[X] Close

வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு வருகை தந்த  100-வது வகை வண்ணத்துப்பூச்சி: கூரான பிசிருயிர் நீலன்


srirangam-butterfly-park

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 100-வது வகை வண்ணத்துப்பூச்சியாக அடையாளம் காணப்பட்ட 'கூரான பிசிருயிர் நீலன்' வண்ணத்துப்பூச்சி

  • kamadenu
  • Posted: 22 May, 2018 12:34 pm
  • அ+ அ-

ஸ்ரீரங்கம் அருகே உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வருகைதந்த 100-வது வகை வண்ணத்துப்பூச்சியாக 'கூரான பிசிருயிர் நீலன்' அடையாளம் காணப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் 27 ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  இப்பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை குடில்கள், குழந்தைகளுக்கான படகு குழாம், பார்வையாளர்கள் சுற்றி வர 4 கி.மீ. தொலைவுக்கு நடைபாதைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத் தப்பட்டுள்ளன.

ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காக்களுள் ஒன்றாக விளங்குவதால் இங்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக அதிகளவில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால், பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 7 லட்சத்தை தாண்டியது.

தேடி வரும் வண்ணத்துப்பூச்சிகள்

தொடக்கத்தில் 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் மட்டுமே இப்பூங்காவில் இருந்தன. இங்கு வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் நோக்கில், அவை மிகவும் விரும்பக்கூடிய எருக்கு, கறிவேப்பிலை, எலுமிச்சை, ஆமணக்கு, வில்வம், செண்பக மரம், வெட்சிப்பூ, தலைவெட்டிப்பூ, நாயுருவி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டன. 

இதனால், பிற பகுதிகளில் இருந்து சில்வர் ராயல், கிராஜ்ஷூவல், கிரிம்ன்ஸன் ரோஸ், சதர்ன் பேர்டு விங், ப்ளூ மார்மன், காமன் டெசிபல் போன்ற முக்கியமான வகைகள் உட்பட ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் இங்கு வரத் தொடங்கின. இவை ஒவ்வொன்றையும் வனத்துறையினரும், வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளர்களும் இணைந்து படம்பிடித்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இங்கு வந்த 100-வது வகை வண்ணத்துப்பூச்சி இரு தினங்களுக்கு முன் அடையாளம் காணப்பட்டது. ‘கூரான பிசிருயிர் நீலன்’ (pointed ciliate blue) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சியை சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் எம்.எஸ்.சி விலங்கியல் படிக்கும் மாணவர் ஜி.கிரிஃபித் விக்டர் படம்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனது படிப்பின் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் ஒருமாத கால ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறேன். அப்போது, இந்த வகை வண்ணத்துப்பூச்சி அடையாளம் காணப்பட்டது” என்றார்.

பொதுமக்களும் பங்கேற்கலாம்

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிடம் கேட்டபோது, “பூங்காவுக்கு வரக்கூடிய வண்ணத்துப்பூச்சி வகைகளை ஆவணப்படுத்தும் பணியில் வனத்துறையினர், ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவிகள் அடங்கிய குழுவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். தாங்கள் கண்டறியும் வண்ணத்துப்பூச்சி வகை, புதிதாக இருக்கும்பட்சத்தில் அடையாளப்படுத்துபவரின் பெயரும் ஆவணத்தில் இடம்பெறும். தற்போது சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் 100-வது வகையைக் கண்டறிந்துள்ளார். இப்பணி தொடரும்” என்றார்.

பல்லுயிர் பெருக்கத்துக்கு சிறந்த இடம்

கோவையைச் சேர்ந்த ‘ஆக்ட் பார் பட்டர்ஃபிளைஸ்’ அமைப்பின் நிறுவனர் பி.மோகன்பிரசாத் கூறும்போது, “100-வது வகையான ‘கூரான பிசிருயிர் நீலன்’ வண்ணத்துப்பூச்சி பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில்தான் காணப்படும். இந்த வகை வண்ணத்துப்பூச்சி, தற்போது ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. வனத்துறையுடன் இணைந்து நாங்கள் நடத்திய ஆராய்ச்சி மற்றும் கணக்கெடுப்பு மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 312 வகையான வண்ணத்துப்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 100 வகையான வண்ணத்துப்பூச்சிகள் ஸ்ரீரங்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவை மேம்படுத்த தமிழ்நாடு அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால், நாட்டில் பல்லுயிர் பெருக்கத்துக்கான மிகச்சிறந்த தலமாக இது மாறும் என்பதில் சந்தேகமில்லை” என்றார். சர்வதேச பல்லுயிர் பன்ம தினமான இன்று (மே 22), வண்ணத்துப்பூச்சி பூங்காவின் 100-வது வகை வண்ணத்துப்பூச்சி குறித்த அறிவிப்பை வெளியிட மாவட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

.வேலுச்சாமி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close