[X] Close

ஆக்ரோஷ கொக்கரக்கோ: உடலே ஆயுதம்.. உடனே வியூகம்


cock-fight-story

  • Team
  • Posted: 01 Mar, 2018 05:55 am
  • அ+ அ-

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் திருவிழா காலங்களில் சேவல் கட்டுகள் நடைபெறுகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேவல் சண்டைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், கிராமப்புறங்களில் சேவல் சண்டை நடத்துபவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு தென்கிழக்கு சீமையிலும், ரேக்ளா பந்தயம், கிடா சண்டை, சேவல்கட்டு ஆகியவை கொங்கு சீமையிலும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் காணும்பொங்கலன்று சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. சேவல்கட்டு, கோச்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை என வெவ்வேறு பெயர்களில் சேவல் சண்டை நடக்கிறது.

இதுகுறித்து வேட்டைக்காரன் புதூரில் சண்டை சேவல் வளர்க்கும் கி.பாலசுப்பிரமணியன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

‘‘சக சேவல்களை அடக்கி ஆளவேண்டும் என்பது சேவல்களின் பொதுவான குணம். அவை பொதுவாகவே ஆக்ரோஷமாக சண்டை போடக்கூடியவை என்பதால், அவற்றை சண்டையிடச் செய்ய பெரிதாக மெனக்கெட வேண்டாம். ஆனால், அவற்றை சண்டைக்கு தயார்படுத்துவது முக்கியம். பொங்கல் பண்டிகைக்கு 4 மாதங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வேலைகள் தொடங்கிவிடுகின்றன.

நல்ல உடல்வாகுடன் இருக்கும் சேவல்களை சண்டைக்கு தேர்ந்தெடுத்து நீச்சல், ஓடுதல், உயரம் தாண்டுதல் போன்ற பயிற்சிகள் அளிப்போம். உடலை வலுப்படுத்த ஊட்டச்சத்துமிக்க கம்பு, சோளம், கேழ்வரகு, கோதுமை, முந்திரி, ஈரல், வேகவைத்த இறைச்சி, பாதாம், பிஸ்தா, சாரப்பருப்பு, திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவற்றைக் கொடுப்போம்.

வெப்போர், கத்தி கட்டு என சேவல் சண்டையில் 2 வகை உண்டு. வெப்போர் சேவல் சண்டைக்கு அசில் வகை சேவல்களை அதிகம் பயன்படுத்துவர். அதற்கு காரணம். அவற்றின் உடல்வாகும், போர்க் குணமும் ஆகும். உடலையே ஆயுதமாக மாற்றி ஒரே அடியில் எதிரியின் தலையை தரையில் வீழ்த்தக்கூடிய வேகமும், விவேகமும் அசில் இன சேவலுக்கு உண்டு. அது மட்டுமின்றி, அதன் கால் பகுதியில் கட்டை விரலுக்கு மேலே, அம்பின் முனைபோல வளரும் ‘முள்’ அமைப்பும் முக்கிய காரணம்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணியினரும் தங்களது சேவல்களை களத்தில் நேருக்கு நேர் பார்க்கும்படி நிறுத்திவிட்டு, பிறகு கையில் எடுத்துக்கொள்வர். இதற்கு ‘நடவு விடுதல்’ என்று பெயர். இதன் மூலம் ‘உன் எதிரி இதுதான்’ என்று அடையாளம் காட்டப்படுகிறது. பின்னர் இரு சேவல்களையும் அருகே நெருங்கவிட்டு உசுப்பேற்றி ஆவேசம் அடையச் செய்து ஒன்றையொன்று நோக்கி ஓடி வந்ததும் அதன் உரிமையாளர்கள், தங்களது சேவல்களை சண்டையிடாமல் கையில் பிடித்துக்கொள்வர். இதற்கு ‘முகைய விடுதல்’ என்று பெயர். அதன்பின்பு இரு சேவல்களையும் மோத விடுவர். இதற்கு ‘பறவை இடுதல்’ என்று பெயர்.

எதிரி பறக்கும் உயரம், தாக்கும் வேகம், எதிரியின் முள் குறி வைக்கும் உடல் பாகம் ஆகியவற்றை உடனுக்குடன் துல்லியமாக கணிக்கும் சேவல்கள், அதன் பின்னர் எதிரியை எப்படி அடிக்க வேண்டும் என்ற வியூகத்தையும் உடனே அமைக்கின்றன. பின்னர் உடலையே ஆயுதமாக மாற்றி, பறந்து சென்று எதிரியின் கழுத்து மற்றும் தலையை குறிவைத்து ஒரே அடியில் எதிரியின் தலையை தரையில் விழச் செய்கின்றன.

சில நேரங்களில் எதிரியின் உடலின் பல இடங்களில் தாக்கி, காயம் ஏற்படுத்தி, களைப்படையச் செய்து எதிரியை களத்தில் மயங்கி விழவோ, களத்தில் இருந்து ஓடவோ, அல்லது எதிரியின் மூக்கை மண்ணில் படச் செய்தோ வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்யும். அப்போது சேவல் விடுபவர்கள், தொடர்ந்து அது சண்டையிடாமல் செய்து, அதற்கு தண்ணீர் தந்தும், ஈரத்துணியால் காயங்களைத் துடைத்தும், மருந்திட்டும், முதுகில் தட்டிக் கொடுத்தும் களைப்பை போக்கி மீண்டும் சேவலை களத்தில் விடுவர்.

15 நிமிடம் சண்டை, 15 நிமிடம் இடைவேளை என இந்த சண்டை சுமார் ஒன்றேமுக்கால் மணிநேரம் நடக்கும். வெற்றி பெற்ற சேவல், போர் வீரனைப் போல கம்பீரமாக களத்தில் வலம் வரும் அழகைப் பார்க்க வேண்டுமே..’’ என்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close