[X] Close

கால்வாசி புற்றுநோய்க்கு காரணமே தெரிவதில்லை


cancer-has-no-reason

  • kamadenu
  • Posted: 01 May, 2018 10:53 am
  • அ+ அ-

மரண வலி… இது புற்றுநோய்க்கே உரித்தான வலியின் மொழி. மாத்திரை, மருந்து, ஊசி என எதற்கும் கட்டுப்படாத கொடுமையான வலி புற்றுநோய் தரும் துயரம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் புதிதாக ஏதாவது ஒரு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; 2020-ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.).

ஏன் இந்த நிலை?

பல காரணங்கள்! முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நாட்டில் பதின்பருவத்திலிருந்தே பலரும் புகைபிடிக்கத் தொடங்குவதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. நிகோடின், தார், அமோனியா, பீனால், கார்பன் மோனாக்ஸைடு, பாலிசைக்ளின் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்…. இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுகள் சிகரெட்டில் உள்ளன.

இரும்புத் துருபோல் இவை உடல் செல்களை உறுத்திக்கொண்டே இருப்பதால், அங்குள்ள மரபணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் செல்கள் தங்கள் இயல்பான வளர்ச்சிப் படிகளைக் கடந்து, வரம்பு மீறிய வளர்ச்சிக்கு உள்ளாகி, புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. நுரையீரலில் புற்றுநோய் வருவது இப்படித்தான்.

பாக்கில் உள்ள நச்சுகள் வாய், நாக்கு, கன்னம், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் குடியேற ஏற்பாடு செய்கின்றன. குடிக்கும் மதுவின் நச்சுகள் கல்லீரல், இரைப்பை, குடல், மலவாய் ஆகியவற்றில் புற்றுநோயைக் குடிவைக்கின்றன.

முன்பெல்லாம் வெயிலில் உழைத்துக் களைத்த பெண்கள் நீராகாரம், மோர்; ஆண்கள் பனைமரத்திலிருந்து இறக்கப்பட்ட சுத்தமான கள், பதநீர் ஆகியவற்றைக் குடித்து உடல் அலுப்பைக் குறைத்துக்கொண்டனர்.

இன்றைக்கோ உழைத்தாலும் உழைக்காவிட்டாலும், சாமானியர்களுக்கு ‘டாஸ்மாக்’ சரக்கை வயிற்றில் இறக்கினால்தான் உறக்கம் வருகிறது. மத்தியமர்களுக்கு ‘மாலை நேரக் கேளிக்கை விருந்து’களுக்குச் செல்வது வழக்கமாகிவருகிறது. இதனால், புற்றுநோய் எனும் கொடிய நோய்க்குக் கொண்டாட்டம் கூடிவிட்டது.

கடந்த அரை நூற்றாண்டில் நாட்டில் உணவுச் சந்தை பெரிய மாற்றம் கண்டுள்ளது. வீதி தோறும் பன்னாட்டு உணவுக் கடைகள். நம் பாரம்பரிய உணவுக் கடைகளையோ தேட வேண்டியுள்ளது. சில்லி பரோட்டாக்களின், சிக்கன் மஞ்சூரியன்களின் அந்நியச் சுவைதான் நமக்குப் பிடிக்கிறது. இதனால் இரைப்பை, குடல், மார்பு ஆகிய இடங்களில் புற்றுநோய் வருகிறது.

மேற்கத்திய நவீன உணவுகள் அனைத்தும் செயற்கை நிறமூட்டிகள், மணமூட்டிகள், இனிப்பூட்டிகள் போன்றவற்றால் தயாரிக்கப்படுபவை. நார்ச்சத்து இல்லவே இல்லை.

வைட்டமின்கள் ரொம்பவும் குறைவு. இவற்றில் உள்ள அனிலின், ஆக்சைம், அமைட் போன்ற ரசாயனங்கள் நம் மரபணுக்களைச் சிதைக்கும் விஷங்கள். இதனால், பெருங்குடலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. பி.டி. விதைகள், பி.டி. பயிர்கள், பூச்சிக்கொல்லிகள்/ களைக்கொல்லிகள் எல்லாமே நம் மண்ணை மட்டும் அழிக்கவில்லை; மனிதர்களையும்தான்.

இன்று, நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் மரணங்களைவிட உடற்பருமனால் விளையும் மரணங்களே அதிகம். நம் உணவுக் கலாச்சாரம் சிதைந்துபோனது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம். நம் உயரத்துக்குப் பொருத்தமற்ற வகையில் கூடும் எடையானது புற்றுநோய்க்கோ, நீரிழிவுக்கோ மாரடைப்புக்கோ விதை போடுகிறது.

புற்றுநோய் ஏற்படுவதற்கு வம்சாவளியும் ஒரு காரணம்தான். பெற்றோர், உற்றார் உறவினர்களில் யாருக்காவது புற்றுநோய் வந்திருக்குமானால், அவர்கள் வம்சத்தில் பிறப்பவர்களுக்கும் புற்றுநோய் வருகிற வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. மொத்தமுள்ள புற்றுநோய்களில் 4% இந்த வழியிலேயே வருகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஏற்கெனவே இருந்த சாதாரணக் கட்டிகள் புற்றுக் கட்டிகளாக மாற வாய்ப்புண்டு. வயதான காலத்தில் புற்றுநோய் வருவது இந்த வழியில்தான். சூரிய ஒளியின் புற ஊதாக்கதிர்கள் உடலுக்குள் அதிக நேரம் தங்கும் அளவுக்கு வெயிலில் அலைந்தால், சருமப் புற்றுநோய் வருவதுண்டு.

