[X] Close

தாந்தநாடு பேரிக்காயும் நான்கு கரடிகளும்!


thathanadu-perikkai-and-four-bears

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:46 am
  • அ+ அ-

அண்மையில், நீலகிரி தேயிலை தோட்டக் கிணற்றின் தடுப்புச்சுவரின் மீது 2 கரடிகள் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்தக் கரடிகள்தான் ஊட்டியின் பேரிக்காய் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இப்போது மாஸ்டர் வில்லன்!

மிதமான வெப்பம் உள்ள குளிர் பிரதேசங்களில் விளையும் ஏழைகளின் ஆப்பிளான பேரிக்காய், தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் ஒருகாலத்தில் கணிசமாக விளைந்தது. ஆனால், இப்போது இந்த விளைச்சல் வெகுவாகச் சரிந்துவிட்டது. உதாரணத்துக்கு, நீலகிரியின் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் முன்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேரிக்காய் மரங்கள் இருந்தன. இது, இப்போது மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. ஜூன் முதல் செப்டம்பர் வரை காய்க்கும் பேரிக்காய்கள் முன்பு, ஒரு மரத்துக்கு சுமார் 100 கிலோ வரை கிடைத்தன. இப்போது, 25 கிலோ எடுப்பதே பெரும்பாடாய் இருக்கிறது.

மகசூல் குறையக் காரணம்

இப்படி மகசூல் குறைந்துபோனதற்கு முக்கியக் காரணமே வன விலங்குகள்தான் என்கின்றனர் பேரிக்காய் மகசூல் எடுப்பவர்கள். இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் சுட்டிக் காட்டியிருக்கும் அந்த இரண்டு கரடிகளும் அதோடு சேர்ந்த இன்னும் இரண்டு கரடிகளும் தாந்தநாடு பகுதி பேரிக்காய் விவசாயிகளை உண்டு, இல்லை என படுத்தி எடுத்துக்கொண்டிருக்கின்றன.

அதுகுறித்த தமது அனுபவத்தை வெளிப்படுத்தினார் இந்த தொழிலில் 20 ஆண்டுகளாக இருக்கும் கோத்தகிரி எம்.கனி. (இவர்தான் அந்த 2 கரடிகளை வீடியோ எடுத்தவர்) “ஒரு மரத்துக்கு வருஷத்துக்கு ஆயிரம் ரூபாய் வீதம் குத்தகை பேசி, தாந்தநாடு பகுதியில் 20 ஏக்கர் சுற்றுப் பரப்புல இருக்கிற ஐநூறு மரங்களை குத்தகைக்கு எடுத்திருக்கேன்.  என்னைவிட சிறிய குத்தகைதாரர்களும் இங்கே இருக்காங்க.

கரடிகள் ஒருபடி மேல

முன்பெல்லாம் இந்தப் பகுதியில குரங்குகள் தொல்லையோ காட்டு மாடுகள் தொல்லையோ அதிகமா இருக்காது. ஆனா, இப்பெல்லாம் மாடுகளும் குரங்குகளும் நூத்துக் கணக்குல சுத்துது. போதாக் குறைக்கு, நாலு கரடிகளும் நம்மள படுத்தி எடுக்குதுங்க. குரங்குகள் மரமேறி பேரிக்காய்களை காலி செய்யுதுன்னா, காட்டு மாடுகள் மரங்களை முறிச்சுக் காய்களச் சாப்பிடுது. கரடிகள் இது ரெண்டுத்துக்கும் ஒருபடி மேல. தினமும் 100 கிலோவுக்கு குறையாம பேரிக்காய்களை சாப்பிட்டு முடிச்சுடுது. குரங்குகளும் கரடிகளும் சேதப்படுத்துற பேரிக்காய்கள் அதுக சாப்பிடறதைவிட அதிகம்.

ஃபாரஸ்ட்டுல பல தடவை சொல்லியாச்சு. அவங்க நடவடிக்கை எடுக்கிற மாதிரி இல்லை. அதனால, ராத்திரி, பகல்ன்னு கரடி விரட்டறதுக்குன்னே நாலு பேரை காவலுக்கு வெச்சிருக்கோம். காட்டுமாடுகளாச்சும் துரத்தினா ஓடீடுது. ஆனா, கரடிகள் சீறிட்டு வருது. பயத்தோடவே அதுகள விரட்ட வேண்டியிருக்கு.

கரடிகள் சேதப்படுத்துறதையும் அதுகள விரட்ட குடுக்கும் கூலியையும் கணக்குப் போட்டா, கிடைக்கிற லாபத்துல 60 சதவீதம் காலியாகிருது. இப்படியே போனா, இந்தத் தொழில்ல நீடிக்கிறதே கஷ்டம்” என்று வேதனைப்பட்டார் கனி

சட்டி பேரி கிலோ ரூ.20 முதல் 25 வரையிலும் மற்ற பேரிக்காய்கள் கிலோ நாற்பது ரூபாய்க்கும் அடக்க மாகவே விற்கிறதாம். இதில், பறிக்கும் கூலியாக கிலோவுக்கு 16 ரூபாய் போய்விடுகிறதாம்.

இத்தோடு கரடி விரட்டும் கூலியையும் விலங்குகள் சேதப்படுத்தும் பேரிக்காய்களின் மதிப்பையும் சேர்த்துக் கழித் தால் எங்களுக்கு என்னதான் மிஞ்சும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் பேரிக்காய் மகசூல் எடுப்பவர்கள்.

நியாயம்தானே!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close