[X] Close

தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் எண்ணிக்கை குறைந்தன: ஒக்கி புயல் காரணமா? ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு


bird-migration-to-tamilnadu

  • Team
  • Posted: 10 Mar, 2018 11:12 am
  • அ+ அ-

மதுரை தமிழகத்துக்கு வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் வருகை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய ஒக்கி புயல் காரணமா என பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மழைக்காலம் முடிந்தபிறகு செப்டம்பர் தொடங்கி மார்ச் வரை பறவைகள் வலசை போவது(வெளிநாட்டில் இருந்து இங்கு வருவது) நீடிக்கும். தற்போது வலசை காலம் முடிந்து கோடை வெயில் தொடங்கி விட்டதால் வலசை வந்த வெளிநாட்டு பறவைகள், தங்கள் தாய் மண்ணுக்கு இடம் பெயரத் தொடங்கி உள்ளன. இந்த பறவைகள் தங்கள் வாழ்விடங்களுக்கு சென்று ஏப்ரலில் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்.

பறவைகளுடைய வலசையில் கடல் வழி, தரைவழி என இரண்டு பாதைகள் உள்ளன. கடல்வழி பாதையில் பறவைகள் கடலிலேயே பயணப்பட்டு நடுவில் சிறு சிறு தீவில் தங்கி, அதன் பயணத்தை தொடரும். பெரிய நிலப்பரப்புக்கு அவை வராது. குறிப்பாக இந்தப் பறவைகளுடைய வாழ்க்கையின் 75 சதவீதம் கடல் பரப்பிலேயே முடிந்து விடும். 

ஒக்கி புயலால் வருகை குறைவு

இந்த ஆண்டும் வழக்கம்போல வலசை மற்றும் வாழ்விட பறவைகளை கணக்கெடுக்க பறவையியல் ஆர்வலர்கள், அந்தந்த மாவட்ட வனத்துறையுடன் இணைந்து களம் இறங்கினர். அந்த வகையில் மதுரை இறகுகள் இயற்கை அமைப்பின் பறவையியல் ஆர்வலர்கள் சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பறவையியல் ஆர்வலர்களுடனும், வனத்துறையினருடனும் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் இந்த ஆண்டு எப்படி பறவைகள் வலசை அமைந்தது என விசாரித்தோம். இறகுகள் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் பேசியதாவது: இந்த ஆண்டு கடலோர மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டோம். குறிப்பாக, மன்னார் வளைகுடாவில் முக்கியத் தீவுகளுக்குச் சென்று, அங்கு வந்து சென்ற பறவைகளை கணக்கெடுத்தோம். 

ஒக்கி புயலால் இந்த ஆண்டு பறவைகள் வருகை குறைந்திருந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது. அந்த புயலின் சீற்றம், பறவைகளுடைய வலசைப் பாதையையே பாதித்துள்ளது. அப்படியென்றால் ஒக்கி புயல் எப்படி கடல் வாழ்விடங்களையும் பாதித்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

கூட்டமாக வரும் பறவைகள்

மன்னார் வளைகுடா தவிர வனத்துறையோடு சேர்ந்து ராநாதபுரம் பறவைகள் சரணாலயம், சிவகங்கை வேட்டங்குடி, திருநெல்வேலி கூந்தன்குளம், திருபுடை மருதூர், கோடியக்கரை, வேடந்தாங்கல், சென்னை பழவேற்காடு உட்பட பல இடங்களுக்கு பறவைகளோடு, பறவைகளாகச் சென்று புகைப்படங்களில் அவற்றின் வருகையை உறுதி செய்தோம். 
நன்னீரும், கடல் நீரும் கலக்கும் பகுதிக்கு வரும் நீர்வாழ் பறவைகளில் இந்தமுறை உள்ளான் வகை இனங்களை குறைவாகவே பார்க்க முடிந்தது. நீண்டதூர தரைவழி வலசையில் பறவைகளுக்கு வேட்டைக்காரர்கள், வேட்டை பறவைகளால் அச்சுறுத்தல் இருக்கும். அவற்றை எதிர்கொள்ள பறவைகள் வலசை வரும்போதும், முடிந்து திரும்பிச் செல்லும்போதும் கூட்டமாக செல்கின்றன.

சோளக் குருவிகள் அல்லது சூறைக் குருவிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பல பகுதிகளுக்கு இந்த முறை வலசை வந்திருந்தன. இந்த பறவைகள் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வருகின்றன. இந்த முறை எண்ணிக்கையில் அதிகம் இந்த பறவைகளே வந்துள்ளன. 

எவரெஸ்ட்டை கடக்கும் பறவைகள்

கடற்கரையோரங்களில் நண்டு தின்னிகள், 5 ஆண்டுகளில் இந்த முறைதான் தென் தமிழ்நாட்டுக்கு அதிகம் வந்துள்ளன. மூன்று மாதங்களுக்கு மேலாக 80 பறவைகளை தொடர்ச்சியாக பார்த்தோம். பூ நாரை எண்ணிக்கை அதிகமாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு வாத்துகள், அதிக எண்ணிக்கையில் வலசையில் தங்கவில்லை. பல மாவட்டங்களுக்கு அவை பெரிய எண்ணிக்கையில் வரவில்லை. மத்திய ஆசிய பகுதியில் இருந்து வரும் இந்த வாத்துகள், ஒவ்வொரு ஆண்டும் வலசை காலங்களிலும் அதிகளவு வரும். இந்த ஆண்டு ஒக்கி புயல் ஒருபுறம் பாதித்து இருந்தாலும், மத்திய இந்தியா, வடஇந்தியாவில் அதிக மழை பெய்ததால் இந்த பறவைகள் அங்கு சென்று விட்டன.

விதிவிலக்காக வரித்தலை, ஊசி வால் வாத்துகள், ஆண்டி வாத்துகள், நீலச்சிறகி மட்டும் அதிக எண்ணிக்கையில் தமிழகத்துக்கு வலசை வந்துள்ளன.

இதில் வரித்தலை வாத்துக்கள் மங்கோலியா, சைபீரியாவில் இருந்து உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை கடந்து வருகின்றன. திருநெல்வேலி கூந்தன்குளம் பகுதிக்கு 5 ஆயிரம் வரித்தலை, ஊசி வால் வாத்துக்கள் வந்துள்ளன. மத்திய ஆசியாவில் இருந்தும், கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த வரிமார்பு பவள காலி பறவைகளும் வந்திருந்தன. மொத்தத்தில் 80 வகைக்கும் மேலாக வலசை பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வலசை வந்திருந்தன.

இமயமலை சாரல், மற்றும் வடக்கிழக்கிந்திய பகுதியில் இருந்து வரக்கூடிய ஈ பிடிப்பான் பறவைகள், காட்டுக்கதிர் குருவி இன பறவைகள் பல நீலகிரி, பழநிமலை தொடர், களக்காடு, பொதிகை, ஏற்காடு, கல்வராயன், சேர்வராயன், ஜவ்வாது மலை போன்ற மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கண்டறியப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

- ஒய். ஆண்டனி செல்வராஜ் 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close