[X] Close

மனச்சோர்வைப் போக்கும் மந்திரம்!


health-article-by-dr-ganesan

  • kamadenu
  • Posted: 26 Apr, 2018 12:56 pm
  • அ+ அ-

நீரிழிவுநோயுடன் சிறுநீரகத்தின் செயல்பாட்டையும் இழந்து தவிக்கும் சித்தாளுக்கு வாரம் ஒருமுறை டயாலிசிஸ் செய்ய எத்தனை காலம்தான் வசதிப்படும்? சாலையோரக் கடைகளில் கண்டதையும் சாப்பிட்டு ஆட்டோ ஓட்டுபவருக்கு, இதயத்தில் மூன்று குழாய்களும் அடைத்துவிட்டது என்றால், அந்த அடைப்பை நீக்க ஸ்டென்ட்டோ, பைபாஸோ எது செய்தாலும் அவர் உயிர் மீளும்தான்.

ஆனால், அதற்கு மூன்று லட்ச ரூபாயை எங்கிருந்து கொண்டுவருவார்? ‘புகை உயிருக்குப் பகை’ என்று எத்தனை ஸ்லைடுகள் போட்டாலும், மூளைக்குள் ஏறாத விஷயம், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை கீமோதெரபி கொடுக்கும்போது, வீட்டையும் வயக்காட்டையும் விற்றுவிட்டு, கடைசிக்குக் கடைசியாக மனைவியின் தாலியையும் கந்துவட்டிக்கு அடகு வைக்கும்போதுதான் புகையின் வதை புரிகிறது சாமானிய விவசாயிக்கு.

இப்படி இந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றா நோய்களின் பிடியில் சிக்கிக்கொண்டு விழி பிதுங்குவதையும், நோயிலிருந்து மீள வழி தெரியாமல் நோயோடு வாழப் பழகுவதையும் நடைமுறையில் காண்கிறோம். அதனால், நம் பாரம்பரிய மரபுகளை மறந்தது தவறு எனப் புரிந்து மீண்டெழும்போது, தொற்றா நோய்களுக்கும் விலங்கு பூட்ட முடியும்.

முதலில் இந்தப் பிரச்சினைகளுக்கான விஷ வேரைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

லைஃப் ஸ்டைல்!

இதுதான் இன்று நம் எல்லோரின் வாழ்க்கையிலும் பரவிப் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கும் பேரபாயம்! 

தொலைக்காட்சித் திரைகளில், சோப்பு, ஷாம்பு விளம்பரங்களும், துணிக்கடை, நகைக்கடை ஸ்பான்சர்களும் நமக்குத் தேவையே இல்லாத தொடர்களை வலிய வந்து திணிப்பதுபோல், நம் சமகால வாழ்க்கைமுறை, நாம் தேடிப் போகும் உணவுமுறை, நெரிசலும் இரைச்சலுமான வாழ்வியல்முறை எனச் சகலமும் சேர்ந்து செய்யும் சதிதான் தொற்றாநோய்களின் படையெடுப்பு.

நம் உடல்-மன ஆரோக்கியத்தில் தொற்றும் கிருமிகளான வைரஸ், பாக்டீரியாக்கள் உண்டாக்கும் பாதிப்புகளைக்கூட மருந்து கொடுத்து ஒழித்துவிடலாம். ஆனால், நாம் சிதைத்த சூழலும், உணவும் உண்டாக்குகிற தொற்றாநோய்களின் கூட்டத்தை ‘முழுமையாக ஒழிக்க முடியாது’ என்பதையும் தாண்டி, நோயோடு வாழ்நாளை நகர்த்தவும்கூட வசதி படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்பது நிதர்சனம்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய். ஒபிசிட்டி என சிவகாசி  சரவெடிபோல் நீண்டிருக்கிறது தொற்றாநோய்களின் கூட்டம். அவற்றில், ‘நான்தான் ஃபர்ஸ்ட்’ என்று முந்திக்கொண்டு வருவது மன அழுத்தமும் மனச்சோர்வும்தான்.

உலகிலேயே மனச்சோர்வு உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா என்கிறது உலக சுகாதார நிறுவனம். ‘இது பள்ளிக் குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் கிழவர் வரை எல்லோருக்கும் இருக்கிறது’ என்கிறது தேசிய மனநோய்க் கழகம். கடந்த ஆண்டுவரை 4-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது தற்கொலையிலும், மனச்சோர்வு பாதிப்பிலும் முதலிடத்தில் உள்ளது என்கிறது அரசுக் கணக்கு.

மனச்சோர்வானது தனிப்பட்ட ஒரு மனிதனின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பை வளரவிட்டால், உறவுகள் சிதைவதும், ஒட்டுமொத்த சமூகம் எதிரியாவதும் தவிர்க்க முடியாததாகிவிடும். நாட்பட்ட மனச்சோர்வு நாட்டின் வளர்ச்சியையே சீர்குலைத்துவிடும் என்கிற கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மருத்துவ உலகம்.

