[X] Close
 

நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்கும் தேயிலை: கேன்சர் சிகிச்சையில் முக்கிய கண்டுபிடிப்பு


nanoparticles-from-tea-leaves-destroy-lung-cancer-cells

வலமிருந்து இடமாக கடைசியில் நிற்பவர் மருத்துவர் சுதாகர் பிச்சைமுத்து. | படம் உதவி: பிபிசி

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 May, 2018 09:11 am
  • அ+ அ-

நுரையீரல் புற்றுநோய் செல்களை தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்கள் மூலம் அழிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு கேன்சர் சிகிச்சையில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

லண்டனில் உள்ள ஸ்வான்ஸீ பல்கலைக்கழகம், திருச்செங்கோட்டில் உள்ள கேஎஸ்ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை செய்துள்ளன.

இந்தக் குழுவானது தேயிலையிலிருந்து பெறப்படும் குவாண்டம் துகள்களை வைத்து புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறது. குவாண்டம் என்பது மனித தலைமுடியின் அகலத்தில் 4,000ல் ஒரு பகுதியாகும். 
இந்த குவாண்டமானது, புற்றுநோய் செல் சுவர்களின் நானோ துளைகளுக்குள் புகுந்து அவற்றை அழிக்கும். அதாவது புற்றுநோய் செல்கள் பெருக வேண்டும் என்ற செய்தியை வைத்திருக்கும் டிஎன்ஏவை தேடி அழித்து, அந்த வகை செல் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி அழிக்கின்றன. இது அபோப்டோஸிஸ் (apoptosis) என்று அழைக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் மக்களை அதிகம் பாதிக்கும் 4 வகையான புற்றுநோயில் நுரையீரல் புற்றுநோய் மிக முக்கியமானதாக இருக்கிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர் 6 மாதங்களில் இறந்து விடுகின்றனர். 6.5% பேர் மட்டுமே 5 வருடங்கள் வரை வாழ்கின்றனர். எனவே, இந்தக் கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் அது மருத்துவத் துறையில் மிகப் பெரிய புரட்சியாக அமையும்.

திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியர்:
இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றோரில் முக்கியப் பங்காற்றியவர் மருத்துவர் சுதாகர் பிச்சைமுத்து. இந்த ஆய்வு குறித்து அவர் கூறும்போது, "தேயிலையில் இருந்து குவாண்டம் துகள்களைப் பெற நாங்கள் முயற்சித்ததற்கு முதல் காரணம் கையடக்க விலையே. செய்ற்கையாக உருவாக்கப்படும் குவாண்டம் துகளானது ஒரு மைக்ரோகிராம் 250 பவுண்ட் முதல் 500 பவுண்ட் வரை உற்பத்தி செலவை ஏற்படுத்துகிறது. ஆனால், தேயிலையில் இருந்து இயற்கையாக பெறப்படும் குவாண்டம் துகள் ஒரு மைக்ரோகிராம் 10 பவுண்ட் என்ற செலவிலேயே உற்பத்தி செய்துவிட முடியும். அதுமட்டுமல்லாமல், இந்த தேயிலை குவாண்டம் கேன்சர் செல்களை சுற்றியிருக்கும் நல்ல செல்களை அழிப்பதில்லை. 

இந்த தேயிலை குவாண்டம் துகள் சிகிச்சையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். இப்போதைக்கு மிகமிக குறைந்த அளவிலேயே நாங்கள் இதை ஆய்வுக்கூடத்தில் தயாரித்திருக்கிறோம். இதையே பெரிய அளவில் தொழிற்சாலையில் தயாரிக்க வேண்டுமானால் அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். எல்லாம் சரியாக நடந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மனிதர்களுக்கு பரிசார்த்த முறையில் இந்த சிகிச்சையை அளிக்கலாம். 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சையானது உலகம் முழுவதும் எளிதாகக் கிடைக்கக்கூடியாதாகிவிடும்" என்றார்.

குவியும் பாராட்டு:
மிகக் கொடிய நோய்க்கும் மிக அரிய மருந்தை கண்டுபிடித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற மருத்துவர் சுகாதாகர் பிச்சைமுத்துவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

[X] Close