[X] Close

ஃபெலிக்ஸ் உருவாக்கிய பேர் சொல்லும் படை: இவர்கள் வடலூருக்குக் கிடைத்த வரம்


team-formed-by-felix

  • Team
  • Posted: 01 Mar, 2018 07:56 am
  • அ+ அ-

ஜிம்முக்கு வருகிறவர்கள், மாதம் பிறந்தால் ஒழுங்காக சந்தா கட்டுகிறார்களா என்றுதான் ஜிம் நடத்துகிறவர்கள் கணக்குப் பார்ப்பார்கள். ஆனால், தனது ஜிம்முக்கு வரும் இளைஞர்களை வைத்து ஒரு சமூக சேவை படையையே உருவாக்கி இருக்கிறார் எஸ்.ஃபெலிக்ஸ். கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் இவரின் சமூக சேவைப்படை செய்துவரும் நற்காரியங்கள் ஏராளம்.

சமூக சேவைப்படை

வடலூரைச் சேர்ந்த செல்வராஜ் - பெரியநாயகி தம்பதியின் மகன் ஃபெலிக்ஸ். செல்வராஜ் விவசாயி, பெரியநாயகி என்.எல்.சி ஊழியர். எம்.பி.ஏ., பட்டதாரியான ஃபெலிக்ஸ் முன்பு தனியார் வங்கி ஒன்றில் பணியில் இருந்தவர். ஏனோ, வங்கிப் பணியில் மனம் லயிக்காமல் அதை உதறிவிட்டு, வடலூரில் இளைஞர் களுக்கான ஜிம் ஒன்றைத் தொடங்கினார். அதை வெறும் வருமானத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல் சமூக சேவைக்கான திட்டங்களை வகுக்கும் களமாகவும் மாற்றினார் ஃபெலிக்ஸ். இதற்காகவே, தனது ஜிம்முக்கு வருவோரில் சேவை ஆர்வமுள்ள இளைஞர்களைத் தேடிப் பிடித்தார்.

அவர்களைக் கொண்டு சமூக சேவைப்படை ஒன்றை உருவாக்கினார். இவராலும் இவரது குழுவினராலும் வடலூர் பெற்றுவரும் வரங்கள் பல. நீண்ட காலமாக தூர்வாரப் படாமல் கிடந்த வடலூர் ஏரியை கடந்த ஆண்டு, ஃபெலிக்ஸ் குழுவினர் தூர்வார களமிறங்கினார்கள். இதன் பிறகுதான் அரசே விழித்துக் கொண்டு ஏரிக்கு ஓடிவந்தது. 

40 ஆயிரம் பனைகள் விதைத்து..

இயற்கையைப் போற்றும் ஃபெலிக்ஸ் குழுவினர், பனை விதைகளை நட்டு, பனை வளர்ப்பதிலும், பனை வளர்ப்பின் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் அதிக அக்கறை எடுத்துவருகிறார்கள். இதற்காக, கடலூர் மாவட்டம் முழுவதும் சென்று பனை விதைகளைச் சேகரித்தவர்கள், அதுவும் போதாது என்று இலங்கையி லிருந்தும் பனை விதைகளை தருவித்து நட்டிருக்கிறார்கள். அப்படி வடலூர் பகுதியில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பனை விதைகளை விதைத்து, முளைத்த பனைக் கன்றுகளை அந்தந்தப் பகுதி இளைஞர்கள் மூலமாக பராமரித்தும் வருகிறார்கள்.

இதில்லாமல், வடலூரைச் சுற்றிலும் சுமார் 5,000 சாதாரண மரக் கன்றுகளை நட்டும் பராமரித்து வருகிறார்கள். குறிஞ்சிப்பாடி இலங்கை அகதிகள் முகாமில் இந்த ஆண்டு 140 குழந்தைகளுக்கு இரண்டு செட் சீருடைகளும், நான்கு அரசுப் பள்ளிகளுக்கு குடிதண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் இவர்களால் கிடைத்திருக்கிறது. ஓணாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு 80,000 ரூபாய் செலவில் பள்ளியின் பங்களிப்புடன் கழிப்பறைகளையும் கட்டித் தந்திருக்கிறது ஃபெலிக்ஸ் குழு. 

தானே புயலின் போது..

தானே புயல் சுழற்றியடித்த போது, ஃபெலிக்ஸ் குழுவினர் தங்களுக்குள்ளேயே நிதி திரட்டி, தங்களது வீட்டிலேயே உணவு தயாரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்தார்கள். இப்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் இவர்கள் அன்னமிட்ட பிறகுதான் மற்ற சமூக சேவகர்களும் களத்துக்கு வந்தார்கள். அந்த சமயத்தில், தொண்டு அமைப்புகள் வழங்கிய சுமார் 50 லட்ச ரூபாய்க்கான நிவாரணப் பொருட்களை இவர்கள் 15 கிராமங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். 