எக்ஸ் கதிர்வீச்சு, அணுக்கதிர் வீச்சு காரணமாக ரத்தப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அணு உலை எதிர்ப்புகளுக்கு இதுதான் காரணம். நிக்கல், ஈயம், பித்தளை, இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களைத் தயாரிக்கும் தொழிலாளி

களுக்கு சருமப் புற்றுநோய் வருவதற்கும், அமிலம், சாயம், ரப்பர், பென்சீன், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற ரசாயனங்களைத் தயாரிக்கும் தொழிலாளிகளுக்கு நுரையீரல், குரல்வளை ஆகியவற்றில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

கடைசியாக ஒன்று. கால்வாசி புற்றுநோய்களுக்குக் காரணமே தெரிவதில்லை என்பதுதான் இன்றைய மருத்துவ உலகம் எதிர்கொள்ளும் சவால்!

உடலில் தோன்றும் கட்டிகள் எல்லாம் புற்றுநோய் ஆவதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்! அவற்றில் பெரும்பாலானவை கொழுப்புக் கட்டிகள், நீர்க்கட்டிகள், சருமச் சுரப்புக் கட்டிகள் என்று சாதாரணக் கட்டிகள்தான். இவை எந்தக் கெடுதலும் செய்வதில்லை. சில கட்டிகளைத் தவிர, மற்றவற்றை உடனடியாக அகற்றப்பட வேண்டிய அவசியமும் இல்லை. அதே நேரம், புற்றுக்கட்டி அப்படியில்லை. உடலுக்குப் பல வழிகளில் கெடுதல் செய்யும்; அருகிலுள்ள திசுக்களைப் பாதிக்கும்; உடலில் பல இடங்களுக்குப் பரவி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.

மரண வலி, மரண பயம் எனும் கொடுந்துயரங்களைக் கொடுக்கும். ஆனாலும், கொஞ்சம் கவனமாக இருந்தால், புற்றுக் கட்டிகளையும் கட்டுப்படுத்தலாம். எப்படி? அது அடுத்த வாரம்.

வேண்டாமே!

சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தை நாமாக வரவழைத்துக்கொள்ளும் செயல். 100 கிராம் சாக்லேட் 540 கலோரி தருகிறது. இது ஐந்து இட்லி சாப்பிடுவதற்கு சமம். இதில் 50 கிராம் சர்க்கரைஉள்ளது. இது ஐந்து கரண்டி வெள்ளைச் சர்க்கரையை அப்படியே வாயில் போடுவதற்குச் சமம். இதில் 30 கிராம் கொழுப்பு உள்ளது. ‘சிக்கன் லெக் பீஸ்’ ஒன்று சாப்பிடுவதற்குச் சமம். இன்றைய குழந்தைகளுக்குப் பல்சொத்தை, உடற்பருமன், நீரிழிவு போன்றவை ஏற்படுவதற்கும் அதிகரிப்பதற்கும் சாக்லேட் ஒரு முக்கியக் காரணம்.

சாக்லேட்டில் உள்ள கஃபீன், மத்திய நரம்புகளைச் சிதைத்து இதயப் படபடப்பு, பதற்றம், விரல் நடுக்கம், ஒற்றைத் தலைவலி, மனச்சோர்வு, தூக்கமின்மை, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சினைகளைக் கொண்டுவரும். கர்ப்பிணிகளுக்குக் குறைப்பிரசவம் ஆவதற்கும் குழந்தை குறைவான எடையில் பிறப்பதற்கும் சாக்லேட் காரணமாகலாம். தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்கள் சாக்லேட் சாப்பிட்டால், குழந்தைக்கு அடிக்கடி மலம் போகும்.

அடுத்ததாக, தியோபுரோமின். இது உணவுக்குழாய் வால்வை சிதைத்துவிடும். இதனால் அடிக்கடி நெஞ்செரிச்சல் தலைதூக்கும். வயிற்றுப்புண் வரத் தொடங்கும். இதிலுள்ள ஆக்சலேட், சிறுநீரகக் கல்லை வெற்றிலைப்பாக்கு வைத்துக் கூப்பிடும்.

பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, மார்பகப் புற்றுநோய் வராமல் தற்காத்துக்கொள்ள தன் இருபக்க மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்ட செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன் 37 வயதில் அவர் இத்தகைய ‘வருமுன் காக்கும் சிகிச்சை’யை மேற்கொண்டதன் பின்னணியில் இருந்த மருத்துவக் காரணம் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகப்படுத்தியது.

ஏஞ்சலினா ஜோலியின் தாயார் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பத்து வருடங்கள் கடுமையாகப் போராடி, 2007-ல் இறந்தார். இதனால் எச்சரிக்கை அடைந்த ஏஞ்சலினா ஜோலி, ‘ஸ்கிரீனிங்’ எனப்படும் முன்னறிதல் பரிசோதனைகளை அடிக்கடி செய்துவந்தார். அப்போது, அவருக்கு ‘பி.ஆர்.சி.ஏ.1&2’ மரபணுக்களில் குறைபாடு இருந்தது தெரியவந்தது.

‘பி.ஆர்.சி.ஏ. 1&2 மரபணுக்களில் குறைபாடு காணப்பட்டால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க்கு 90% வாய்ப்பும், சினைப்பை புற்றுநோய் வருவதற்கு 50% வாய்ப்பும் உள்ளன. இதனால், ஏஞ்சலினா, ‘வருமுன் காக்க’ மார்பகங்களை அகற்றும் அறுவை சிகிச்சையையும், அதைத் தொடர்ந்து மார்பக மறுசீரமைப்பு சிகிச்சையையும் (ப்ரெஸ்ட் ரீகன்ஸ்ட்ரக்‌ஷன்) மேற்கொண்டார்

-டாக்டர் கு. கணேசன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close