[X] Close

நீரால் அமையும் வாழ்வு!


need-of-water

  • முகமது சல்மான்
  • Posted: 08 Mar, 2018 10:39 am
  • அ+ அ-

நம் ஊரில் தண்ணீர் லாரி வரும் சத்தம் கேட்டாலே போதும், இருக்கும் வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாகக் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஓடுவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் எடுத்து வருவதற்கு ஒரு நாளில் பல மணிநேரங்கள் தாய்மார்கள் செலவிட வேண்டியிருக்கிறது.

குழாயடிச் சண்டை என்றதும் நம் நினைவிற்கு வருவதும் பெண்கள்தான். ஏனென்றால், தண்ணீர் பிடிக்கும் வேலை பெரும்பாலும் பெண்களைச் சார்ந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல், சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது என்று தண்ணீர் பயன்பட்டுள்ள எல்லாப் பணிகளும் குடும்பத்தில் இருக்கும் மகளிர் சார்ந்ததாகவே இருக்கின்றன. எனவே தண்ணீர் தொடர்பான பற்றாக்குறை, மாசுபாடு ஆகிவற்றின் வலியும் வேதனையும் பெரும்பாலும் பெண்களுக்கானதாகவே உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பெண்கள் தண்ணீர் சேகரிப்பதற்காக மட்டும் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஆறு மணிநேரம் செலவிடுகிறார்கள். மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசம். சேறும் சகதியும் மேடும் பள்ளமும் உள்ள சிதைந்த பாதைகளின் வழியாகத் தண்ணீர் கொண்டுவருவது என்பது மேலும் பல மணிநேரங்களை எடுத்துக்கொள்கிறது. மிகவும் அத்தியாவசியமான தண்ணீரைச் சேகரிப்பதிலேயே பாதி நாள் கடந்துவிடுவதால் அங்குள்ள இளம் பெண்கள் பள்ளிப்படிப்பைப் பாதியிலே விட்டுவிட வேண்டிய நிலை. இதனால் மனித ஆற்றல் பயனற்றுப் போவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது எனக் கூறுகிறது சர்வதேச சுகாதார மற்றும் கல்வி அறக்கட்டளை அறிக்கை.

நகர்ப்புற வாழ்க்கையில், தண்ணீருக்கான பற்றாக்குறையையும் மாசுபாட்டையும் எதிர்கொள்பவர்கள் குடிசைவாழ் மக்களாக இருக்கிறார்கள். கூவத்தின் கரைகள் இதற்கான கூப்பாடுகளோடே விடிகின்றன. வசதி என்று நினைத்துக்கொண்டு இருக்கும் பல அம்சங்கள் பெண்களுக்கு ஏதுவாக இல்லை. வேலைக்குச் செல்லும் நடுத்தரக் குடும்பப் பெண்களுக்குத் தங்களுக்காக நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கையில், தன்னைச் சுற்றி இருக்கும் சூழலைப் பற்றி சிந்திக்கும் வாய்ப்புகள் குறைவே. ஆனால் சற்றுக் கவனித்துப் பார்த்தால், பெண்களுக்காக பிரத்யேகச் சிக்கல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் முக்கியமானது, பொதுக் கழிப்பிட வசதி. கழிப்பிடங்கள் இல்லாத நிலை, போதாத நிலை, ஆரோக்கியமாகப் பராமரிக்கப்படாத நிலை.

மார்கெட்டிங், சேல்ஸ் போன்ற வெளியில் அதிக நேரம் செலவிட வேண்டிய வேலைகள் செய்யும் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு ஒதுங்கக்கூட இடமில்லாத நிலை இருக்கிறது. சிறுநீரகக் கோளாறுகள், வயிற்றுப் பிரச்சினைகள், மூல நோய் போன்றவை இந்த பிரச்சினையோடு தொடர்புடையவை. பெண்கள் இயற்கை உபாதைகளை அடக்கி வைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம்.

இம்மாதிரியான அடிப்படை வசதிகளுக்கே வழியில்லாத நிலையில், பெரிய பெரிய மால்கள் கட்டுவது, நூற்றுக்கணக்காக கார்கள் ஓடுவது மட்டுமே வளர்ச்சியாக ஆகிவிட முடியாது. இன்றைக்குத் தொழில்மயமாகிவரும், நகர்மயமாகிவரும் சூழலில் போக்குவரத்து வளர்ச்சி பிரம்மாண்டமாகி உள்ளது.

