[X] Close

பெர்சனல் டாக்டர்: உங்கள் ஃபோனில் இந்த ஆப் இருக்கிறதா?


personal-doctor-app

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 May, 2018 14:44 pm
  • அ+ அ-

ஆண்ட்ராய்டு போன்களின் உலகில் எல்லாமே ஆப் (app) மயமாகிவிட்டது. அதற்கேற்ப நாம் அனைவரும், பஸ், ரயில், விமான டிக்கெட், உணவு, சமையல் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் என எல்லாவற்றையும் அதற்கு தகுந்த ஆப்களை டவுன்லோட் செய்துகொண்டு இருக்குமிடத்திலேயே பெற்றுக்கொள்ளும் நுகர்வோர் ஆகிவிட்டோம்.

அதேவேளை, மருத்துவம் செய்துகொள்ள வேண்டும் என்றால் மட்டும்தான் மருத்துவமனைக்கு நேரடியாகச் செல்கிறோம். அதற்குக்கூட காத்திருக்கப் பொறுமையில்லாமல் நம்மில் பலரும் மருந்துக்கடைகளுக்குச் சென்று காய்ச்சலுக்கு, சளித் தொல்லைக்கு, தலைவலிக்கு, வயிற்றுவலிக்கு, அரிப்புக்கு என சில சாதாரண நோவுகளுக்கு மருந்துகளை வாங்கி உட்கொள்கிறோம்.

மருந்துக்கடைகளில் மருந்துகளை எடுத்துக் கொடுப்பவர்களை நம்பி சுய வைத்தியம் செய்துகொள்வது ஆபத்தானது. இதைப் பலமுறை அரசாங்கமும் அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், எல்லா நேரமும் ஒரு சிறிய ஆலோசனைக்குக்கூட மருத்துவமனைக்குச் சென்று மணிக் கணக்கில் காத்திருக்க முடியாது. சில நேரம், நாம் மருத்துவமனை வசதி இல்லாத இடத்தில் சிக்கிக் கொள்ளலாம். பாஷை தெரியாத ஊருக்குச் சென்றிருக்கும்போது உபாதை ஏற்பட்டால் என்ன செய்வது? 

இத்தகைய சூழல்களில் தற்காலிக நிவாரணம் அளிக்க திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஜி.ரமேஷ்குமார் ஒரு அப்ளிகேஷனை தயார் செய்திருக்கிறார். ரமேஷ்குமார், திருப்பூர் தாயம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றுகிறார். பொது அறுவை சிகிச்சை நிபுணரும்கூட. இந்த ஆப் மூலம் மருத்துவ ஆலோசனை பெற கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப் குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட மருத்துவர் ரமேஷ்குமார், "மருத்துவ வசதியை உடனடியாகப் பெற இயலாத இடத்திலோ சூழலிலோ இருப்பவர்களுக்கு உடனடி மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவின் வடிவமே பெர்சனல் டாக்டர் ஆப். இந்த ஆப்பை எனது நண்பர் வடிவமைத்துக் கொடுத்தார்.
நான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறேன். அங்கு வரும் சிலர் குறிப்பாக பெண்கள் சில நோய்களை முற்றவைத்து வருவார்கள். கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதா/ என்றால் இதை எப்படிச் சொல்வது என்று விட்டுவிட்டேன் என்பார்கள். 

இந்தத் தயக்கம் கிராமப்புற பெண்களுக்கு மட்டுமல்ல நகர்ப்புற பெண்களில் சிலருக்கும்கூட இருக்கிறது. அந்த மாதிரியான தயக்கம் கொண்டவர்கள் இந்த ஆப் மூலம் பயன்பெறலாம்.

உதாரணத்துக்கு தொடை இடுக்கில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட பெண்ணோ ஆணோ பெரும்பாலும் இதை அவ்வளவு எளிதாக மருத்துவர்களிடம் காண்பித்து சிகிச்சை பெறுவதில்லை. மருந்துக்கடையில் சொல்லி ஏதாவது மருந்து, களிம்பு வாங்கிப் பூசி பின் அது ரொம்பவும் முற்றிய பிறகு மருத்துவரிடம் செல்வார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளில் உள்ளோர் பெர்சனல் டாக்டர் ஆப் மூலம் தங்கள் உபாதைகளை, நோய் அறிகுறிகளைக் கூறினால் அடிப்படை மருந்துகளை அவர்களுக்குப் பரிந்துரைக்க முடியும். சாதாரண தொற்று என்றால் உடனே சரியாகவிடும். சற்று தீவிரமானதாக இருந்தால் அதை நிச்சயம் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் காட்டி மருந்து பெறுவதே சிறந்தது. இந்த ஆலோசனையைத்தான் நான் வழங்குகிறேன்.

எனது பெர்சனல் டாக்டர் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்பவர்கள், அதன் வாயிலாக தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உபாதையைத் தெரிவித்தால் ஒரு மணி நேரத்துக்குள் இமெயில் மூலம் பதில் அளித்துவிடுகிறேன். வேலை நேரத்தில் பதில் அளிக்கமுடியாவிட்டால் அன்றைய தினத்துக்குள் அவர்களுக்கு மெயில் அனுப்பிவிடுகிறேன். ரத்த பரிசோதனை அறிக்கை, ஸ்கேன் அறிக்கை போன்றவற்றை இணைத்து ஆலோசனை கேட்பவர்களுக்கு சற்று கூடுதல் தகவலை என்னால் கொடுக்க முடிகிறது.

ஒருவேளை அந்த அறிக்கைகளின் அடிப்படையில் நோய் சற்று தீவிரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகிறேன்.
இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,285 பேர் டவுன்லோட் செய்துள்ளனர். இதை நிறைய பேருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு" என்றார்.

ஆப்பை டவுன்லோடு செய்ய:

https://play.google.com/store/apps/details?id=srinivas.personal.doctor

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close