்றாக்குறை நீடித்தால், உலக சுகாதார நிறுவனம் அதை ஒரு தேசியப் பிரச்சினையாக்கும். அப்போது பிரச்சினை யைத் தீர்க்க நாம் அருந்தும் பாலிலும், சாப்பிடும் தானிய உணவுகளிலும் வைட்டமின்- டி3யைக் கலப் பதற்கு அரசு தயாராகிவிடும். ஏற்கெனவே, சமையல் உப்பில் அயோடின் கலந்ததற்கே நாட்டில் இன்னமும் எதிர்ப்பு இருக்கிறது. வைட்டமின்-டி3க்கும் இந்த நிலைமை ஏற்பட வேண்டுமா? அதை இப்போதே தடுக்கலாம் அல்லவா?

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close