[X] Close
 

கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்: எங்கிருந்து வந்தது? என்ன செய்யும்?


nipah-virus-scare

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 May, 2018 09:13 am
  • அ+ அ-

கேரள மாநிலத்தை சமீபமாக ஒரு கொடிய நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நோய் தாக்கப்பட்டு கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் 10 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்க்கொல்லி நோயாக இருக்கும் இந்த 'நிபா' வைரஸ் எங்கிருந்து பரவியது இந்நோயின் வீரியம் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:

நிபா வைரஸ் 1998, 1999 ஆண்டுகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதன்முதலில் இந்தக் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்டறியப்பட்டார். அதன் காரணமாகவே இவ்வகை வைரஸுக்கு நிபா வைரஸ் எனப் பெயரிடப்பட்டது. நிபா வைரஸ் கிருமியானது மனிதர்களின் மூளையத் தாக்குகிறது. நிபா வைரஸ் என்செஃபாலிட்டிஸ் எனும் மூளைக் காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது. ஹெபினாவைரஸ் என்ற இனத்தைச் சேர்ந்த பேரமிக்ஸோவிரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த வைரஸின் (ஆர்.என்.ஏ) ரைபோ கரு அமிலம்தான் இந்த நிபா வைரஸ். இது ஹெண்ட்ரா வைரஸ் எனப்படும் வைரஸ் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

எப்படிப் பரவுகிறது நிபா வைரஸ்?
பழம் தின்னி வவ்வால்கள், பறக்கும் வவ்வால்கள் முதலான உயிரினங்கள்தான் நிபா வைரஸின் இருப்பிடமாக உள்ளது. வவ்வால்களின் சிறுநீரில் இருந்தும், மலத்திலிருந்தும், உமிழ் நீரிலிருந்தும், விந்தணு நீரிலிருந்தும் இந்த வைரஸ் பரவுகிறது. வவ்வால்களிடமிருந்து வீட்டு வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை, ஆடு, குதிரை மற்றும் பன்றி முதலான விலங்குகளுக்கும் பரவுகிறது. அந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. 

மலேசியாவில் வனங்கள் அழிக்கப்பட்டபோது இருப்பிடத்தை இழந்த வவ்வால்கள், கிராமங்களுக்குள் புகுந்தன. அவற்றின் மூலம் ஊரில் இருந்த பன்றிகளுக்கு இந்த நோய்க்கிருமி தொற்றிக்கொண்டது. பன்றிகளின் வசிப்பிடத்தைச் சுத்தம் செய்யும் போது இந்த நோயானது மனிதர்களுக்கும் பரவியது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் போதிய முன்னெச்சரிக்கையுடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மருத்துவருக்கும் நோய்த் தொற்றுகிற வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், நோயாளியின் ரத்தம் போன்ற மாதிரிகளைக் கையாளும் லேப் ஊழியர்களும் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கை இல்லாவிட்டால் நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

நிபா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன?
காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா பின்னர் மரணம் என நோய் தாக்கிய சில நாட்களிலேயே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. இந்த நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் என்று ஏதும் இல்லை. அதேபோல், நிபா வைரஸூக்கான சிகிச்சை என்று குறிப்பிட்டுச் சொல்லும் சிகிச்சையும் இதுவரை கண்டறியப்படவில்லை.

மனிதர்களுக்கு இந்த நோய் தாக்கப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டால் 70% மரணம் நிச்சயம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

[X] Close