[X] Close

நீங்கள் அடிக்கடி தண்ணீர் அருந்துபவரா?- இதைப் படியுங்கள்


drinking-too-much-water-can-cause-complications-say-doctors

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 May, 2018 14:00 pm
  • அ+ அ-

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அமிர்தத்துக்கே இப்படி என்றால், வெறும் தண்ணீருக்கு என்னவென்று யோசித்துப் பாருங்கள். அளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சுதான் என விளக்குகின்றனர் மருத்துவர்கள்.

வெயில்காலம் வந்துவிட்டாலே நாம் அனைவரும் முதலில் செய்வது சற்று அதிகமாக தண்ணீர் குடிப்பதுதான். அது நல்லதே. ஆனால், அளவுக்கு அதிகமாகக் குடித்தால் என்னவாகும். விளக்குகிறார்கள் மருத்துவர்கள்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள சோடியம் அளவு குறையும். மூளை வீக்கம் ஏற்படும். அதுவும் குறிப்பாக வயதானவர்களுக்கு அதிகத் தண்ணீர் ஆபத்தானது எனத் தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ)-வின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால், "ஓவர்ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து அதிகரிப்பு ஒருவித மயக்கநிலையை ஏற்படுத்தும். அதிகமாக நீர் அருந்துவதால் உடலில் உள்ள உப்புச் சத்தும், எலக்ட்ரோலைட்டுகளும் கரைந்துவிடும்.

ஒருவர் சரியான அளவில் தண்ணீர் அருந்தினால் அவரது சிறுநீர் வைக்கோல் நிறத்திலோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலோ இருக்கும். ஆனால், சிறுநீர் வெள்ளையாக இருந்தால்தான் ஆரோக்கியம் என சிலர் தவறான புரிதல் கொண்டுள்ளனர்.

உங்கள் சிறுநீர் நிறமற்றதாக இருந்தால், நீங்கள் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் அருந்துகிறீர்கள் என்று அர்த்தம்.
இயல்பாக ஒருவர் நாள் ஒன்றுக்கு 10 டம்ப்ளருக்கு மேல் தண்ணீர் அருந்துவது நல்லதல்ல. சில நேரங்களில், தனிநபரின் உயரம், உடல்பருமன், உடற்பயிற்சி முறைகளின்படி தண்ணீர் உட்கொள்வதன் அளவு மாறுபடலாம்" என்றார்.

ஓவர் ஹைட்ரேஷன் அறிகுறிகள் என்னென்ன?
ஓவர் ஹைட்ரேஷன் ஏற்பட்டால் வாந்தி, தலைவலி, மனக்குழப்பம், மனநிலையில் அடிக்கடி மாறுபாடுகள் ஆகியன ஏற்படும். எப்படி டீஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை உடனே கவனித்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறோமோ அதேபோல் ஓவர்ஹைட்ரேஷனுக்கும் சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தசைகள் வலுவிழக்கலாம், வலிப்பு ஏற்படலாம், மயக்கம் ஏற்படலாம் ஏன் கோமாவுக்குக்கூட செல்லலாம்.

அதேபோல் ஹைபோநேட்ரிமியா (Hyponatremia) என்ற சோடியம் குறைபாடு ஏற்படலாம். Hyponatremia என்றால் ரத்தத்தில் சோடியம் அளவு குறைவதாகும். நமது உடலில் உள்ள செல்களைச் சுற்றியிருக்கும் தண்ணீரின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சோடியம் உதவுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடித்தால் செல்கள் வீக்கமடைகின்றன. செல் வீக்கம் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஹைபோநேட்ரிமியா வேறு சில காரணங்களாலும்கூட ஏற்படலாம். இதயம், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள். நாள்பட்ட வயிற்றோட்டம், ஹார்மோன் மாற்றங்களால்கூட ஹைப்போநேட்ரிமியா ஏற்படலாம். ஆனால், எதனால் ஹைபோநேட்ரிமியா ஏற்பட்டது என்பதை சரியாகக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை வழங்க வேண்டும்.

சரியான இடைவெளியில் தண்ணீர் அருந்தவும்..
"உணவுக்குப் பின் அதிகமான அளவு தண்ணீர் அருந்தக்கூடாது. இதனால் ஜீரன மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகும். ஜீரனத்தை உந்தும் என்சைம்கள் கரைந்துவிடும். ஜீரனக் கோளாறு ஏற்படும். அதிகப்படியான தண்ணீர் சிறுநீரக் கற்களைக்கூட ஏற்படுத்தும். சரியான இடைவெளியில் தண்ணீர் அருந்த வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதய நோய் பாதிப்புள்ளவர்களல் அளவுக்கு அதிகமான ஃப்ளூயிட்களை உட்கொள்ள முடியாது. அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படியே தண்ணீர் அருந்த வேண்டும்" எனக் கூறுகிறார் க்யூஜிஆர் ஹெல்த் சிட்டியின் நெஃப்ராலஜி மற்றும் கிட்னி ட்ரான்ஸ்ப்ளான்ட் துறை இயக்குநர் மருத்துவர் ஜிதேந்திர குமார்.

மற்றுமொரு மருத்துவர் கவுரவ் ஜெயின், "அதிகமாக தண்ணீர் அருந்துவது நிச்சயம் உடல்நிலையை பாதிக்கும். உங்கள் உடலின் தண்ணீர் தேவையைப் புரிந்துவைத்துக் கொள்ளுதல் நல்லது. உடல் எடையில் ஒவ்வொரு 15 கிலோவுக்கும் 1 லிட்டர் தண்ணீர் அவசியம். இதன் அடிப்படையில் தண்ணீர் அருந்துங்கள்.

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் ப்ளூயிட்ஸில் 50% வெறும் தண்ணீராகவும் 50% பழங்கள், பால், காய்கறிகள் ஆகியனவற்றில் இருந்து பெறப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இப்படி தண்ணீர் அருந்தினால் நம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close