[X] Close

பிளாஸ்டிக் கழிவு தேங்குவதில் தமிழகம் 3-வது இடம்: அடுத்த தலைமுறையினர் தலையில் விழ காத்திருக்கும் அணுகுண்டு


plastic-waste-plastic-pollution

வைகை வடகரையோரம் கொட்டப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள்.

  • kamadenu
  • Posted: 05 Jun, 2018 14:50 pm
  • அ+ அ-

உலக சுற்றுச்சூழல் நாள் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ‘பிளாஸ்டிக்கை தோற்கடிப்போம், தூக்கி எறிவோம்’, என்ற கருத்தை முன்நிறுத்தி உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும், இந்த தினத்தை ஒரு நாடு தலைமையேற்று நடத்தும். இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, கேட்டுக் கொண்டதால் இந்தியாவின் தலைமையில் உலக சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், அதிகம் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாகவும் இருப்பதால் இந்தியா இந்த நாளைக் கொண்டாட இன்னொரு முக்கிய காரணம்.

எளிதாகவும், விலை குறைவாகவும் கிடைப்பதாலேயே மக்கள் பிளாஸ்டிக்கை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பல் துலக்குவதில் ஆரம்பித்து காய்கறிகள், பால், ஜவுளிக்கடை, மருந்துக் கடை, எலக்ட்ரிக்கல் பொருட்கள், மளிகைப் பொருட்கள், புரோட்டா கடை, டீ கடை வரை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத இடமே இல்லை. ஒரு பிளாஸ்டிக் ஸ்ட்ரா மக்குவதற்கு 400 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மற்ற பிளாஸ்டிக் அழிய 1000 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். மனிதர்களின் ஆயுட்காலம் குறுகியதுதான். ஆனால் பிளாஸ்டிக் அழியாமல் இருக்கும். அதன் விபரீதம் தெரியாமல் உலக சுற்றுச்சூழல் நாளை பெயரளவுக்கு கொண்டாடி, அன்றைய நாளை கடந்து செல்கிறோம். 

ஆனால், மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், பசுமை சங்க செயலாளருமான ராஜேஷ் தலைமையில் அவரது மாணவர்கள் ஆண்டு முழுவதும் விடுமுறை நாட்களில் மலைப் பிரதேசங்களுக்கு சென்று அங்குள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி வனவிலங்குகள், தாவரங்கள், காடுகளுடைய வாழ்வாதாரத்தை முடிந்தளவு காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். 

அவரிடம் பேசினோம். 

இந்தியாவில் ஆண்டுக்கு 56 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் 6 ஆயிரம் டன் சேகரிக்க முடியாமல் மண்ணில் புதைந்து கிடக்கின்றன. இதில், தமிழகம் மூன்றாவது இடம். முதல் இடத்தை மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தை குஜராத்தும் பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 323 டன், மகாராஷ்டிராவில் 4.5 லட்சம் டன், குஜராத்தில் 2.7 லட்சம் டன் உருவாகிறது. பிளாஸ்டிக்கில் 7 வகைகள் உள்ளன.

அதிக அடர்த்தி உள்ள பாலி எத்திலின், குளிர்பானங்கள் அடைக்கப்பட்ட பாட்டிலாகவும், குறைந்த அடர்த்தி உள்ள பாலி எத்திலின் கேரி பேக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பாலி எத்திலின் டெரித்தாலேத் குளிர்பானம், குடிநீர் பாட்டில்களாகவும், பாலி புரோபலின், குளிர் பானம் உறிஞ்சும் ஸ்ட்ராவாகவும், பாலீஸ் டைரின் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் பைகளாகவும், பாலிவினைல் குளோரைடு காப்பர் வயராகவும், பாலி கார்பனேட் குறுந்தகடுகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

இதில், பாலி எத்திலின் டெரித்தாலேத், பாலி புரோபலின், பாலி எத்தலின் ஆகிய வகை பிளாஸ்டிக்குகள் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. 

பாலி கார்பனேட், பாலீஸ் டைரின், பாலி வினைல் குளோரைடு வகை பிளாஸ்டிக்குகள், நச்சு பொருட்களை அதிகம் வெளியிடுபவை. சர்வதேச அளவில் 8.3 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது. இதில், 6.3 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளாக பூமியில் சேருகிறது. 9 சதவீதம் மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறோம். 12 சதவீதம் எரித்து விடுகிறோம். மீதமுள்ள 79 சதவீதம் நிலத்தில் கொட்டுகிறோம்.

இப்படியே தொடர்ந்தால், 2050-ல் அடுத்த தலைமுறையினருக்கு அணுகுண்டைவிட மோசமான பாதிப்பை பிளாஸ்டிக் ஏற்படுத்தும். ஒரு ஆண்டுக்கு 13 மில்லியன் டன் பிளாஸ்டிக் கடலுக்கு செல்வதால், கடல் பறவைகள், கடல் ஆமைகள், சீல், திமிங்கலம், மீன்கள் அதிகம் இறக்கின்றன. 

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடும் மீன்களுக்கு அவை ஜீரணம் ஆகாமல் உடலிலேயே தங்கி விடுகின்றன. உணவுச் சங்கிலி முறையில் அந்த மீனைச் சாப்பிடும் மனிதனுடைய உறுப்புகளை சிதைக்கின்றன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்

 சூடான சால்னா, சாம்பார், டீயை பிளாஸ்டிக் பையில் கட்டி எடுத்து வரும்போது வெப்பத்தால் அந்த பிளாஸ்டிக்கில் இருக்கக்கூடிய கெமிக்கல்கள் அந்த உணவுப் பொருட்களில் கலக்கிறது. அது உடலில் சென்றால் ஆண்களுக்கு மலட்டுத் தன்மை உண்டாக்குகிறது. எல்லோருக்கும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இதய சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. விரைவாக பூப்படைதல், உடல் பருமனுக்கும் இந்த கெமிக்கல்தான் காரணம். கடைகளுக்கு செல்லும்போது, பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்வது, மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது, பயன்படுத்திய பிளாஸ்டிக்கை சேகரித்து அழிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும் என்றார் உதவிப் பேராசிரியர் ராஜேஷ். 

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close