[X] Close

நிபா வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?- தமிழக பொது சுகாதார துறை விளக்கம்


nipah-virus-scare-and-government-guidelines

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 18:19 pm
  • அ+ அ-

நிபா வைரஸிடமிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் பொது சுகாதார இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

நிபா வைரஸ் (N1V) கடந்த சில தினங்களாக இந்தியாவை குறிப்பாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நோயாக இருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்கி 6 பேர் இறந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்கியுள்ளதை உறுதி செய்துள்ள மத்திய அரசாங்கமும் மருத்துவக் குழு ஒன்றை கேரளாவுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. 

அண்டை மாநிலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக மக்கள் நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தமிழக பொது சுகாதார இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:
1. நிபா வைரஸ் ஓரிடத்தில் பரவிவிட்டால், அந்தப் பகுதியில் உள்ள நோய் வாய்ப்பட்ட பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகி இருந்தால் நிபா வைரஸ் தங்களுக்குப் பரவாமல் அவர்கள் தற்காத்துக் கொள்ளலாம்.
2. பழங்கள், காய்கறிகளை உண்ணும் முன் அவற்றை நன்றாக தண்ணீரில் கழுவ வேண்டும்.
3. வவ்வால்கள், பறவைகள் கடித்த பழங்களை உட்கொள்ளக்கூடாது.
4. மூளைக் காய்ச்சல், இன்ப்ளூவென்சா வைரஸ் தொற்று ஆகிய பாதிப்புகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் நிபா வைரஸிடமிருந்து அந்த நோயாளியை தற்காத்துக் கொள்ளலாம். இத்தகைய தொற்று உள்ளவர்களை நிபா வைரஸ் எளிதில் தாக்கும்.
5. இந்த நோயைக் கட்டுப்படுத்த வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். வனங்களில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கும் இந்நோய் பரவுகிறது.
6. பொதுமக்களிடம் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்துவது அவசியம்.
7. நம்பகத்தன்மை வாய்ந்த ஆய்வுக்கூடங்களில் மட்டுமே நிபா வைரஸ் நோய் தாக்கம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
8. நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் கால்நடைகளிடமும் நோய் அறிகுறி தென்படுகிறதா என ஆய்வு செய்வது அவசியம். வீட்டு வளர்ப்பு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் வெகுவாகப் பரவுகிறது.
9. நோய் தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவது அவசியம். 
10. ஆரம்ப கட்டத்திலேயே நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வது இறப்பு விகிதத்தை குறைக்கும்.

அறிகுறிகள் என்னென்ன?
நிபா வைரஸ் ஒருவரைத் தாக்கிவிட்டால் 5 முதல் 14 நாட்களுக்குள் இந்நோய்க் கிருமி மனித உடலில் முழுவீச்சில் வளர்ந்துவிடுகிறது. 
நோய் தாக்கிய மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சல், தலைவலி ஏற்பட்டுவிடும்.
அடுத்தக்கட்டமாக எப்போதும் ஒருவித அரைதூக்க நிலை ஆட்கொள்ளும்.
நோய் வீரியமாக தாக்கிய 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் நோயாளி கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்.
சில நோயாளிகளுக்கு ஆரம்ப நிலையில் வெறும் சுவாசக் கோளாறு மட்டுமே ஏற்படும். பின்னர் அதிதீவிர நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும்.
நோய் முற்றிவிட்டால் அடிக்கடி வலிப்பு ஏற்படும்.
கோமா செல்லும் நோயாளிகளில் பலர் உயிரிழக்க நேரிடும்.

சிகிச்சை என்ன?
நிபா வைரஸிடமிருந்து மனிதர்களைக் காக்க தடுப்பூசிகள் என ஏதுமில்லை. தடுப்பு மருந்துகள் இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். உடனடியாக நோயாளியை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது மட்டுமே சாத்தியமானது. சிகிச்சை அளிக்கும்போதும் போதிய தற்காப்பு உபகரணங்களை மருத்துவர்களும் செவிலியர்களும் பயன்படுத்துவது அவசியம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close