[X] Close

பாதுகாப்போம்... நம்மையும் மலையையும்!


trekking-safety-trekking-guide

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Mar, 2018 15:14 pm
  • அ+ அ-

கும்பகோணம் பள்ளி விபத்துதான், இனி பள்ளிகளில் கூரையே கூடாது எனும் விழிப்பு உணர்வுக்கு வித்திட்டது. குரங்கணி மலையின் விபத்துதான் டிரெக்கிங் குறித்த விழிப்பு உணர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.  

பயணம் என்றாலே சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. தேடலையும் சுற்றலையும் ஒரே புள்ளியில் இணைப்பது தான் பயணங்கள். சாகசப் பயணங்களில் அனைவரையும் கவர்ந்த ஒன்று டிரக்கிங். ஆறுகளைக் கடந்து செல்லும் புல்வெளிகள், வளைந்து நெளிந்து செல்லும் பனி மூடிய சிகரங்கள் என நம்மை பரவசப்படுத்தும் பல்வேறு அனுபவங்களை  அளிக்கவல்லது டிரெக்கிங்!

நகரத்தின் இரைச்சல்களிலிருந்து விடுவித்துக் கொண்டு அற்புத மூலிகைகளும், இதம் தரும் இசைப்பிரவாகமாக வரும் அருவிகளும், ஓங்கி உயர்ந்த மரங்களுமாகத் திகழும் மலைப்பகுதியை சென்று அனுபவித்தவர்கள் மிகக் குறைவு. இன்றைக்கு இருக்கும் பரபரப்பில் அதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.

இயற்கை தனது அழகை வலுவாக வெளிக்காட்டுவது மலைகளில் தான். நிசப்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும் பிரதேசம். அருவியின் சப்தத்தைக் கேட்டாலே மனம் இனிமையாகும். இதையெல்லாம் சென்று பார்த்து ரசித்தவர்கள் குறைவுதான்!

பொருளாதாரத் தேடல், அவசர பரபரப்பு, ஜன நெரிசல், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், வாகனப்புகை, காது கிழிக்கும் சத்தங்கள் இவற்றுக்கு மத்தியில் வழக்கமான வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருக்கும் நகர மக்களுக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் மலையேறுதல் நிச்சயம், மிகப்பெரிய புத்துணர்ச்சிப் பயணம்தான்!

மலையேறப்போகும் பகுதியை ஏற்கனவே திட்டமிட்டு, அதன் சாதக பாதகங்கள் உறுப்பினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பின்னர் மலையேறப் போகும் இடத்தின் சூழல், இடர்பாடுகள், தட்பவெட்ப நிலை, காட்டுவிலங்குகளின் நடமாட்டம், அங்குள்ள மக்களின் பழக்கவழக்கங்கள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, பயணத் திட்டம் வரையறுக்கப்படுவதும் அவசியம்.

ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாகவும், குழுவாகவும் மலையேற்றம் உண்டு. முன்னதாக, ஒரு வாரத்திற்கு முன்பே மலையேறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். நீச்சல் தெரியாதவர்கள், அடர் நிற சட்டை, பிளாஸ்டிக், குடி, புகை எல்லாவற்றிற்கும் தடை விதித்திருப்பது குழுவின் சிறப்பு அம்சம்.

ஜி.பி.எஸ். உள்ள மொபைல்போன், பிரட், ஜாம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், சவுகரியமான சட்டை, மலையேற்றத்திற்கான ஷூ, பாய், சின்ன கூடாரம், பெரிய பேக் இவற்றோடு கிளம்புவதே எல்லாவகையிலும் நன்மை பயக்கும் என்கிறார்கள், மலையேற்றத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்.

காட்டின் முகப்பு வரை வாகனங்களில் பயணம். பின்னர் நடராஜா சர்வீஸ்தான். எப்போதும் குழுவாகவும், கண்ணில் படும்படியாகவும் இருக்க வேண்டும் என்பது மலையேற்றத்தின் பொதுவிதி. முன்னால் செல்கிறவர் மலையேற்றத்தில் மிகுந்த பயிற்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

காட்டு உயிரினங்களின் இயல்பு வாழ்வை பாதிக்கும் என்பதால் பயணத்தின் போது சத்தம் எழுப்பாமல் நகர வேண்டும் என்பது கட்டளை. மலையேற்றத்தின் போது, உடன் செல்கிற புகைப்படக் குழு, காட்டில் உள்ள பல்வேறு தனிச்சிறப்பு வாய்ந்த காட்டு உயிரினங்களை ஆவணப்படுத்தி இருக்கிறது.

"மலையேற்றத்திற்குப் பிறகு என்னிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. மலையேற்றத்தின் போது கடுமையான ஒழுக்க விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டோம். குறிப்பாக குப்பைகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் இருக்க வேண்டும். அதிகமாக சப்தம் போடக்கூடாது போன்ற கட்டுப்பாட்டில் நாங்கள் செயல்பட்டோம்.

இப்போதும் குப்பைகளை கண்ட இடத்தில் போடாமல் குப்பைத் தொட்டியில் போடுகிற பழக்கத்தை மலையேற்றம் தான் கற்றுக் கொடுத்தது என்று பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்" எனத் தெரிவிக்கிறார்  பெங்களூருவில் உள்ள சங்கர் டிரெக்ஸின் ஆனந்தா ராமகிருஷ்ணன்.

அருவி, பள்ளத்தாக்கு, காடு, மலை என இதுநாள் வரை இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் 500 முறைக்கு மேல் மலையேற்றம் சென்றிருக்கின்றனர் இந்தக் குழுவினர். தன்னை புதுப்பிப்பதும், இயற்கையை நேசிக்க வைப்பதும் தான் மலையேற்றத்தின் நோக்கம் எனினும், இதைத் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. மலையேற்றத்திற்குப் பிறகு, பயணம் செய்யவர்கள் எல்லோரும் குடும்ப நண்பர்களானது தான் மலையேற்றத்தின் ஹைலைட்.

அனைவரும் அதிகளவில் விரும்பியது, 'கேம்ப் பயர்' தான். அடர்ந்த குளிரில் நெருப்பு எரிய, சுற்றி இருந்த அனைவரும், குளிர்காய்ந்த அனுபவத்தை மறக்க முடியாது என்கின்றனர் மலையேற்றத்திற்குச் சென்றவர்கள். மலையேற்றம் சக மனிதர்கள் மீதான அன்பையும் அக்கறையையும் அதிகப்படுத்துகிறது என்பதே உண்மை.

- வி.ராம்ஜி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close