[X] Close

இருதயம் காப்போம்: இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன்?


heart-attack-risk-factors

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 May, 2018 16:32 pm
  • அ+ அ-

இளம் வயதில் மாரடைப்பால் மரணம் அடையும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்? பொதுவாக மாரடைப்பில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மதுரை ராஜாஜி அரசுப் பொது மருத்துவமனை இதய நோய் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர்.ஜோசப் சில முக்கியமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாரடைப்பு என்றால் என்ன?
இதய தசைகளுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது.  இதனால் இதயத்தின் அத்தசைப் பகுதி உணவும், ஆக்சிஜனும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.

இளம் வயதில் மாரடைப்பு வருவது ஏன்?
இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன. ஒன்று பரம்பரை தாக்கம், இரண்டாவதாக சிறுவயதில் ஏற்படும் சர்க்கரை நோய் (ஜுவனைல் டயபெடிக்) மூன்றாவதாக பிறவியிலேயே ஏற்படும் இருதய வளர்ச்சி குறைபாடுகள்.

ஜுவனைல் டயபெடிக் நோயாளிகள் சர்க்கரை அளவை எப்போதுமே கண்காணித்து கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். 16, 18 வயதுடைய ஜுவனைல் டயபெட்டிக் நோயாளிகளுக்குக் கூட மாரடைப்பு ஏற்படுகிறது.

இதேபோல், உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜங்க் ஃபுட் உணவு வகையறாக்களை அறவே ஒதுக்குவது இதயத்துக்கு நல்லது. இன்று பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களே சிகரெட்டுக்கும் கல்லூரி பருவத்திலேயே மதுபோதைக்கும் அடிமையாகிவிடுகின்றனர். சிகரெட்டும், மதுவும் மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும். இத்தகைய லைஃப்ஸ்டைலை விட்டொழிப்பது நல்லது. அதிலும், இன்றைய கால கட்டத்தில் பெண்களும் சிகரெட் புகைக்கிறார்கள். சிகரெட்டுக்கு ஆண், பெண் பேதமெல்லாம் தெரியாது. அதை யார் புகைத்தாலும் மாரடைப்புக்கு அதிக வாய்ப்பிருக்கிற்து என்பது மட்டுமே உண்மை.

பரம்பரையாக மாரடைப்பு ஏற்படும் ரிஸ்க் ஜோனில் இருப்பவர்கள் இதய செய்லபாடு குறித்து குறிப்பிட்ட கால இடைவேளையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பெற்றோர் கவனம் தேவை..
உங்கள் குழந்தைகள் அடிக்கடி நெஞ்சுவலி என்று சொன்னால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. அவ்வப்போது வரும் அந்த வலி மாரடைப்புக்கான ஆரம்பகால அறிகுறியாகக்கூட இருக்கலாம்.

இதயம் காக்கும் உணவு வகைகள்:
அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.
அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.
தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.
எண்ணெய் விஷயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்துங்கள். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாரேயாவின் மகன் வைஷ்ணவ் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 21.

அண்மைக்காலமாக இப்படி இளம் வயதில் மாரடைப்பால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close