[X] Close

சுருங்கும் வனங்களால் குன்றும் மலையரசியின் வளம்


ooty-concrete-jungle

கட்டுமான வளர்ச்சியால் கான்கிரீட் காடாக காணப்படும் உதகை நகரம்.

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 15:14 pm
  • அ+ அ-

சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஐ.நா. அமைப்பால் 1972-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 55 சதவீத பரப்பளவு வனங்களைக் கொண்ட நீலகிரி மாவட்டம், திட்டமிடப்படாத வளர்ச்சி, சுருங்கும் வனப்பரப்பால் தன் அடையாளத்தை மெல்ல, மெல்ல இழந்து  வருகிறது. 

நாட்டில் 14 உயிர்ச்சூழல் மண்டலங்கள் உள்ளன. பாதுகாப்பு, நில அமைப்பு மற்றும் இயற்கை கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை வைத்து, கடந்த 1986-ம் ஆண்டு நீலகிரியை உயிர்ச்சூழல் மண்டலமாக அறிவித்தது யுனெஸ்கோ. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மூன்று மாநிலங்களின் எல்லையில் 5 ஆயிரத்து 520 சதுர கி.மீ. பரந்து விரிந்துள்ளது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம். இங்கு 3300 வகை பூக்கும் தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 132 வகை அழியும் பட்டியலில் உள்ளவை. 100 வகையான பாலூட்டிகள், 350 வகையான பறவைகள், 80 வகை ஊர்வன மற்றும் நீர், நிலத்தில் வாழக்கூடியவை. 

300 வகையான பட்டாம்பூச்சிகள், 39 வகை மீன் இனங்கள், 31 வகை நீர் மற்றும் நிலத்தில் வாழக் கூடியவை. 60 வகையான ஊர்வன அழியும் தருவாயில் உள்ளன. 1232 வகை தாவரங்கள் உள்ளிட்டவை நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டிலுள்ள புலி மற்றும் யானைகளில் பாதி அளவு, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில் 4 தேசிய பூங்காக்கள், 4 புலிகள் காப்பகங்கள், 3 யானை வாழ்விடங்கள் உள்ளன. வெள்ளி விழா கண்ட பெருமையும் நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலத்துக்கு உண்டு. 

வனத்தை ஒட்டி அதிகரிக்கும் கட்டுமானங்கள், ஓரின பயிர் சாகுபடி, முறைப்படுத்தப்படாத சுற்றுலா உள்ளிட்டவை, நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அடர்ந்த வனங்கள் அருகே விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், வனத்தின் நடுவே செல்லும் நீரோடைகள் மற்றும் குளங்களில் சேர்கின்றன. இதனை அருந்தும் விலங்குகள் பல்வேறு பாதிப்புகளால் மடிகின்றன. இதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதுதொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சு.மனோகரன் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் குன்றுகளில் எல்லாம் வீடுகள். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும் கட்சியினர் உட்பட அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. கனரக இயந்திரங்களால் மலைகள் குடையப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன. இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகக்கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களிலும் கட்டுமானங்கள் நடக்கின்றன. இதனால், நீலகிரி மாவட்டத்திலும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது’ என்றார். 

நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்துவரும் கட்டுமானங்களால், மலையரசியுின் உடல் நலன் குன்றி வருவதாக அபாய எச்சரிக்கை விடுகின்றனர் விஞ்ஞானிகள். 

இந்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டம் மலை பிரதேசம் என்பதால், நீர் சேமிப்பு அமைப்புகள் இல்லை. மழை பெய்தால், மலையில் இருந்து சமவெளிப் பகுதிகளுக்கு நீர் ஓடிவிடும். நீரை சேமிக்க அணை உட்பட பிற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 

நீரை சேமிக்கும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், கட்டுமானங்கள் அதிகரித்து வருவதாலும், மண்ணுக்குள் செல்ல முடியாமல், சேமிக்க முடியாமல் மழை நீர் விரயமாகிறது.

திட்டமிடப்படாத வளர்ச்சி, நீர் சேமிப்பு இல்லாததால் இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கடந்த சில வருடங்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மழையை உற்பத்தி செய்யும் மலைப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே கட்டுமானங்கள் இருக்க வேண்டும். அதை வரையறுக்க சட்டம் இயற்ற வேண்டும். கண்மூடித்தனமான கட்டுமானங்களால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், நீலகிரி மாவட்டமும் சிம்லா நிலைக்கு தள்ளப்படும்’ என்றார்.

- ஆர்.டி.சிவசங்கர்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close