[X] Close
 

உடலுக்கு இரும்புச் சத்து ஏன் பிரதானம்?


top-7-reasons-why-your-body-needs-iron-rich-foods

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 May, 2018 12:21 pm
  • அ+ அ-

மனித உடலுக்கு இரும்புச் சத்து ஏன் அவ்வளவு அவசியமாகிறது தெரியுமா? ஒரு மனிதரின் ஒட்டுமொத்த உடல்நலத்தையும் பேண மிக முக்கியமான தாதுப் பொருளாக இரும்புச் சத்து இருப்பதே அதற்குக் காரணம். நமது உடலில் உள்ள பெரும்பாலான இரும்புச் சத்து சிவப்பணுக்களில்தான் இருக்கிறது. சிவப்பணுக்களே உடலில் இருந்து ஆக்ஸிஜனை நுரையீரலுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கின்றன.

இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் சோர்வு, தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், சருமம் வெளிறிப்போய்க் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் ரத்தசோகைக்கானது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரையும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும்தான் இரும்புச் சத்துக் குறைபாடு அதிகம் பாதிக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

இரும்புச் சத்து குறைபாடு எப்போது எல்லாம் ஏற்படும்?

1. அனீமியா இருக்கிறதா?

உங்கள் ரத்த சிவப்பு அணுக்களில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாவிட்டால் அனீமியா ஏற்படும். இதன் காரணமாக உடலின் செல்களுக்கும் திசுக்களுக்கும் போதிய அளவு ஆக்ஸிஜன் சென்றடையாமல் போய்விடும். அப்போது ரத்த சோகை ஏற்படும். ரத்தசோகையால் சோர்வு, மயக்கம், கவனச்சிதறல் ஆகியன ஏற்படலாம். இதேபோல், பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் அனீமியா ஏற்படும். அதேபோல் நாள்பட்ட அல்சர், குடலிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல் போன்ற காரணங்களாலும் ரத்தசோகை ஏற்படலாம்.

2. உடற்பயிற்சி

விளையாட்டு வீராங்கனைகள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றனர். ஆண்களைவிட பெண்களுக்கு உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல கூடுதலான சிவப்பு அணுக்கள் தேவைப்படுவதாலேயே பெண்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது அவர்களுக்கு ரத்தசோகை ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது.
 
3. டயாலிஸிஸ்

சிறுநீரக டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் எரித்ரோபோய்ட்டீன் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள்தான் உடல் சிவப்பு அணுக்களை உருவாக்க வேண்டும் என்ற சமிக்ஞையைப் பிறப்பிக்கிறது. எனவே, சிறுநீரக கோளாறு ஏற்பட்டால் கூடவே ரத்தசோகையும் தொற்றிக் கொள்கிறது. அதேபோல் டயாலிஸிஸ் செய்யும்போதும் சிவப்பு அணுக்கள் வீணாகின்றன. 

4. பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் அனீமியா ஏற்படும். கர்ப்பப்பைக் கோளாறுகள், மாதவிடாய் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஹார்மோன் தொந்தரவுகளை உடனடியாக கவனித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

5. கர்ப்பக்கால அனீமியா

கர்ப்பக்காலத்திலும் பாலூட்டும்போதும் அனீமியா ஏற்படுகிறது. எனவே கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களும் தினமும் 27 மி.கிராம் அளவு இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும் அளவில் உணவுவகைகளை உட்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது சிசு தாயின் உடலில் இருந்து இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த இரும்புச் சத்து குழந்தைக்கு பிறந்த 6 மாதங்கள் வரை போதியதாக இருக்கிறது. எனவே, பிரசவித்த தாய்மார்கள் அடுத்த 6 மாதங்களுக்கு இரும்புச் சத்து நிரம்பிய உணவை உட்கொள்ள வேண்டும்.

6.ரத்த இழப்பு
சிலர் அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கம் கொண்டவராக இருக்கலாம். அப்படி ரத்ததானம் செய்பவர்கள் தொடர்ந்து இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
 
7,கவனச் சிதறல்..
கவனச் சிதறல் மற்றும் அது சம்பந்தமான குறைபாடுகள் இருந்தால் இரும்புச் சத்து மிக்க உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்பு மற்றும் ஃபெரிட்டின் அளவு குறைவாக இருந்தா ஏடிஹெச்டி என்ற நோய் ஏற்படுகிறது. ஃபெரிட்டின் என்பது இரும்புச் சத்தை தேக்கிவைக்கும் வேதிப்பொருளாகும்.

மேற்கூரிய காரணங்களால் ஒருவருக்கு ரத்தசோகை ஏற்படலாம். எனவே, ரத்த சோகை ஏற்படாத வகையில் உணவைத் திட்டமிடுதலும் ரத்த சோகை ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது பெரிய உபாதைகளில் இருந்து நம்மை தற்காக்கும்.

[X] Close