[X] Close

பீரியட் பாவர்டி என்றால் என்ன தெரியுமா?


is-india-suffering-from-period-poverty

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 May, 2018 13:56 pm
  • அ+ அ-

யுனிசெஃப் அமைப்பும் வாட்டர் எய்ட் என்ற அமைப்பும் இணைந்து தெற்காசியாவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின்படி, தெற்காசியப் பள்ளிகளில் உள்ள பெண்குழந்தைகளில் 3-ல் ஒரு குழந்தை மாதவிடாயின்போது பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக் கொள்வது தெரியவந்துள்ளது.

அப்படி அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க முக்கியக் காரணம், சுகாதாரமான கழிவறை வசதியும் சேனிட்டரி பேட்கள் வசதியும் இல்லாததே. மேலும், மாதவிடாய் குறித்து உரிய விழிப்புணர்வுக் கல்வி குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படாததும் இதற்கு ஒரு காரணம் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இத்தகைய நிலைதான் 'பீரியட் பாவர்டி' (Period poverty)  என அழைக்கப்படுகிறது. நிதிப்பற்றாக்குறையால் சானிட்டரி உபகரணங்களும் கழிவறை வசதியும் இல்லாத பிராந்தியங்கள் பீரியட் பாவர்டி பிராந்தியங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.

உலக சுகாதார மையம், தெற்காசியாவுக்கென சில அளவுகோல்களை நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு 25 பெண் குழந்தைகளுக்கும் ஒரு கழிவறை என்ற வீததில் கழிவறைகள் அமைக்கப்பட வேண்டும்.
மாதவிடாய் சுகாதாரத்தை பொது சுகாதார பிரச்சினை என்றும் மனித உரிமைகள் விவகாரம் என்றும் ஐ.நா., சபை பட்டியலிட்டிருந்தாலும் உலகம் முழுவதும் 1.2 பில்லியன் பெண்கள் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்..
"பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை இருக்கிறது. ஆனால், சுகாதார சிக்கல்களுக்காக அவர்கள் பள்ளிப் பாடத்தை தவறிவிட நேர்ந்தால் அது கல்வி உரிமைக்கு எதிரானதாக அமையும். ஒவ்வொரு பள்ளியிலும் சுத்தமான தண்ணீர், சுகாதாரமான கழிவறைகள் இருப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும்.
பல்வேறு நாடுகளிலும், மாதவிடாய் தொடர்பாக பல கட்டுக்கதைகள் கூறப்படுவதாலும் பள்ளிகளில் மனம் திறந்த விவாதங்கள் நடைபெறுவதில்லை என்பதாலும் மாதவிடாய் குறித்து ஒரு பெண் குழந்தைக்கு விழிப்புணர்வே இல்லாமல் போகிறது. அதுவும் குறிப்பாக இந்தியாவில் குறிப்பாக 71% பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்தும் வரும் மாதவிடாய் குறித்து எதுவும் தெரிவதில்லை. இவ்வாறு வாட்டர் எய்ட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் வெய்ன் ரைட் கூறுகிறார்.

எதை உணர்த்துகிறது இந்த அறிக்கை
யுனிசெப்பின் இந்த ஆய்வறிக்கை அரசு அமைப்புகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மாதவிடாய் சுகாதாரம் பேணுதல் என்பதை மருத்துவக் கொள்கையாக அரசு அறிவித்து இது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும்.

பேட்மேன் போன்ற படங்களும், #YesIBleed போன்ற பிரச்சாரங்களும் சிறியளவில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினாலும் இந்தியாவில் 60% பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு செல்வதில்லை என்றும் 80% பெண் குழந்தைகள் வீட்டில் தயாரிக்கப்படும் துணி நேப்கின்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close