ஃபெலிக்ஸ் குழுவினருக்கு இலங்கையிலிருந்து பனை விதைகளை தருவித்துக் கொடுத்த பாபு, இந்த இளைஞர் படையின் சேவைகள் குறித்து நம்மிடம் பேசினார். “வடலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள சத்யா வீதியை சிலர் பொதுக் கழிப்பிடம் போலவே பயன்படுத்திட்டு இருந்தாங்க. இதைப் பார்க்கச் சகிக்காத ஃபெலிக்ஸ் குழுவினர், அந்தத் தெருவை முழுமையாக சுத்தம் செய்து சுவர்களுக்கு வெள்ளையடித்து பளிச் ஆக்கினார்கள். இப்போது அந்தப் பகுதியில் மல, ஜலம் கழிக்க மற்றவர்கள் யோசிக்கிறார்கள். இதேபோல், பயன்படுத்த முடியாமல் கிடந்த வடலூர் பேருந்து நிலையத்தின் கழிப்பறையையும் இவர்கள்தான் சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்தும்படி மாற்றினார்கள்.

நிழல்குடைகளும் புதுப் பொலிவு 

வடலூரின் எல்லைப் பகுதிகளில் உள்ள பயணிகள் நிழல்குடைகள் அனைத்துமே மிகவும் மோசமான நிலையில் இருந்தன. அங்கு பயணிகள் யாரும் ஒதுங்க முடியாததால் குடிகாரர்கள் கொட்டமடித்தார்கள். அந்த நிழல்குடைகளை மராமத்து செய்து, வண்ணம் பூசிய ஃபெலிக்ஸ் குழுவினர், நிழல்குடையின் சுவர்களில் மது மற்றும் புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துக்களையும் மரம் வளர்ப்பது, ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைச் சொல்லும் வாசகங்களையும் எழுதிப் போட்டார்கள். இதனால், நிழல்குடைகள் புதுப்பொலிவு பெற்று, இப்போது மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்தச் சேவைகளுக்கு மத்தியில், மாணவர்களிடம் விஞ்ஞான அறிவை வளர்க்கும் விதமாக கடந்த மூன்று ஆண்டுகளாக குருகுலம் பள்ளியில் அறிவியல் கண்காட்சியையும் இவர்கள் நடத்துகிறார்கள். இதில் காட்சிப்படுத்தப்படும் பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகளை வழங்கியும் ஊக்கப்படுத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் என்னால் ஆன ஒரு சிறு உதவியாக எனது நண்பர்கள் மூலமாகஇலங்கையிலிருந்து பனை விதைகளை வாங்கிக் கொடுத்தேன்” என்றார் பாபு.

எதற்காகவும் விழா எடுத்து தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை இந்தக் குழு. “விழாவுக்கு செல வழிக்கும் பணத்தை வேறு ஏதாவது நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தலாமே” என்று சொல்லும் ஃபெலிக்ஸ், “பிறருக்கு உதவுவதையும் சேவை செய்வதையும் மேடைபோட்டுச் சொல்ல வேண்டியதில்லை. சேவைப் பணிகளில் ஈடுபடும்போது அப்பகுதியின் முக்கியப் பிரமுகர்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என்பதற்காக அவர்களையும் எங்களோடு இணைத்துக் கொள்கிறோம். 

எங்கள் குழுவில் 20 பேர் இருக்கிறார்கள். இவர்களுடன் எங்களது ஜிம்முக்கு வரும் மருத்துவர்கள் சரவணன், அருள்மொழி, சங்கரன் ஆகியோரும் எங்களுக்குப் பேருதவி யாக இருக்கிறார்கள். எங்களுக்கு நிதி தேவைப்பட்டால் இந்த மூவரிடம் தான் உரிமையுடன் போய் நிற்போம். நாங்கள் எப்போது கேட்டாலும் எவ்வளவு கேட்டாலும் மரக் கன்றுகளை வாங்கிக் கொடுக்கும் என்.எல்.சி. ஊழியர் சோழன், எங்களை ஆரம்பத்திலிருந்தே ஊக்கப்படுத்தி வரும் சிவசங்கரன் சார் இப்படிப் பலபேரின் ஆதரவு இருப் பதால் தான் எங்களால் சோர்வில்லாமல் செயல்பட முடிகிறது” என்று சொன்னார்.

தொடரட்டும் உங்களின் தன்னலமற்ற சேவை.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close