[X] Close

இந்தியாவில் காடுகள் பரப்பு 1 சதவீதம் அதிகரிப்பு: மாநிலங்களுடைய வனத்துறை ஆய்வு அறிக்கையில் தகவல் 


indian-forests-forest-area-green-cover

  • kamadenu
  • Posted: 04 Apr, 2018 12:03 pm
  • அ+ அ-

இந்தியாவில் காடுகள் பரப்பளவு ஒரு சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநிலங்களுடைய வனத்துறை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலங்களில் மனிதன், காய் கனிகளுக்காகவும், வேட்டைக்காகவும் காடுகளையும், அதனை சார்ந்த பகுதிகளிலும் வசித்து வந்தான். அதன்பிறகு நிலங்களில் விதைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தான். வசிப்பிடங்கள் கட்ட ஆரம்பித்தான். அதற்காக காடுகளையும், அதனை சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். அடுத்து விளைப்பொருட்களை கொண்டு செல்லவும், தன்னுடைய சொகுசு பயணத்துக்காகவும் சாலைகள் அமைக்க ஆரம்பித்தான். அதனால், காட்டின் பரப்பளவு குறைய தொடங்கியது.

தொழிற்சாலைகள் பெருக்கம், விவசாயத்தில் உரம், பூச்சிக்கொல்லி பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் மண் வளமும் மனிதனின் ஆரோக்கிய மும் பாதிக்கப்பட்டது. இப்படி மனிதன் தேவைக்கு இயற்கையை பயன்படுத்தாமல் பேராசைக்கு பயன்படுத்த ஆரம்பித்ததால் காடுகள் சுருங்கி மழை வளம் குறைந்து வெப்பமும், வறட்சியும் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலை யில் சமீபகாலமாக ஏற்பட்ட மரம் வளர்ப்பு விழிப்புணர்வால் இந்தியாவில் காடுகள் பரப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமெரிக்கன் கல்லூரி பேராசிரியருமான ராஜேஷ் கூறியதாவது: 
காடுகள் பொன் முட்டையிடும் வாத்து. எல்லாவற்றுக்கும் ஆரம் பப் புள்ளி காடுகளே. அதனால், வாத்து இடும் முட்டையை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். ஆனால், நாம் வாத்தையே வெட்டுகிற அளவுக்கு சுயநலவாதியாகி விட்டோம்.


புற்றுநோய் அபாயம்
வெப்பநிலை அதிகரிப்புக்கு ஒரே காரணம் மரங்கள் அடர்த்தி குறைவதுதான். அதற்கான தீர்வு காண்பதை விட்டுவிட்டு, அதிலிருந்து தப்பிக்க ஏசி பயன்பாட்டை அதிகரித்துவிட்டோம். ஏசியில் குளோரோ புளோரா கார்பன் வெளியாகி பூமியில் இருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள ஓசோன் படலத்தை சேதப்படுத்துகிறது. ஓசோன் பூமியை சுற்றியிருக்கிற குடை போன்ற அமைப்பு. சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை இந்த ஓசோன் படலம்தான் தடுக்கிறது.

மரங்கள் அடர்த்தி குறைவு, ஏசி, ப்ரிட்ஜ் பயன்பாடு அதிகரிப்பால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. அதனால் மனிதர்களை புற்றுநோய் உள்ளிட்ட பலவித தோல் நோய்கள் தாக்குகின்றன. தற்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் சுனாமி போன்ற மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க காடுகள் பரப்பை அதிகரிக்க வேண்டும்.


1 சதவீதம் அதிகரிப்பு
ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது இந்தியாவில் 21 சதவீதம் ( 7 லட்சத்து 8 ஆயிரத்து 273 சதுர கி.மீ. பரப்பு) மட்டுமே காடுகள் உள்ளன. கடந்த பிப்ரவரி 12-ம் தேதி வனத்துறை சார்பில் வெளியிடப்பட்ட மாநிலங்களுடைய வன ஆய்வு அறிக்கையில் இந்தியாவில் 1 சதவீதம் காடுகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு ஊரில் மரங்களுடைய அடர்த்தி பரவலாக இருந்தால் 8 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், நாம் வசிக்கும் பகுதிகள் முதல் பணிபுரியும் இடங்கள் வரை மரங்களை வளர்த்து நகர்ப்புறங்களில் காடுகளை அதிகரிக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், மரங்களை அழிக்காமல் மாற்றுத்திட்டங்களை பற்றி அதிக அளவு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மரங்கள் சிறந்த காற்று வடிகட்டி, நீர் வடிகட்டி.

தூசுகளையும், அசுத்தமான காற்றையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை கொடுக்கும். அதனால், சாலைகள், தொழிற்சாலைகள் அருகே நிறைய மரங்கள் நட வேண்டும். ஒரு மிகப்பெரிய திட்டத்துக்காக மரங்களை வெட்டினால் அதற்கு மாற்று ஏற்பாடாக அதை விட அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- ஒய்.ஆண்டனி செல்வராஜ்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close