[X] Close

ஆறு பேர் கண்ட அன்ன வயல்: இயற்கை விவசாயத்தை போற்றும் இளைஞர்கள்!


anna-vayal-team-story

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:21 am
  • அ+ அ-

இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தவும், அவர்களே அவர்களுடைய பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளவும் இயற்கை விவசாயிகள் ஆறு பேர் சேர்ந்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், ‘அன்ன வயல்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

கேரளத்தில், பூச்சிக்கொல்லி மிகுந்திருக்கும் காய் கறிகளுக்கு தடை. சிக்கிம் மாநிலத்தை முழுமையான இயற்கை விவசாய மாநிலமாக்கிவிட்டார் அதன் முதல்வர். கர்நாடகாவும் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டது. சத்தீஸ்கரின் தம்தரி மாவட்டத்தில் 100 கிராமங்களை தத்தெடுத்து இயற்கை முறையில் பயிர்களை விளைவிக்கும் திட்டத்தை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. தெலங்கானாவில் இயற்கை விவசாயத்துக்கான தனி பல்கலைக் கழகத்தையே அறிவித்து, பணிகளைத் தொடங்கிவிட்டார்கள்.

அன்ன வயல்

இப்படி, பல மாநிலங்களில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், தமிழகத்தின் விவசாயக் கொள்கை இன்னமும் ரசாயனம் சார்ந்தே இருக்கிறது. அதிலிருந்து விவசாயிகளையும், எதிர்கால தலைமுறையையும் மீட்டெடுக்கவே, இந்த ஆறு பேரும் ‘அன்ன வயல்’ அமைப்பை உருவாக்கியதாகச் சொல்கின்றனர்.

“இதன்மூலம், அடுத்த தலைமுறைக்கும் இயற்கை விவசாயத்தின் அருமை பெருமைகளைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்” என்று சொல்லும் இவர்கள், “இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நீர் மேலாண்மையைச் சொல்லித் தருதல், பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்தால், இயற்கை விவசாயத்தை பரவலாக்குதல் - இவற்றின் மூலம் உணவே மருந்து என்ற மந்திரத்தை மக்களை உச்சரிக்க வைப்பது. இதுதான் எங்களது நோக்கம்” என்கிறார்கள்.

விடுமுறை விவசாயிகள்

தங்களது இந்தத் திட்டத்தைச் செயலாக்கம் செய்வதற்காக மதுரை - திருமங்கலத்தில் 10 ஏக்கர் வானம் பார்த்த பூமியில் இயற்கை விவசாயப் பண்ணையை உருவாக்கியுள்ளனர். தற்போது, அதில் 5 ஏக்கரில் காய்கறிகளை இயற்கை விவசாய முறையில் பயிரிட்டுள்ளனர். 3 ஏக்கரில் நாட்டு மரங்களை வளர்த்தும், அதன் நாற்றுகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர். எஞ்சிய 2 ஏக்கரை இயற்கை உரம் தயாரிக்கும் முறைகளையும், சாகுபடி தொழில் நுட்பங்களையும் சொல்லிக்கொடுக்கும் பயிற்சிக் களமாகப் பயன்படுத்துகின்றனர்.

‘விடுமுறை விவசாயிகள்’ என்ற தலைப்பில், மாதத்தில் ஒரு விடுமுறை நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயி களை வரவழைத்துப் பேசுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் கிராம சபா கூட்டம் போல் வட்டமாக அமர்ந்து, ஒருநாள் முழுக்க உரையாடுகின்றனர். ஆரம்பத்தில், இயற்கை விவசாயிகளை மட்டுமே சந்தித்துவந்த இவர்கள், தற்போது இந்தப் பயிற்சிக் கூட்டங்களுக்கு கல்லூரி மாணவர்களையும் அழைக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமங்கலம் அன்ன வயல் வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கான இலவச இயற்கை விவசாய பயிற்சி முகாம் நடைபெற்றது.

என்ன விலை கொடுக்கவும்..

இதுகுறித்து நம்மிடம் பேசிய அன்ன வயல் ஒருங்கிணைப்பாளரான ரவீந்திரன் நடராஜன், “தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை அரசு பெரிதாக முன் னெடுக்கவில்லை. எ்ன்றாலும் விவசாயிகள் மத்தியிலும், நுகர்வோரிடமும் தற்போது இயற்கை விவசாயம் பிரபலமாகி வருகிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களுக்கு மக்கள் என்ன விலை கொடுக்கவும் தயாராய் இருக்கிறார்கள்.

ரசாயன உரம் போட்டு விளைவிப்பதைவிட இயற்கை விவசாயத்தில் செலவு குறைவு. எனினும், இயற்கை விவசாயத்தில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. தேவைக்கு அதிகமாக ஓரிடத்தில் காய்கறி விளைச்சல் இருக்கும். இன்னொரு இடத்தில் அவை பற்றாக்குறையாக இருக்கும். தேவையைவிட அதிகமுள்ள இடத்திலிருந்து தேவைப்படும் இடத்துக்கு அதை மாற்றிவிட்டால் விவசாயிகள் பாதிக்கமாட்டார்கள். அதற்கு ஏதுவாக, தமிழகம் முழுவதுமிருக்கும் இயற்கை விவசாயிகளுக்கு இடையில் தொடர்பு ஏற்படுத்த அன்ன வயல் கூட்டம் உதவியாக இருக்கிறது.

 

மாணவர்களை நோக்கி..

அதுபோல, விடுமுறை நாட்களில் மாணவர்கள் தேவையற்ற விஷயங்களில் நாட்டம் கொள்கின்றனர். அவர்களை இதுபோன்ற நல்ல விஷயத்தில் ஈடுபடுத்தவும் வேளாண் சார்ந்து படிக்கும் மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தை சொல்லிக் கொடுக்கவும் அவர்களையும் இந்தக் கூட்டங்களுக்கு அழைக்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்காக நாங்கள் நடத்தும் இயற்கை வேளாண்மை பயிற்சிகளில், நாட்டு விதைகள் குறித்தும் இயற்கை விவசாயத்தில் பலன் தரும் காய்கனிகளை பயிரிடும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விளை நிலத்தில் வைத்தே சொல்லித் தருகிறோம்.” என்றார்.

தொடர்ந்து பேசிய இன்னொரு ஒருங்கிணைப்பாளரான காளிதாஸ், ”இயற்கை விவசாயத்தால் ஈர்க்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜெயசந்திரா ராஜசிம்மனும் அவரது குடும்பத்தினரும் அளித்த உதவியால் தான் இந்த அன்னவயல் அமைப்பு மலர்ந்தது. இயற்கை விவசாயத்தை சரியான முறையில் செய்தால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது விவசாயிகளிடம் வந்துள்ளது.

ஆனால், பெரும் தொழில் அரங்குகளை உருவாக்குவதில் அரசுக்கு இருக்கும் ஆர்வம் இயற்கை விவசாயத்தின் மீது இல்லை. நமது கிராமங்களின் வாழ்வாதாரம் விவசாயம் சார்ந்தே இருக்கிறது. இதை இப்போதாவது புரிந்துகொண்டு விவசாயத்துக்கு, அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்துக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க முன்வரவேண்டும்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close