[X] Close

கோடையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மழை நீரை சிந்தாமல் சிதறாமல் சேமிப்பது எப்படி?


water-preservation

வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு.

  • kamadenu
  • Posted: 02 May, 2018 12:32 pm
  • அ+ அ-

மழை பெய்தால் அந்த தண்ணீர் பூமிக்குள் சென்றுவிடும் என்ற தவறான புரிதலால், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை அமைக்க மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதனால், கோடைக் காலம் வந்துவிட்டாலே குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. 

தமிழகத்தின் பெரும்பாலான நிலம் கிழக்குப் பகுதியை நோக்கி சரிந்துள்ளது. அதனால், பெய்யும் மழை நீர் பெரும்பாலும் பூமிக்குள் செல்லாமல் கடலை நோக்கிச் செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பருவமழை சீராக இருந்தது. அப்போது தமிழகத்தில் மூன்று மாதங்கள் முழுமையாக பருவ மழை பொழிவு இருந்தது. 

மீதமுள்ள ஒன்பது மாதங்களில் ஆங்காங்கே சராசரியாக ஒன்று முதல் இரண்டு மழை பொழிவு இருந்தது. அதனால், நிலத்தடி நீர்மட்டம் பெரியளவில் குறையவில்லை. ஆனால், 2010 - ம் ஆண்டுக்குப் பிறகு முறையான மழைப்பொழிவு இல்லை. சுமார் 2 மாதங்கள் மட்டுமே பருவமழை பெய்கிறது.

பூமிக்கடியில் உள்ள ஊற்றுகள் வறண்டு போய், நீர் செறிவும் ஏற்படவில்லை. அதனால், நீரைத் தேடி தற்போது ஆயிரம் அடிக்கு கீழ் ஆழ்துளைக் கிணறு அமைப்பது சாதாரணமாகி விட்டது. இவ்வளவு ஆழம் சென்றாலும் தண்ணீர் கிடைக்கும் என உறுதியான நிலையும் இல்லை. அதிக செலவும் ஆகிறது. தண்ணீரின்றி வேளாண் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கும் திண்டாட்டமாகி விட்டது.

இதுகுறித்து வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பொது மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. மழை பெய்தாலே பூமிக்குள் தண்ணீர் சென்று விடும் என்ற தவறான புரிதல் இருக்கிறது. கிடைக்கும் குறைந்தளவு மழைநீர் பூமிக்குள் சேகரிக்கப்படும் நிலை கூட இல்லை. கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் கான்கிரீட், ஓடு மற்றும் கூரைகளில் இருந்து விழும் மழைநீரை பூமிக்குள்ளும், பூமிக்கு வெளியிலும் சேகரிப்பதே தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். 

உதாரணமாக 1000 சதுர அடி பரப்பளவுள்ள வீடுகளின் மாடியில் பெய்யும் மழை நீரை பூமிக்கு கீழ் கட்டப்பட்ட சுமார் 10 அடி நீளம், 10 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட தொட்டிகளில் நிரப்பி பயன்படுத்திக் கொள்ளலாம். அதுபோக, மீதமுள்ள நீரை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டியின் மூலமாகச் சேகரிப்பதால் பூமியின் மேல் தளத்தில் உள்ள ஊற்றுகளில் உடனடியாக நீரைச் சேமிக்கலாம். இதனால், அரை உழவு (ஒரு மணி நேரம்) பெய்தால் கூட சுமார் ஆயிரம் கன அடி தண்ணீரை சேகரிக்கலாம். 

4 பேர் கொண்ட ஒரு வீட்டுக்கு தினசரி 100 லிட்டர் என கணக்கில் கொண்டால் கூட 3 மாதங்களுக்கான சுத்தமான குடிநீர் கிடைத்து விடும். மீதமுள்ள மழைநீர் பூமிக்கடியில் சேமிப்பதால் அதே அரை உழவு மழையில் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு தேவையான தண்ணீர் பெறலாம். ஒரு அரை உழவு மழைக்கே இந்தளவுக்கு மழைநீர் கிடைக்கும் என்றால் ஒரு உழவு மழையின்போது ஒரு வீட்டுக்கு மட்டுமில்லாது ஒரு காலனியின் பிற வீடுகளுக்கும் தேவையான அளவு தண்ணீரை மேல்புற ஊற்றில் சேகரிக்கலாம்.

பொதுவாக, கோடை மழை பெய்யும் மே மாதத்தில் மாடியின் மேல்தளத்தை தூசியில்லாமல் முழுமையாக சுத்தம் செய்து வைத்தால் சுத்தமான மழை நீரை சேகரிக்கலாம். 

மழைநீர் சேகரிப்புக் குழி என்பது ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 10 அடி தூரத்தில் வீட்டின் சந்தில் 4 அடி நீளம், 2 ½ அடி அகலம், 4 அடி ஆழம் கொண்ட அமைப்பாக அமைக்கலாம்.

இந்த அமைப்பில் 4 ½ அடி மொத்த ஆழத்தில் 3 ½ அடி ஆழத்திற்கு 40 எம்எம் ஜல்லிக் கற்கள் கொண்டோ அல்லது அதற்கு மேலான அளவிலான கற்கள் கொண்டோ நிரப்பலாம். இக்குழிகளின் மேல் பகுதியை ஒரு அடி ஆழத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு அதன் மேல் சிமெண்ட்டால் ஆன மூடியோ அல்லது கம்பி சட்டத்தால் ஆன மூடியோ வைக்கும்போது அதன் மேல் மனிதர்கள் நடக்கலாம். கார், வண்டி போன்ற வாகனங்களை கொண்டு செல்லலாம். 

மொட்டை மாடியில் இருந்து மழைநீர் வரும் பைப் லைனில், மழைநீர் சேகரிப்பு தொட்டியிலிருந்து 3 ½ அடி உயரத்தில் ஒரு பிளாஸ்டிக் டீ போன்ற அமைப்பில் பைப்பை திருப்பி பூமிக்கடியில் அமைக்கப்பட்ட தொட்டியிலோ அல்லது பிளாஸ்டிக் டிரம்களிலோ விழும்படி அமைக்கலாம். இந்த டீ வடிவிலான அமைப்பின் கீழ் பகுதியில் கேட் வால்வை பொருத்தலாம்.
மழை பெய்யும்போது முதல் 5 நிமிடங்களுக்கு கேட் வால் திறந்து இருக்கும்போது மழைநீர் சேகரிப்பு குழியில் தண்ணீர் விழுவதோடு மொட்டை மாடி சுத்தமாகிவிடும்.

கேட் வால் மூடப்படும்போது பக்கவாட்டில் தண்ணீர் சென்று குடிப்பதற்கான நீர் சேகரிக்கும் கீழ்நிலைத் தொட்டிகளிலோ அல்லது பிளாஸ்டிக் ட்ரம்களிலோ சேகரிக்கலாம். புதிதாக வீடு கட்டுபவர்கள், கீழ்நிலைத் தொட்டிகளுடன் அமைப்பது தண்ணீரை சேகரிக்க ஏதுவாக அமையும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close