[X] Close

ஆச்சரியப் பள்ளி: கிராமத்தோடு சேர்ந்து வளரும் நெடுவாசல் அரசு தொடக்கப் பள்ளி


neduvasal-school-story

  • Team
  • Posted: 01 Mar, 2018 12:06 pm
  • அ+ அ-

சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராம மக்கள். ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் அரசுப் பள்ளி எவ்வாறு பங்காற்ற முடியும் என்பதற்கு அதே நெடுவாசலில் உள்ள பள்ளிக்கூடம்தான் இன்று இந்தியா முழுமைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

பள்ளிக்குத் தேவையான பொருட்களை கிராம மக்கள் சீர்வரிசையாகக் கொண்டுவந்து கொடுக்கும் நிகழ்வு இன்று தமிழகத்தின் பல பள்ளிகளில் நடைபெறுகிறது. இந்த முறையை தமிழகத்துக்கே அறிமுகம் செய்தது நெடுவாசல் (வடக்கு) கிராமத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான். 2007-ம் ஆண்டிலேயே இன்டர்நெட் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை; 3,800 புத்தகங்களுடன் கூடிய நூலகம்; பள்ளி வளாகத்தில் ஆலமரம், அரசமரம், மகிழமரம், சந்தனமரம் போன்ற 500-க்கும் மேற்பட்ட மரங்களும், அரியவகை மூலிகைகளும் கொண்ட தோட்டம் என இந்த பள்ளியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். கிராமத்தில் தெருவோரங்களிலும், பொது இடங்களிலும் வனத்துறை உதவியுடன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை இந்தப் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் உருவாக்கியுள்ளனர்.

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை நேரத்தில் நவதானியங்கள், வெல்லம் கலந்த திரவ உணவை வழங்கும் ஆசிரியர்கள், இந்த உணவு முறை பற்றி ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட அனைவரும் நவதானிய திரவ உணவு அருந்துவதை இப்போது எல்லா வீடுகளிலும் காண முடியும். இதனால் அவர்களிடம் ரத்தசோகை உள்ளிட்ட குறைபாடுகள் குறைந்து, ஊட்டச்சத்து மிகுந்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பெருமைமிகு பள்ளியில் 2004-ம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார் ஆ.கருப்பையன். அப்போது ஒரு பழைய ஓட்டுக் கட்டிடத்தில் 7 மாணவர்கள் மட்டுமே பயின்றனர். இன்று 4 புதிய கட்டிடங்கள், 3 ஆசிரியர்கள், 86 மாணவர்கள் என பள்ளி வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சி பற்றி தலைமை ஆசிரியர் கருப்பையன் கூறியதாவது:

உள்ளூர் சமுதாயத்தின் பங்கேற்பு இருந்தால்தான் எந்தத் திட்டமும் வெற்றி பெறும் என நம்பினேன். அதனால், தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஆண்டிலேயே ஊர் மக்களின் கூட்டத்தை 11 முறை கூட்டினேன். மக்களின் வசதிகேற்ப, இரவு நேரத்தில் அவர்களது குடியிருப்பு பகுதியிலேயே கூட்டங்களை நடத்தினேன்.

அப்போது பள்ளிக்கூடம் பற்றி பேசவில்லை. சாலைகள், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது பற்றியும், மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கிடைக்கச் செய்வது பற்றியும்தான் பேசினோம். அந்தியோதயா அன்னபூர்ணா திட்டத்தில் 31 குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி கிடைக்கச் செய்தது எங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அமைந்தது. பல்வேறு வகையான குறைபாடுகளுடன் கூடிய 28 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக மாதாந்திர உதவித்தொகை கிடைக்கச் செய்தது அடுத்த வெற்றி.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள்; 36 குடும்பங்களுக்கு தனிநபர் கழிப்பறைகள் கிடைக்கச் செய்தது; இதனால் கிராமத்தில் ஏற்பட்ட சுகாதார மேம்பாட்டை பாராட்டி நமது கிராமம் திட்டத்தின் கீழ் 2005-ம் ஆண்டில் கிராமத்துக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பரிசு கிடைத்தது இன்னொரு வெற்றி.

