[X] Close

மாதவிடாயின்போது மென்ஸ்ட்ரூவல் கப் பயன்படுத்துவது எப்படி?


how-to-use-menstrual-cup

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Apr, 2018 14:58 pm
  • அ+ அ-

மாதவிடாய் ஏற்படும் அந்த மூன்று நாட்கள் பெண்கள் விதவிதமான உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். சிலருக்கு அதிக உதிரப் போக்கு, சிலருக்கு அதி பயங்கர வயிற்று வலி இன்னும் சிலருக்கு மாதவிடாயுடன் அலுவலகம் செல்லும் அவதி. இன்னும் சிலருக்கு நேப்கின்களால் ஏற்படும் அலர்ஜி என அடுக்கிக்கொண்டே போகலாம்.
மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் வரத்தான் போகிறது ஆனால் அதை சற்று எளிமையாகக் கடந்து செல்ல உதவும் ஒரு உகரணம்தான் இந்த மென்ஸ்ட்ரூவல் கப். இதைப் பயன்படுத்துவதால் பெண்களுக்கு சில சவுரியங்கள் இருக்கின்றன. இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மகளிர் நோய் மருத்துவர் ஒருவர் விளக்கமளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மகளிர் மருத்துவர் மீனாட்சி பரத் கூறும் தகவல்களை இங்கே பகிர்கிறோம்:

 

 

1. மென்ஸ்ட்ரூவல் கப் என்றால் என்ன?
மென்ஸ்ட்ரூவல் கப் என்பது மருத்துவத்துறைக்கு பயன்படுத்தப்படும் சிலிகான் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கப்.

2. மென்ஸ்ட்ரூவல் கப்பை எப்படி பயன்படுத்துவது?
மென்ஸ்ட்ரூவல் கப் சிலிகானால் உருவாக்கப்பட்டிருப்பதால் அது வளைந்து நெளியும் தன்மை கொண்டது. அதன் மேற்பகுதியை அழுத்திக் கொண்டு நீங்கள் அதை உங்கள் பிறப்புறுப்பினுள் செலுத்தவேண்டும். அவ்வாறு செலுத்திவிட்டால் அது கர்ப்பப்பை வாயுடன் பொருந்தி அங்கிருந்து வெளியேறும் உதிரத்தை சேமித்துக் கொள்ளும். இதை நீங்கள் அவ்வப்போது வெளியே எடுத்து அதில் சேர்ந்திருக்கும் உதிரத்தை கீழே ஊற்றிவிட்டு பின்னர் அதை நன்கு கழுவிவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

3. இதை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டுமா?
மென்ஸ்ட்ருவல் கப்பை ஸ்டெர்லைஸ் அதாவது கிருமிகள் இல்லாத வண்ணம் சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு.. மென்ஸ்ட்ரூவல் கப்பை சுத்தமான நீரில் கழுவினால் போதுமானது. தேவைப்பட்டால் வெந்நீரில் கழுவி பயன்படுத்தலாம். பெண் உறுப்பும் ஈரத்தன்மையுடன் இருக்கும் என்பதால் இந்த மென்ஸ்ட்ரூவல் கப்பை தனியாக ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

4. இதைப் பயன்படுத்துவதால் சிறுநீர் தடைபடுமா?
இந்த கருவியை பயன்படுத்துவதால் சிறுநீர் தடைபடாது. ஏனெனில் கர்பப்பை வாய் பாதைக்கும் யூரேத்ரா எனப்படும் சிறுநீர் வெளியேற்றும் பாதைக்கும் ரெக்டம் எனப்படும் ஆசனவாய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, இதைப்பயன்படுத்தும்போது சிறுநீர், மலம் கழிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

5. இந்தக் கருவி பிறப்புறுப்பின் வழியாகவே உடலுக்குள் செல்லும் வாய்ப்பிருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. இதன் அடிப்பகுதி வெளியே இருக்கும். அதை லேசாக அழுத்தினால் மென்ஸ்ட்ரூவல் கப் உங்கள் கையுடன் வெளியே வந்துவிடும். இது உடலுக்குல் செல்ல எவ்வித வாய்ப்பும் இல்லை.

6. இதன் விலை அதிகமோ?
நிச்சயமாக இல்லை. இதன் விலை ரூ.700-ல் இருந்து ரூ.1000 வரையில்தான் இருக்கிறது. நீங்கள் ஓராண்டுக்கு நேப்கின் வாங்கும் செலவும் அவ்வளவுதான். ஆனால், இந்தக் கருவியை நீங்கள் 7 முதல் 8 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், இதை உபயோகிக்கும்போது நீச்சல், குதிரையேற்றம் என எல்லா செயல்களையும் எளிதாக செய்ய முடியும்.

7. இதை உபயோகிப்பது எளிதாக இருக்குமா?
உதாரணத்துடன் சொல்ல வேண்டுமானால், முதன்முதலில் நீங்கள் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும்போது அதை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துவீர்கள். அதுவே உங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்டால் அரை நிமிடத்தில் லென்ஸ் வைத்துக் கொள்வீர்கள். அதைப் போன்றுதான் இந்த மென்ஸ்ட்ரூவல் கப்பும். எளிதாக இருக்கும். விரைவில் உங்களுக்குப் பழகிவிடும்.

இது மருத்துவர் மீனாட்சி பரத் அளித்த விளக்கத்திலிருந்து.

இல்லை இதன் பயன்பாட்டை தமிழிலேயே யாராவது விளக்கினால் இன்னும் எளிமையாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் பத்திரிகையாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து தமிழிலேயே செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

அதற்கான லிங்க்: 

 

 

சுற்றுச்சூழல் பற்றியும் சிந்திப்போம்..

நாம் பயன்படுத்தும் நாப்கின்கள் அவ்வளவு எளிதாக மக்கிவிடுவதில்லை. இதனால், நிலம் மாசுபடுகிறது. இதைவிட கொடூரமானது நாம் பயன்படுத்தும் சானிட்டரி நேப்கின்களை நம் சக மனிதர்களாகிய துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்துவது. அவர்களுக்கு இத்தகைய தர்மசங்கடமான தொழிலைத் தருவதைக் காட்டிலும் நம்மையும் சுத்தமாக நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும் நம் சக மனிதரையும் கவுரவமாக நடத்த முடியும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close