[X] Close

 30 லட்சம் பேரால் காசநோயை ஒழிப்பதில் சிக்கல்: காசநோய் விழிப்புணர்வு தினத்தில் அதிர்ச்சி தகவல் 


b-treatment-tb-symptoms-tb-patients

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 24 Mar, 2018 12:07 pm
  • அ+ அ-

உலக அளவில் ஆண்டுக்கு 30 லட்சம் காச நோயாளிகள் சிகிச்சையை தொடராமல் மாயமாகி விடுகின்றனர். இவர்களால்தான் காச நோயை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதனை விரைவாக தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கொடிய நோயாக, காசநோய் உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இந்நோய் பரவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்குத்தான் இந்நோய் விரைவில் பரவுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களை இந்த நோய் எளிதாக தாக்குகிறது. எச்ஐவி உள்ளவர்களுக்கு இந்த நோய் வர அதிக வாய்ப்புள்ளது. மூன்று எச்ஐவி நோயாளிகளில் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டவராக உள்ளார்.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 29 லட்சம் காசநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஆனால், 10 லட்சம் பேர் வரை பரிசோதனைக்கோ, சிகிச்சை பெறுவதற்கோ வருவதில்லை எனத் தெரியவந்துள்ளது.

பூரணமாக குணப்படுத்தலாம்

நாள் ஒன்றுக்கு 1,400 பேர் காசநோய் பாதிப்பில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் காச நோயாளிகள் சிகிச்சைக்கு வராமலேயே இருந்துவிடுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்கு காசநோயை பரப்புகிறார்கள். அதனால்தான் இந்நோயை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.

இந்தியாவில் சிகிச்சைக்கு வராத காச நோயாளிகளை கண்டறிந்து அவர்களை குணப்படுத்த இலக்கு நிர்ணயித்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு காசநோய் ஒழிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. 

குறைந்தது 6 மாத சிகிச்சை எடுத்துக் கொண்டால் காசநோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம். இந்த நோய்க்கான சிகிச்சை சர்வதேச தரத்தில் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால், இன்றளவும் காசநோய் பாதிப்பு உள்ளவர்களை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் வெறுத்து ஒதுக்கும் நிலைதான் உள்ளது. சமூகத்தில் காச நோய் பற்றிய பார்வை இன்னும் மாறாததால் இந்த நோயாளிகள் நேரடியாக சிகிச்சை பெற மருத்துவமனைகளுக்கு வர தயங்குகின்றனர்.

மீரா பவுண்டேசன்

இந்நிலையை மாற்ற மதுரை மீரா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறது. மேலும், மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சிகிச்சைக்கு வராத காச நோயாளிகளை கண்டறிந்து அவர்களை அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தில் சேர்த்து பூரண நலமடைய தேவையான உதவிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது அமெரிக்காவின் நூரிஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து காச நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவன இயக்குநர் ராஜா முகமது கூறியதாவது: தொடர் இருமல், சளியில் ரத்தம், பசியின்மை, மாலை நேரக்காய்ச்சல், உடல் எடை குறைதல் போன்றவை காச நோய் அறிகுறிகள். காசநோய் காற்றினால் பரவக்கூடியது. யாருக்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் இந்தநோய் வரலாம். இந்நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட சில வாரங்களிலேயே உடல் ஆரோக்கியம் மேம்படத் தொடங்கிவிடும். இதை நம்பி உடனடியாக சிலர் சிகிச்சையை தொடராமல் விட்டுவடுகின்றனர். இது தவறு. அவ்வாறு செய்தால், மீண்டும் பழைய நிலைக்கே இந்நோய் சென்றுவிடும். அதன்பிறகு நோயாளிகள் சக்திவாய்ந்த மருந்துகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். தொடர்ந்து சிகிச்சை பெறாமல் பாதியில் விட்ட நோயாளிகளுக்கு மருந்துகளுக்கு கட்டுப்படாத காசநோய் வர வாய்ப்புள்ளது. இதை ‘மல்டி டிரக் ரெஸிஸ்டண்ட்’ என்று சொல்வார்கள் என்றார்.


ராஜா முகமது

காசநோயாளி பற்றி தெரிவிக்காவிட்டால் மருத்துவர்களுக்கு 6 மாதம் சிறை

காச நோய்களுக்கான மருந்துகள் விலை உயர்ந்தவை. இந்த மருந்துகள் அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது லட்சம் பேருக்கு 217 பேர் காச நோயால் பாதிக்கப்படுகினறனர். இதை 2025-ம் ஆண்டிற்குள் 44 ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 13-ம் தேதி டெல்லியில் நடந்த காசநோய் தடுப்பு மாநாட்டில் 2025-ம் ஆண்டிற்குள் இந்த நோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் துரிதப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைபெற வரும் காசநோயாளிகள் பற்றிய தகவலை காச நோய் தடுப்பு திட்ட அலுவலர்களுக்கு தெரிவக்காமல் மறைத்தால், அவர்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-ஒய்.ஆண்டனி செல்வராஜ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close