கணிசமான பெண்கள் படிப்பதற்கும் வேலை செய்வதற்கும் வெளியில் செல்ல வேண்டிய நிலையில் காற்று மாசுபாடு அவர்களின் ஆரோக்கியத்தைக் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஏற்கனவே, வீட்டிற்குள் உள்ள மாசுபாடுகளால் பாதிக்கப்படும் அவர்களுக்கு, இது ஒரு கூடுதலான பிரச்சினை. இப்படி தினம்தோறும் சந்திக்கும் பிரச்சினைகள் மட்டுமல்லாது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 'வளர்ச்சி' திட்டங்களும் சூழலியல் சவால்களை விடுத்துவருகின்றன.

பெரிய அணைக்கட்டுகளுக்கான திட்டங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் எனப் பல்வேறு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. வெள்ளம் தாக்கும் சமயங்களில் ஏழை மக்கள் அதிலிருந்து தப்ப மேட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர வேண்டிய சமயங்களில், ஆண்கள் தட்டுமுட்டுச் சாமான்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதையும் பெண்கள் குழந்தைகள், முதியோர்களைக் காப்பாற்றுவதில் அக்கறை கொள்வதையும் ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, சூழல் நலன்களுக்கான சவால்கள் பெரும்பாலும் தாய்மைக்கான சவால்களாகவே உள்ளன. இதனால்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு தீவிரமாக இருக்கிறது. அங்குள்ள பெண்கள் எங்கள் குழந்தைகள் ஊனமாக பிறப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்று எழுப்பும் கேள்வியில் சூழல் சீர்கேடுக்கு எதிரான தாய்மையின் கவலையும் அதைப் போக்குவதற்கான சவாலும் அடங்கியுள்ளன.

கல்பாக்கம் பகுதியில் உள்ள பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை, கர்ப்பப்பை கோளாறுகள், குழந்தை ஊனமாகப் பிறப்பது போன்ற பிரச்சினைகள் இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப், நகப்பூச்சு, ஷாம்பு, ஹேர் ஸ்ப்ரே, ஹேர் டை முதலான அழகு சாதனங்களாலும், வீட்டு உபயோகப் பொருட்களாலும் ஏராளமான செயற்கை வேதிப் பொருட்கள் பெண்களின் உடலில் கலந்துவிடுவதாக ஓர் அறிக்கை கூறுகிறது.

தாய்க்கும் தாயிலிருந்து பிறக்கும் குழந்தைக்கும் இந்த வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. நஞ்சுக்கொடியிலிருந்து எடுத்த ஆய்வு மாதிரிகள் 230க்கும் மேற்பட்ட செயற்கை வேதிப்பொருட்கள் கலந்திருப்பதைக் காட்டின.

எனவே, சுற்றுச்சூழலைச் சீர்கெடுப்பது என்பது மகளிருக்கு எதிரான யுத்தம் என்றே சொல்ல முடியும். உடல் நலனுக்குத் தீங்கிழைக்கும் நுகர்வுப் பொருட்களுக்குப் பெரும்பன்மையான பெண்கள் அடிமையாகிவரும் நிலையில், இது பெண்கள் தமக்கு எதிராகத் தொடுத்துக்கொள்ளும் யுத்தமாகவே இருக்கிறது.

தாய்நாடு, தாய்மண், இயற்கை அன்னை என்று நாம் பயன்படுத்தும் சொற்களில் பெண்மைக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவை அடையாளம் காண முடியும். அத்தகைய இயற்கையை வளர்க்க நாம் சிறு சிறு முயற்சிகள் மேற்கொள்வது சாத்தியமே.

சுத்தமான குடிநீர், மாசில்லாத காற்று போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தீர்வு மரம் வளர்ப்பதுதான் எனக் கூறுகிறார் 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வாங்காரி மாத்தாய். இவர் கென்யாவில் சுமார் 300 கோடி மரக்கன்றுகளை நட்டு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமுன்ட் மாவட்டத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போதும் அதனைக் கொண்டாடும் விதமாக அங்கு 111 மரங்கள் நடப்படுக்கின்றன. இவை அனைத்தும் குறிப்பது ஒர் எளிய விஷயம். நம்மை இயற்கை பாதுகாப்பதைவிட, நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதேதான்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close