[X] Close

இளையராஜாவுக்காக காத்திருக்கும் ‘அருந்தமிழ் காடு’: கானக மனிதரின் காணொலிக் காவியம்!


documentry-about-forest

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:20 am
  • அ+ அ-

கானக மனிதர் மோகன்ராமைப் பார்த்தால் பொறாமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆதி மனிதனைப்போல வாழ்கிறார். ஆம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான நாட்களை பொதிகை மலை காட்டுக்குள்ளேயே கழித்திருக்கிறார்; இன்னமும் முழுமையாக காட்டைவிட்டு அவர் வெளியில் வரவில்லை!

அருந்தமிழ் காடு      

கானக சுற்றுலா அல்ல; இயற்கையைக் காக்கும் அவரது கடும் உழைப்பு இது. பொதிகை மலையின் அடர் வனங்களுக்குள் சென்று அதன் உயிர் பன்மைத் தன்மை, அரியவகை உயிரினங்கள், தாவரங்கள், தாமிரபரணி ஆற்றில் வாழும் அரிய உயிரினங்கள் ஆகியவற்றை தனது கேமராவில் பதிவு செய்து வருகிறார் மோகன்ராம். இவ்வாறு பதிவு செய்த சுமார் 24,000 படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகளை ‘அருந்தமிழ் காடு’ என்ற தலைப்பில் மூன்றரை மணி நேர ஆவணப்படமாகத் தயாரித்திருக்கிறார் இவர்!

சென்னையில் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் தோட்டம் அமைத்துத் தரும் தொழில் செய்துவந்தவர் மோகன்ராம். ஒருகட்டத்தில், இயந்திரமயமான வாழ்க்கை சலிக்கவே, 10 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லைச் சீமைக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து தான் இவரது நாட்டம் பொதிகை மலை குறித்த ஆய்வுப் பணிகளில் திரும்பியது.

5,000 மைல்கள்

“களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகம், திருநெல்வேலி காப்புக்காடு, கன்னியாகுமரி சரணாலயம், கேரளத்தின் நெய்யாறு, பெப்பாரா, செந்துறுனி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது பொதிகை மலை. ஆவணப் படத்துக்காக நாகப் பொதிகை, ஐந்து பொதிகை, அடுக்குக்கல் பாறை, செம்மூஞ்சி, அப்பர் கோதையாறு, காளிப்பாறை, குரங்கன் பாறை, காப்பாச்சி, பாண்டியம்மா கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 மைல்கள் நடந்து திரிந்துள்ளேன்.” என்கிறார் மோகன்ராம்.

பொதிகை மீதான தனது நாட்டம் குறித்து மேலும் பேசிய அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு அட்டையாறு பகுதியில் மிக அருகில் ராஜநாகத்தை நேருக்கு நேர் பார்த்தேன். சில நொடிகள் எங்கள் கண்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. பின்பு, அது அமைதியாக கடந்து சென்றுவிட்டது. இதேபோல, ஆறடி இடைவெளியில் சிறுத்தையை எதிர்க் கொண்டேன். ஆறுகளைக் கடக்கையில் முதலைகள் என்னை நெருங்கிச் சென்றதுண்டு.

எதற்காக இவ்வளவு மெனக்கெடுகிறீர்கள் என்கிறார்கள். பொதிகை குறித்து பெரிதாக எந்த ஆவணமும் நம்மிடமில்லை. அதனால்தான், ஆபத்துக்கள் இருந்தாலும் இயற்கையை நம்பி இப்பணியைச் செய்கிறேன். எதிர்காலத்தில் இதைப் பார்க்கும் தலைமுறையினர் இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பெறுவார்கள்.

 

எடிட்டர் லெனின், பாலுமகேந்திரா

எனது ஆய்வில், ஒருகாலத்தில் பொதிகையின் தாமிரபரணியின் நதிக்குள்ளேயே சில இடங்களில் நெருப்பு குழம்பு ஓடியதற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. பொதிகையின் பின்புறத்தில் கேரளத்தின் அதர்மலா பகுதி. இங்கிருந்த வனமானது இயற்கைச் சீற்றத்தால் முற்றிலுமாக அழிந்து, பின்பு பறவைகளின் விதைப் பரவலால் மீண்டும் உருவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. பொதிகை மலை சிகரத்தின் கல்லை கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது 400 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது தெரிந்தது.

கை பெருவிரல் அளவுள்ள காட்டுக் கொசு, பூச்சிகளை உண்ணும் தாவரங்கள், பொதிகை வனத்தின் தாமிரபரணியில் மட்டுமே வாழும் அரிய வகை மீன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரினங்களையும் தாவரங்களையும் ஆவணப் படத்தில் பதிவு செய்துள்ளேன். படத்தின் பல இடங்களில் தும்பியின் ரீங்காரம், எறும்பு ஊரும் சத்தம், பறவைகளின் குரல்கள் மற்றும் சிறகசைப்பு, நதியின் ஓசை உள்ளிட்டவைகளை பதிவு செய்துள்ளோம்.

இந்த ஆவணப் படத்தை எடிட்டர் லெனின் எடிட் செய்துள்ளார். இதுவரை சுமார் ரூ. 50 லட்சம் செலவாகியுள்ளது. பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் அனுமதி கேட்டுக் காத்திருக்கிறேன். ‘அருந்தமிழ் காடு’ ஆவணப் படத்தை பார்த்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா, ‘சாத்தியம் இல்லாத விஷயத்தை சாத்தியமாக்கியுள்ளீர்கள்.’ என்றார். இயக்குநர் நாகா, மறைந்த பாலகைலாசம் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்க பெரிதும் ஊக்கமளித்தனர். எஞ்சியிருக்கும் 10 சதவீதப் பணிகள் முடிந்தவுடன் விரைவில் அருந்தமிழ் காடு காணொலி வெளியாகும்.” என்றார்.

வாழ்த்துக்கள் மோகன்ராம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close