[X] Close

 இந்தியாவின் பெருநகரங்களில் நாளொன்றுக்கு  3,500 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன


plastic-waste-plastic-pollution

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 24 Apr, 2018 12:04 pm
  • அ+ அ-

இந்தியாவின் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டும் தினமும் 3,500 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதாக ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் தலைவர் முனைவர் ஏ.ஜி.முருகேசன் தெரிவித்தார்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் நடைபெற்ற உலகப் புவி நாள் கருத்தரங்கில் தலைமை வகித்து அவர் பேசியதாவது:

உலகம் முழுவதும் ஏப்ரல் 22- ம் தேதி பல்வேறு மையக் கருத்துக்களை வலியுறுத்தி உலக புவி தினம் அனுசரிக்கப் படுகிறது. அதில் இந்த ஆண்டு "பிளாஸ்டிக் மாசுபாடினை ஒழிப்போம்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை இன்றைய காலகட்டத்தில் மக்கள் நாகரீகமாகவும் வசதியாகவும் கருதுகின்றனர்.

பலவித உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்து நாம் தப்பிக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க வேண்டும். 

இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டும் தினமும் 3,500 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதாக அறியப்பட்டுள்ளது.

மேலும், சிறு நகரங்கள், கிராமங்களில் கூட இவற்றின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

84 % பிளாஸ்டிக் கழிவுகள்

ஒட்டு மொத்தமாக 15,000 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தினந்தோறும் சேகரமாகிறது. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை செய்ய இயலாமல் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் 51.4 மில்லியன் டன் திடக் கழிவுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 84 சதவீதம் ஆகும். இவற்றில் 27 சதவீதக் கழிவுகள் மட்டுமே மேலாண்மை செய்யப் படுகின்றன. மற்றவை திறந்த வெளிகளில் கொட்டப்படுகின்றன. 

ஒட்டு மொத்த கடல் பிரதேசத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதில் இந்தியாவுக்கு 60 சதவீதம் பங்கு இருப்பதாக மத்திய அரசின் ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதை மனதில் கொண்டே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலைநகரான புது டெல்லியில் அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்துள்ளது என்றார் அவர்.

மாணவ, மாணவியரின் கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேராசிரியர் ஜி.அண்ணாதுரை வரவேற்றார். இணைப் பேராசிரியர் எஸ்.செந்தில் நாதன் நன்றி கூறினார்.


ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில் நடைபெற்ற உலகப் புவி நாள் கருத்தரங்கில் மையத்தின் தலைவர் முனைவர் ஏ.ஜி.முருகேசன் பேசினார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close