[X] Close

பச்சைக் குடிலில் திருமணம்.. பஞ்சகல்யாணியில் ஊர்வலம்..!- பாரம்பரியத்தை மறக்காத ராஜகம்பளத்து நாயக்கர்கள்


rajakambalathu-nayakkars-marriage

  • Team
  • Posted: 02 Mar, 2018 05:09 am
  • அ+ அ-

ஆகாயத்திலும், ஆழ்கடலிலும் திருமணம் நடத்தி ஆடம்பரம் காட்டும் இந்தக் காலத்தில், பச்சை குடிலில் திருமணம் நடத்தும் தங்களது பாரம்பரிய வழக்கத்தை இன்னமும் விடாமல் கடைபிடித்து வருகிறார்கள் எழுவனம்பட்டியில் வசிக்கும் ராஜகம்பளத்து நாயக்கர்கள்!

   

 

301 நாள்கள் நடந்த திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி கிராமம். இங்கு, ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தவர் 120 குடும் பங்கள் இருக்கிறார்கள். இவர்களது திருமண சடங்குகளைக் கேட்டால் விநோதமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. அந்தக் காலத்தில், இவர்கள் வீட்டுத் திருமணங்கள் 301 நாட்கள் நடக்குமாம். முதல் குழந்தை பிறக்கும் வரை திருமணச் சடங்குகளும் தொடர்ந்து அதன் பிறகுதான் புகுந்த வீட்டுக்கே புறப்படுவாராம் புதுப்பெண்!

அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது இவர்களின் திருமணங்கள் 5 நாள் விழாவாக சுருங்கிவிட்டன. ஆனாலும், ஊருக்கு மத்தியில் பச்சைக் குடில் அமைத்து திருமணத்தை நடத்தும் தங்களது பாரம்பரியத்தை மட்டும் இன்னமும் மறக்காமல், குலைக்காமல் கடைபிடித்து வருகிறார்கள் இந்த மக்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை இந்த கிராமத்தில் ராஜகம்பளத்து நாயக்கர் வீட்டுத் திருமணம் ஒன்று களைகட்டியது. மணமகன் முத்து; மணமகள் ரம்யா. முன்பு, ஊர் மந்தையாக இருந்து, தற்போது பேருந்து நிலையமாகி இருக்கும் இடத்தில் திருமணத்துக்காக பச்சைக் குடில்களைப் போட்டிருந்தார்கள். பஞ்சகல்யாணி குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு, ராஜகம்பளத்து நாயக்கர்களின் பாரம்பரிய நடனம்.. என அங்கு நடந்த திருமண நிகழ்வுகள், புதிதாய் பார்த்தவர்களுக்கு அதிசயமும் ஆச்சரியமுமாய் இருந்தது.

மாப்பிள்ளை முத்துவின் உறவினரான விஜயனிடம் அவர்களது இந்தத் திருமண நடைமுறைகள் பற்றிக் கேட்டோம். கொண்டாட்டத்துடன் விவரிக்க ஆரம்பித்தார்.

 

புத்தரிசி நெல்லிடித்து..

”திருமணத்துக்கு அஞ்சு நாள் இருக்கவே சடங்குகள் தொடங்கிடும். முதல் நாள், மாப்ள வீட்டார் புத்தரிசி நெல்லிடித்து மாவாக்கி, குல தெய்வத்துக்குப் படைப்பாங்க. அன்றிலிருந்து மூன்றாவது நாள் பொண்ணு வீட்லயும் இதேபோல் படையல் நடக்கும். திருமணத்துக்கு முதல் நாள், மாப்ள வீட்டார், பக்கத்தில்ருக்கிற பெருமாள் மலையிலிருந்து உசிலை மர குச்சிகளையும், பால மரத்துக் கிளைகளையும் வெட்டி எடுத்துட்டு வந்து, ஊர் மந்தையில் பச்சை குடில் கட்டுவாங்க. உசிலை மர குச்சியில் 9 குச்சிகளை ஊன்றி மேலே இலைதழைகளைப் போட்டு ஒரு குடில் அமைப்போம். அது பொண்ணுக் கானது. அதுக்குப் பக்கத்துலயே, பின்பகுதியில் மட்டும் மறைவு வெச்சு இன்னொரு குடில் கட்டுவோம். அது மாப்ளக் குடில்.

