[X] Close

இந்தியர்களே! உங்கள் மூச்சை இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள்; காற்று மாசுபாடு குறித்த அதிர்ச்சி ஆய்வறிக்கை


india-had-14-out-of-world-s-20-most-polluted-cities-in-terms-of-pm2-5-levels-in-2016-says-who

  • நந்தினி வி
  • Posted: 03 May, 2018 17:37 pm
  • அ+ அ-

சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளை மிகவும் அச்சுறுத்தும் காரணியாக காற்று மாசுபாடு விளங்குகிறது. பெருகும் தொழில்மயமாக்கல், நகரமயமாக்கல், விதிமுறைகளை மீறி கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை ஒன்றுமே செய்யாது வேடிக்கை பார்க்கும் அரசுகள் என, காற்று மாசுபாட்டுக்கு பல காரணங்கள் உண்டு.

சீனாவில் பெய்ஜிங், இந்தியாவில் டெல்லி, சென்னை ஆகிய நகரங்கள் காற்று மாசுபாட்டின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன் காற்று மாசுபாட்டை அளவிடும் காரணியான பிஎம் 2.5-க்கு அதிகமாக காற்றில் மாசு துகள்கள் அதிகரிக்கவே, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிஎம் 2.5 என்பது காற்றிலுள்ள சல்ஃபேட், நைட்ரேட், கார்பன் ஆகியவற்றைக் குறிக்கிறது. இவற்றால், பல உடல்நலக் கேடுகள் உண்டாகின்றன.

ஆட்-ஈவன் (odd-even) முறையில் கார்களை இயக்குதல், பட்டாசுகளின் விற்பனைக்கு தடை என பல விதிமுறைகளை செயல்படுத்தினாலும், டெல்லியில் காற்று மாசுபாடு வேதனைத் தரக்கூடிய வகையிலேயே உள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டை மிகப்பெரும் அச்சுறுத்தலாக எண்ணி, அதற்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய தகுந்த நேரம் இதுதான். இனிமேலும், கால தாமதப்படுத்தினால் காற்று மாசுபாட்டால், மூச்சுக்கோளாறு, நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் என பலவற்றிற்கு நாம் உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருக்கும். அவ்வளவு ஏன்? பெண்களின் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்ற முறையில் இருப்பதற்கு காற்று மாசுபாடும் காரணம் என ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

இதை அறிந்துகொண்ட நீங்கள் உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து அறிந்தால் இன்னும் அச்சப்படுவீர்கள். அதாவது, உலகிலேயே காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 20 நகரங்களில் 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளவை தான்.

கடந்த 2016-ம் ஆண்டில் அளவிடப்பட்ட பிஎம் 2.5 அளவீட்டின்படி இந்த ஆய்வறிக்கையை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளின் நகரங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டெல்லி, வாரணாசி, பரிதாபாத், கயா, பாட்னா, லக்னோ, ஆக்ரா, முசாஃபர்நகர், ஸ்ரீநகர், குர்கோவன், ஜெய்பூர், பாட்டியாலா, கான்பூர், ஜோத்பூர் ஆகிய 14 இந்திய நகரங்கள் தான் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அதேபோல், பிஎம் 10 அளவீட்டின் படி, கடந்த 2016-ல் உலகிலேயே காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட 20 நகரங்களின் பட்டியலில் 13 நகரங்கள் இந்திய நகரங்கள் தான். 

இந்த ஆய்வறிக்கையில் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்களை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. பத்தில் ஒன்பது பேர் மிகவும் மாசடைந்த காற்றைத் தான் சுவாசிக்கின்றனர் என்கிறது அந்த ஆய்வறிக்கை.

உலகளவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் 7 மில்லியன் உயிரிழப்புகளில், 2.4 மில்லியன் உயிரிழப்புகள் இந்தியாவில் மட்டுமே நிகழ்கின்றன என்பது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாம் எவ்வளவு வேகமாக செயலாற்ற வேண்டும் என்பதை உணர்த்துகிறது. காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய், மூச்சு சம்மந்தப்பட்ட நோய்கள், நிமோனியா உள்ளிட்ட சுவாச தொற்று ஆகிய பல்வேறு நோய் தாக்குதலால் இந்த இறப்புகள் ஏற்படுகின்றன.

காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதில் எரிபொருள் பயன்பாடுதான் அதிமுக்கிய காரணம். வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி, ஃப்ரிட்ஜ் முதல், வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை காற்று மாசுபாட்டை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உலகளவில் 40 சதவீத மக்கள் தொகையில் வீடுகளில் ஒழுங்கான எரிபொருள் பயன்பாடு இல்லை. 

எரிபொருளை தனிநபர்கள் முடிந்தளவுக்கு சிக்கனமாகவும், அதனை வீடுகளில் கவனமாக கையாளுதலும் ஓரளவுக்கு காற்று மாசுபாட்டை தடுக்க உதவும்.

காற்று மாசுபாட்டால் நலிவடைந்த மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. அடுப்புகள் மூலம் சமைத்தல், சமையலறையில் அதிக நேரம் செலவிடுதல் ஆகிய காரணங்களால் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுபவர்களில் 3 பில்லியன் பேர் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருக்கின்றனர். 

வீடுகளில் எரிபொருள் சிக்கனம் தவிர்த்து, தொழிற்சாலை மாசு, விவசாயம், போக்குவரத்து ஆகியவற்றில் எரிபொருளை முறையாக கையாளுதல், அனல் மின் நிலையங்கள் ஆகியவற்றில் காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். 

பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close