[X] Close

‘தலைகீழாக நின்றாலும் தரமாட்டார்’ - பாலித்தீன் மறுக்கும் பாலசுப்பிரமணியன்


shop-owner-denies-polythene

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:34 am
  • அ+ அ-

ஒன்பது ரூபாய் எண்ணெய்க்கு பத்து ரூபாய்க்கு டப்பா வாங்கிட்டு வரச்சொன்னா எப்படி இருக்கும்? பாலித்தீன் மறுப்பில் தீவிரமாய் இருக்கும் பாலசுப்பிரமணியன் எண்ணெய்க் கடையில இதுதான் நடக்குது. ‘தி இந்து’ உங்கள் குரலில் இப்படியொரு தகவலை வாசகர் ஒருவர் பதிவு செய்திருந்தார். கேட்கவே விநோதமாக இருந்தது. உடனே கிளம்பிவிட்டோம் திருவாரூருக்கு.

200 பாலித்தீன் கவர்களையாவது..

திருவாரூர் நகரின் மையமான வணிகப் பகுதியில் இருக்கிறது பாலசுப்பிரமணியனின் அருண் ஆயில் ஸ்டோர். பேருக்குத்தான் அது ஸ்டோர். வெளியிலிருந்து பார்த்தால் அது ஒரு பெட்டிக்கடைதான். பகட்டான விளம்பரங்கள் பேசும் பளபளக்கும் எண்ணெய் பாக்கெட்களை ஒதுக்கிவிட்டு இந்தப் பெட்டிக்கடையைத் தேடி கையில் பாத்திரத்தோடு படையெடுக்கிறார்கள் மக்கள். கையில் பாத்திரத்தோடு என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா? அங்குதான் நிற்கிறார் நம்ம பாலசுப்பிர மணியன். கையில் ஏதாவது பாத்திரமோ, பாட்டிலோ கொண்டுவந்தால் தான் இவரது கடையில் எண்ணெய் கிடைக்கும். தலைகீழாய் நின்று கேட்டாலும் பாலித்தீன் பைகளில் எண்ணெய் தரமாட்டார் இவர்.

“பாலித்தீன் குறித்து இன்றைக்கு இவ்ளோ விழிப்புணர்வு இருக்கு. ஆனா, பாலித்தீன் பைகள் புழக்கத்துக்கு வந்த காலத்திலிருந்தே அதை நாங்கள் பயன்படுத்துறதில்லை; காரணம், பொதுநலன் தான்” என்று சொல்லும் பாலசுப்பிரமணியன், “பாலித்தீன் தயாரிப்புகள் சுற்றுச் சூழலுக்கு பெரும் கேட்டை உண்டாக்குது. அதனால, வியாபாரமே நடக்காட்டியும் பரவாயில்ல, பாலித்தீன் பைகள்ல எண்ணெய் தரக்கூடாதுன்னு தீர்மானமா இருக்கோம்.

இந்த முடிவால ஒரு நாளைக்கு 200 பாலித்தீன் கவர்களையாவது நம்மால் புழக்கத்திலிருந்து தடுக்கமுடியுதே என்ற ஆத்ம திருப்தி எங்களுக்கு. கடைக்கு வர்றவங்கள்ல சிலபேரு, பிராண்டடு கம்பெனிகளோட எண்ணெயும் கேக்கு றாங்க. அதனாலதான் அந்த கம்பெனிகளோட பாக்கெட் எண்ணெய்களை வாங்கி வெச்சிருக்கோம். ஆனா, இயற்கை முறையில் நாங்க ஆட்டி விற்கும் எண்ணெயை ஒருகாலும் பாலித்தீன் பாக்கெட்டுல குடுக்கிறதில்லை” என்கிறார் பாலசுப்பிரமணியன்.

டப்பா வாங்கிட்டு வாங்க

இவரது கடையில், எவர்சில்வர் டிரம்களில்தான் எண்ணெய்களை வைத்துள்ளனர். அளந்து ஊற்ற அலுமினிய அளவுக் குவளை. பாலித்தீன் பைகளில் தர மாட்டார்கள் என்பதால் எண்ணெய் வாங்க வருபவர்கள் பாத்தி (அ) பாட்டிலோடு வந்துவிடுகிறார்கள். நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே, வெறும் கையுடன் அங்கு வந்த நபர் ஒருவர், 50 மில்லி தேங்காய் எண்ணெய் கேட்கிறார். கொஞ்சமும் யோசிக்காத பாலசுப்பிரமணியன் எதிர் திசையிலிருந்த கடையைக் காட்டி, ‘அங்க போயி டப்பா வாங்கிட்டு வாங்க’ என்று திருப்பிவிட்டார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய அவரது மகன் அருண், ”கூடுதலான ரூபாய்க்கு வாங்கினால்தான் அது தரமான எண்ணெய்னு மக்கள் நினைக்கிறாங்க. விலைகூடுதலா விற்கிற எண்ணெய்யெல்லாமே தரமான எண்ணெய் கிடையாதுன்னு மக்கள் புரிஞ்சுக்கணும். எங்களால லிட்டர் 150 ரூபாய்க்கு தரமான நல்லெண்ணெயைத் தரமுடியும். எங்களோட தயாரிப்பை நாங்க பகட்டான பாக்கெட்டுகள்ல அடைச்சு பந்தா காட்டுறதில்லை.

அதுபோல, இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெருசா விளம்பரச் செலவும் பண்ணிக்கிறதில்லை. ஆனா, இதையெல்லாம் செய்யுற பிரபல கம்பெனிகள் அந்த செலவை எல்லாம் மக்கள்கிட்ட இருந்து மறைமுகமா பறிச்சிக்கிறாங்க. இது தெரியாம மக்களும் போய் விழுறாங்க. ஆனா, இந்த விஷயத்துல இப்ப மெதுவா விழிப்புணர்வு வந்துட்டு இருக்கு. நகரத்துல இருக்கவங்களும் இப்ப செக்கு எண்ணெய்களைத் தேடித் தேடி வாங்க ஆரம்பிச்சுருக்காங்க” என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close