பிறகு, குடில்களைச் சுத்தி பால மர இலைகளால் தோரணங்களக் கட்டுவோம். முதல் நாள் மாலை, நாத்தனார் உறவுப் பெண்கள் மாப்ள ஊருக்கு பொண்ண அழைச்சுட்டு வருவாங்க. அப்ப, இரு வீட்டாரும் தங்களோட குடும்பப் பாரம்பரியத்தைச் சொல்லி மங்கள வாழ்த்துப் பாடுவாங்க. திருமணத்தன்னிக்கு அதிகாலையில மாப்ள வீட்டுக்கு பொண்ண அழைச்சுட்டு வருவாங்க. அங்கே, மாப்ளைக்கும் பொண்ணுக்கும் முகம் மட்டுமே தெரியும்படி வெள்ளாடை உடுத்தி, அமர வெச்சிருவாங்க. பின்பு, இருவருக்கு எதிரேயும் வெண்கல தட்டுல பால் ஊற்றி வைப்பாங்க.. உறவினர்களும், ஊர்ப் பெரியவங்களும் வெற்றிலையை எடுத்து அந்தப் பாலில் தொட்டு ரெண்டு பேரையும் வாழ்த்தி ஆசீர்வதிப்பாங்க.

 

பஞ்சகல்யாணி குதிரை

இந்தச் சம்பிரதாயங்கள் முடிஞ்சதும் பொண்ணுக்கு கூரைப்புடவையும், மாப்ளைக்கு மஞ்ச வேட்டியும் உடுத்தி இருவரையும் திருமணம் நடக்குற ஊர் மந்தை பச்சைக் குடிலுக்கு அழைச்சுட்டு வருவாங்க. அப்ப, மாப்ள மஞ்சள் துண்டுல தலைப்பாகை கட்டிருப்பாரு. மந்தையில் அவங்கவங்க குடில்ல இருவரும் அமர்ந்திருக்க, திருமணத்தை நடத்தி வைக்கிற கம்பளி நாயக்கர் சடங்குகள தொடங்குவார்.” என்று நிறுத்திய விஜயன், சற்றே இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

“சுமார் மூணு மணி நேர சடங்குகளுக்குப் பிறகு, உருமி மேளம் முழங்க, (திருமண ஊர்வலங்களுக்கு வரும்) பஞ்சகல்யாணி குதிரை ஆர்ப்பாட்டமா அங்க வரும். மாப்ள அந்தக் குதிரை மேல உக்காந்து மந்தையை மூணு முறை சுத்தி வருவாரு. இறுதியா குதிரை மணமகள் குடிலுக்கு எதிர்ல வந்து நிற்கும். அப்ப, மச்சான் உறவுக்காரர் ஒருத்தரு மாப்ளய குதிரையிலருந்து அலேக்கா தூக்கி அவரோட கால் தரையில் படாதபடிக்கு குடில்ல பொண்ணுக்குப் பக்கத்துல கொண்டுபோய் உக்கார வைப்பாரு

 

உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்

அப்புறமும், ரெண்டு பேருக்கும் பொதுவா சில சடங்குகள் நடக்கும். அது முடிந்ததும் நிறைவா, பொண்ணு கழுத்துல மாப்ள தாலியக் கட்டுவாரு. அப்ப உற்றார் அனைவரும் வாழ்த்துப் பாடல்களைப் பாடுவாங்க. பெண்கள் குலவைபோட்டு ஆர்பரிப்பாங்க. ஒரு வழியா திருமணம் முடிஞ்சதும், இருதரப்பைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், பெரியவங்க என அத்தனை பேரும் ராஜகம்பளத்து நாயக்கர்களோட பாரம்பரிய நடனத்தை ஆடி மணமக்களை மகிழ்விப்பாங்க. இந்த வைபவம் முடிஞ்சதும் மணமக்களை மாப்ள வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயி, எல்லாருக்கும் விருந்து வைப்பாங்க” என்றார் விஜயன்.

கம்பளத்து நாயக்கர் சமூகத்தை பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள காந்தி கிராம பல்லைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர் ஓ.முத்தையா இந்த மக்களின் திருமணச் சடங்குகள் குறித்து நம்மிடம் கூறுகையில், ‘‘என்னதான் இவர்கள் மாடி மேல மாடி வெச்சு வீடு கட்டிய செல்வந்தர்களாக இருந்தாலும் திருமணத்தை பச்சைக் குடிலில்தான் நடத்துவார்கள். கிராமமாக இருந்தால் மந்தையில் நடக்கும். நகரத்தில் மண்டபத்தில் திருமணம் நடந்தாலும் அங்கேயும் பச்சைக் குடில் கட்டாயம் இருக்கும். மொத்தத்தில், இவர்கள் தங்களது பாரம்பரியமிக்க பண்பாட்டை திருமணச் சடங்குகள் வாயிலாக தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்” என்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close