பள்ளி ஆண்டு விழாவுக்கு மாவட்ட ஆட்சியரை வரவழைத்து, அவர் மூலம் 3 கி.மீ. சாலை வசதி பெற்றது, இடுகாடு வசதி ஏற்படுத்தியது, பள்ளிக்கே வங்கியாளர்களை வரவழைத்து மண்பானைகளிலும், நெற்குதிர்களிலும் தங்கள் உழைப்பின் உபரியை சேமித்து வந்தவர்களுக்கு, வங்கிக் கணக்கு தொடங்கி சேமிப்பை முறைப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் பள்ளிக்கும் மக்களுக்கும் இடையே பிணைப்பை வலுப்படுத்தியது.

1961-ல் இந்த ஊரில் பள்ளி தொடங்கப்பட்டாலும் 2004-ம் ஆண்டு வரை 5-ம் வகுப்பைத் தாண்டிய பெண் குழந்தைகள் 13 பேர் மட்டுமே. அவர்களில் 12-ம் வகுப்பைக் கடந்தவர்கள் 4 பேர் மட்டும்தான். அந்த 4 பேரில் ஒருவரான உஷா என்பவரை முன்னிறுத்தி மேற்கொண்ட தொடர்ச்சியான விழிப்புணர்வு பணிகளால், பெண்களை தொடர்ந்து படிக்க வைப்பது சாத்தியமானது. இதன் காரணமாக, பெண்கள் 15 வயது அடைவதற்கு முன்பே நடைபெற்று வந்த குழந்தை திருமணங்களும் தாமாகவே மறைந்தன.

இத்தகைய பன்முக வளர்ச்சிக்கு, குட்டியம்மாள் போன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்விக் குழு தலைவியாக இருந்த அலமேலு போன்றவர்களின் சமூக அக்கறை மிக்க செயல்பாடுகள்தான் அடித்தளம் இட்டது எனலாம்.

பள்ளிக்கூடம் வளர்ந்தால் ஊரும் வளரும் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், ஊரின் நடுவே அழகான ஆலமரம் அமைந்திருக்கும் இடத்தில் பள்ளிக்கூடம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கருதினேன். இதுபற்றி ஊர் மக்களுடன் விவாதித்தேன். ஆலமரம் அருகே தனியாருக்குச் சொந்தமான 3 ஏக்கர் இடத்தை ஊர் மக்கள் வாங்கிக் கொடுத்தனர். 2007-ம் ஆண்டு புதிய இடத்துக்கு பள்ளிக்கூடம் இடம் மாறியது.

அதன் பிறகு, கல்வித் துறையின் வழிகாட்டுதலோடு ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பிலான பல்வேறு வசதிகளை பள்ளியில் உருவாக்கினோம். பொதுமக்கள் அளித்த நிதி தவிர, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்கள், அரசின் பல்வேறு துறைகள், என்எல்சி, பிஎச்இஎல், ஐஓசி போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் என பலரும் எங்கள் பள்ளி மேம்பாட்டுக்கு உதவி செய்தனர்.

இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.

தலைமை ஆசிரியர் கருப்பையன் போலவே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உதவி ஆசிரியர்கள் டெய்சி ஜெனட், க.சாந்தி ஆகியோர் கிடைத்தது இந்தப் பள்ளியின் வெற்றிப் பயணத்தை வேகப்படுத்தியது எனலாம். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பயிற்சிகள் தவிர, விளையாட்டு வழியில் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான பல்வேறு உத்திகளை இந்தப் பள்ளி ஆசிரியர்கள் சுயமாகவே உருவாக்கியுள்ளனர்.

இன்று வகுப்பறைகளில் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை தினமும் காலையில் ஆசிரியர்கள் கூடி விவாதிப்பது இந்தப் பள்ளியின் தனிச்சிறப்பாக உள்ளது. இத்தகைய திட்டமிட்ட பணிகளால் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் இந்தப் பள்ளி மாணவர்களின் அடைவுத் திறன் மாநில அளவில் சிறப்பாக உள்ளது.

புதினா துவையல், கொத்தமல்லி ரசத்துடன் சத்துணவு வழங்குவதில் அமைப்பாளர் ப.மாலினி ஆர்வமாக உள்ளார்.

இவ்வாறு இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் தங்கள் வேலைகளில் தனித்துவத்தை உருவாக்க தீவிரமாக முயல்கிறார்கள். அவர்களின் இத்தகைய ஆர்வத்தால்தான் நெடுவாசல் கிராமத்தில் உள்ள இந்த அரசுப் பள்ளி தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு அம்சங்களில் இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரிப் பள்ளியாக உயர்ந்து நிற்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close