[X] Close

சர்க்கரை நோய்... மருத்துவ வணிகமா? உணவு வியாபாரமா?


diabetes-level-diabetes-controversy

கோப்புப் படம்

  • நெல்லை ஜெனா
  • Posted: 22 Mar, 2018 16:38 pm
  • அ+ அ-

அளவீட்டை மாற்றலாமா? - அமெரிக்காவை எதிர்க்கும் டாக்டர்கள்

சர்க்கரை விஷயத்தில் அமெரிக்கா, கசப்பானதொரு முடிவை அறிவித்துவிட்டதாகப் புலம்பி எதிர்க்கிறார்கள் மருத்துவர்கள். 

ஒருவருக்கு ஹெச்பிஏ1சி 8 சதவிகிதம் வரை இருந்தாலே அந்த நபருக்கு நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க நீரிழிவுச் சங்கம் அறிவித்துள்ளது அதாவது, இது நோயே அல்ல என்கிறார்கள் அவர்கள். பொதுவாகவே சர்க்கரை என்பது நோய் அல்ல; குறைபாடு என்று சொல்லிவருவதையும் கூர்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது. இப்போது இந்த அறிவிப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கானச சதி என்று இந்த விஷயத்தைப் பார்க்கின்றனர் இந்திய மருத்துவர்கள். ஆனால், மருந்துகள் விற்பனை, மருத்துவம் போன்ற தங்கள் வணிகம் சார்ந்து அதைத் தக்கவைப்பதற்காகத்தான் டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஒருவருக்குச் சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்வதற்கு பலவித சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதில் மிக முக்கியமாக, சர்க்கரை நோயாளியின் ரத்தச் சர்க்கரை, அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு  கடந்த மூன்று மாதங்களில் சரியான கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவதற்காக ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைதான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, எந்த விருப்பும்வெறுப்புமின்றி கண்ணாடியெனக் காட்டிவிடும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதான்!

அதன்படி, ஹெச்பிஏ1சி அளவு 6.5% முதல் 7 % வரை இருந்தால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது 7 %-க்கு அதிகமாகப் போனால், நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் சொல்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கால்களையே இழக்கும் நிலை முதலானவை ஏற்படலாம். எனவே இந்தியாவில் சர்க்கரை நோய்க்காக சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சதவிகித அளவையே பின்பற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான அளவீடுகளில் புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. ஒருவருக்கு ஹெச்பிஏ1சி 8 % வரை இருந்தால் கூட, அந்த நபருக்கு நீரிழிவு நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே அர்த்தம் என அறிவித்துள்ளது. சர்க்கரை நோயாளிகளை பத்தாண்டுகள் தொடர்ந்து கவனித்து, அவர்களின் நோய்நிலைகளையும் பக்கவிளைவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சர்க்கரை நோய்க்கான அமெரிக்காவின் இந்த புதிய அளவீடுகளுக்கு பெரும்பாலான இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

‘‘சர்க்கரை நோய்க்கான, ஹெச்பிஏ1சி 6.5% முதல் 7 % வரை என்ற அளவீடு சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளின் மருத்துவ அமைப்பு பின்பற்றி வரும் நடைமுறை. ஆசியாவில், குறிப்பாக தெற்காசியாவில் உள்ள உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த 30 வருடங்களாக இவற்றில் தவறு நேரவில்லை. அதாவது இது மிகத்துல்லியமான அளவு முறை. ஆகவே இதைக் கொண்டு மருத்துவம் பார்த்து வருகிறோம். சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறோம்.

ஆனால், அமெரிக்காவின் புதிய அளவீடு அந்த நாட்டின் உணவை அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவெண்டும். இது இந்தியாவுக்கும் பொருந்தாது. இந்தியர்களுக்கும் பொருந்தாது.

இந்தப் புதிய அறிவிப்பால் இந்தியர்களின் மனநிலையில் தவறான கணக்குகள் பதிவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உணவுக் கட்டுப்பாட்டில் இன்னும் அலட்சியம் காட்டுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. கட்டுப்பாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு, இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, கண் பாதிப்புகள் ஏற்படலாம். அமெரிக்கா உட்பட பல நாடுகளின் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனை செய்யும் வணிக நோக்கமாகத்தான் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தடாலடியாக அமைக்கப்பட்டு உள்ளது’’ எனக் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஆயுர்வேதம் உள்ளிட்ட பிற மருந்துவர்களும், சூழலியல் ஆதரவாளர்களும் மறுக்கின்றனர். ‘‘இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் சர்க்கரை நோய்க்கான அளவீடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. இந்தியாவில் கூட ஒரே மாதிரியான உணவுப் பழக்கம் எல்லா மாநிலங்களுக்குமாக இல்லை. வட இந்தியாவில் கோதுமையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தென்னிந்தியாவில் அரிசியே பிரதானமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அனைவருக்கும் ஒரே மாதிரியான சர்க்கரை நோய்க்கான அளவீடு பின்பற்றப்படுகிறது. இதற்குப் பின்புலத்தில் மருத்துகளை விற்பனை செய்யும் நோக்கமும், நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வணிக நோக்கமும் இருக்கிறது. எனவேதான் இந்திய மருத்துவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்’’ எனக் கூறியுள்ளனர்.

சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் சென்ற ஆண்டின் கணக்குப்படி 7.2 கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நீரிழிவு வரக்கூடிய எல்லையில் இருப்பவர்கள் 8 கோடிப் பேர் என்கிறது அந்த ஆய்வு.

 ஒருபக்கம், உணவு மாற்றங்கள், அலுவல் நேர மாற்றங்கள், மன அழுத்தங்கள் முதலானவற்றால் நீரிழிவுக்காரர்கள் அதிகரித்துக் கொண்டே வரும் பரிதாபகரமான நிலையில், இந்த சதவிகித மாற்றங்கள் இன்னும் குழப்பத்தைத் தரும் குளறுபடியாக்கும் என்பதாகவே பார்க்கின்றனர்.

ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அவர்களுக்கான வழிகாட்டுதல் சரியாக இருக்க வேண்டும் என்பதே கசப்பான உண்மை!

மக்களின் எதிர்பார்ப்பு!!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close