மனச்சோர்வு ஏற்படுவதற்கு இன்றைய இயந்திர மயமான வாழ்க்கைமுறை, சிதைந்துபோன உறவுமுறை, மறைந்துபோன கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி…. இப்படிப் பொதுவான பல காரணங்களைக் கூற முடியும். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் குடும்பத்தைக் கவனிக்கும் அம்மாவுக்கு நேர நெருக்கடி. உடன் உதவ தாத்தா, பாட்டி வீட்டில் இல்லை; அவர்கள் இருப்பது முதியோர் இல்லத்தில்! குழந்தைகள் மனம் விட்டுப் பேச வீட்டில் ஆட்கள் இல்லை. அவர்களின் வருத்தங்களைக் காதுகொடுத்துக் கேட்க வீட்டில் இருப்பவர்களுக்குப் பொறுமை இல்லை. சின்ன வயதில் தேவைப்படும் சின்னச் சின்னப் பாராட்டுக்கும், அரவணைப்புக்கும் கடுமையான பஞ்சம். உணவை மட்டும் ஊட்டி உள்ளத்து வலிகளைத் தீர்க்க முடியாது என்பதை அம்மாக்கள் மறந்துவிட்ட காரணத்தால், சிறார்களிடத்தில் மனசை அழுத்தும் சுமை கூடிக்கொண்டே போகிறது. விளைவு, சின்ன வயதிலேயே மன அழுத்தம்.

இளவயதினருக்குக் காதல் தோல்வி, வேலை யின்மை, படிப்புக்கு ஏற்ற வேலையில்லாதது, ஒப்பீட்டு வாழ்க்கை போன்றவை மனச்சோர்வைத் தருகின்றன. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக வேலைப் பளு, குறைந்த சம்பளம், மோசமான பணிச்சூழல் போன்ற காரணங்களால் மன அழுத்தம் அதிகமாகி மனச்சோர்வில் முடிகிறது.

நடுத்தர வயதினருக்குத் திருமணம் ஆகாதது, வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் துயரங்கள், தோல்விகள், பொருளாதாரப் பின்னடைவு, கல்வியில் பின்னடைவு போன்றவை காரணமாகலாம். இல்லத்தரசிகளுக்கு குடிகாரக் கணவர், குடும்பச் சுமை, குழந்தையின்மை, முரட்டுப் பிள்ளைகள், தாம்பத்யக் குறைபாடு என்று பல பிரச்சினைகள் மனச்சோர்வைக் கொண்டுவருகின்றன. முதியவர்களுக்கோ தனிமை, வெறுமை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, நாட்பட்ட நோய்நிலை..!

மனச்சோர்வின் முதல்கட்ட அறிகுறியாக வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளும் கடமைகளும் மாறும். அதீத உறக்கம் வரும். காலையில் எழுவது தாமதமாகும். சோம்பேறித்தனமாக இருக்கும். பசிக்காது. சாப்பிடப் பிடிக்காது. உடல் மெலிந்து பலவீனம் அடையும். தலைவலி, உடல்வலி, தசைவலி, கழுத்துவலி, தோள்வலி, கால்வலி எனப் பலதரப்பட்ட வலிகள் தொல்லை கொடுக்கும்.

அடுத்தகட்டத்தில் முகத்தில் சிரிப்பு மறைந்து, இறுக்கம் படரும். அடுத்தவர்களுடன் பேசுவதும், பழகுவதும் குறையும். தாம்பத்ய உறவில் ஆர்வம் குறையும். வாழ்க்கையில் பிடிப்பு போகும். குடிப்பழக்கம் அல்லது வேறு லாகிரிப் பழக்கங்கள் ஆட்கொள்ளும்.

தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் குறைந்து, வாழ்க்கையில் தான் தோற்றுவிட்டதாக திகில் உண்டாகும். என்னால் எவருக்கும் பயனில்லை, என்னை எவருக்கும் பிடிக்கவில்லை, எதிர்காலம் வெறும் இருட்டு என்பதான எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனசுக்குள் ‘ரீப்ளே’ ஆகும். உப்புப் பெறாத காரணத்துக்காகப் பல தற்கொலைகள் நடப்பதும் இதனால்தான்.

மனச்சோர்வின் உப விளைவுகளாக அஜீரணம், இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, ஐபிஎஸ் (IBS) எனும் நோய், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, தூக்கமின்மை, ஆண்மைக் குறைவு என்று படையெடுக்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகும். உடலில் சாதாரண கட்டிகள்கூட மனநெருக்கடியில் இருக்கும்போது புற்றுநோயாக மாற வாய்ப்பு உண்டு என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

மனச்சோர்வின் அறிகுறிகளை வைத்து அதைக் குறைந்த நிலை, மிதமான நிலை, கடுமையான நிலை எனப் பிரித்து சிகிச்சை அளிப்பது நடைமுறை. மனச்சோர்வைப் போக்கும் மருந்துகள்தான் சிகிச்சை யில் முக்கியம் என்றாலும், கூடவே சிந்தனை சார்ந்த நடத்தைப் பயிற்சிகளும், உறவுகள் மேம்பட ஆலோசனைகளும் தேவைப்படும். மனச்சோர்வு கடுமையாக உள்ளவர்களுக்கு ‘மின்தூண்டல் சிகிச்சை’ தரப்படும்.

இதெல்லாம் இருபாலருக்குமான பொதுவான விஷயங்கள். பெண்களை - குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களைச் சுற்றி வளைக்கும் மனச் சோர்வு இருக்கிறதே... அது பத்து தலைப் பாம்பு மாதிரி! அதற்கான காரணங்களும், தீர்வுகளும் இன்னும் கவனமாகப் பார்த்துக் களைய வேண்டியவை.

அமலா எனும் ஒரு தோழிக்கு நேர்ந்ததை அடுத்த வாரம் பார்ப்போமா..?

- அறிவோம்... தெளிவோம்.

- டாக்டர் கு. கணேசன்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close