[X] Close

வேடந்தாங்கலாக மாறிய சிவரக்கோட்டை மலையூரணி: மதுரை அருகே 115 பறவையினங்கள் வாழும் சரணாலயம்


bird-sanctuary-in-madurai

சைபீரிய கல்குருவி - நீலகண்டன் - செந்தலை கூம்பழகன் - கருந்தலை கூம்பழகன்

  • kamadenu
  • Posted: 28 Dec, 2018 11:43 am
  • அ+ அ-

ஓரிடத்தில் எல்லா வகை பறவைகளும் வாழ்கின்றன என்றால் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும்ஆரோக்கியமாக, வளமிக்க நிலத்தில் வாழ்கிறார்கள் என்று பறவையியல் ஆய்வாளர்கள் கூறுவார்கள். அதை உண்மை என நிரூபிப்பது போல இருக்கிறது மதுரை அருகே சிவரக்கோட்டை மலையூரணி.

இப்பகுதிக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக மிக மிக அரிதான பறவைகள் வலசை வந்து செல்கின்றன. பறவைகள் சரணாலயம் போல் உள்ளூர் வாழ்விடப் பறவைகளும் அதிகளவில் காணப் படுகின்றன. இது வரை இந்தப் பகுதிகளில் மட்டும் தமிழத்தில் கணக்கிடப்பட்டுள்ள 509 பறவையின வகைகளில் ஐந்தில் ஒரு பங்கான 115 பறவையினங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. பறவைகள் அதிகளவு படையெடுப்பதற்கு முக்கியக் காரணம், இப்பகுதியில் நடைபெறும் சிறுதானிய விவசாயமும், மக்களின் எளிய வாழ்க்கை முறைகளுமே என்று சொல் கிறார்கள் பறவையியல் ஆய்வாளர்கள்.

இது குறித்து திருமங்கலத்தைச் சேர்ந்த பறவை ஆய்வாளர் ரவீந்திரன் கூறியதாவது: பறவைகளுக்குத் தேவையான நீர், பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத மண், அதை ஆதாரமாகக்கொண்டு வாழும் மண் புழுக்களும், பூச்சிகளும் இந்த சிவர க்கோட்டை மலையூரணியில் காணப் படுகின்றன. பறவைகளுடன் பாம்புகளும், ஆறு வகையான ஓணான் இனங்களும் வாழ்கின்றன. பறவைகளில் சிறிய வகை தானியங்களைக் கொத்தி தின்னும் தூக்கணாங்குருவிகள், வெண்மார்பு சில் லை, புள்ளிமார்பு சில்லை, மூவண்ண சில்லை, கிளிகள், காடை, கவுதாரி, காட்டுப் புறாக்கள், பூக்களில் தேன் உறிஞ்சும் தேன்சிட்டு போன்ற பறவைகள் இப் பகுதியில் உள்ளன.

மேலும் மீன், தவளை போன்றவற்றை உண்ணும் வாத்துகள், பனங்காடை, மைனாக்கள், கரிச்சான்கள், பஞ்சுருட்டான், மயில்கள் மற்றும் இப்பறவைகளை வேட்டையாடி உண்ணும் கழுகினங்கள், ஆந்தைகள் என எழுபதுக்கும் மேற்பட்ட வாழ்விடப் பறவைகள் இந்தப் பகுதியிலேயே கூடுகட்டி, குஞ்சுகள் பொறித்தும் வாழ்ந்து வருகின்றன.


சிறுவனுக்கு பறவைகளின் பெயர்களைச் சொல்லி விளக்கும் ஆய்வாளர் ரவீந்திரன்

வலசை வரும் பறவைகள்

வலசைக் காலமான செப்டம்பர் தொடங்கி பிப்ரவரி வரை கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியப் பகுதி, இமயமலை அடிவாரம் போன்ற பகுதிகளில் இருந்து விதவித மான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்கின்றன. இப்படிப்பட்ட வலசைக் காலத்தில் வாரந்தோறும் பறவைகள் கணக்கெடுப்பை நான் மேற்கொண்டு வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியா வரை வலசை வரும் மிக அரிய வகைப் பறவைகளும் இங்கு வந்து செல்கின்றன.

அந்த வகையில் அண்மையில் ஐரோப்பா, மத்திய ஆசியாவில் இருந்து வலசை வந்த கருந்தலை கூம்பழகன் தமிழகத்தில் முதல் முறையாகவும் மற்றும் செந்தலை கூம்பழகன் தமிழகத்தில் மூன்றாம் முறையாகவும்கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகைப் பறவைகள் வலசை வரும்போது மேற்கு இமயமலைத் தொடர் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன.

இதே போல கடந்த ஆண்டு நீல கண்டன், சைபீரியன் கல் குருவி, நீலச்சிறகி வாத்து, கிளுவை வாத்து, அரிய வகை நீர்க் கோழிகள், பழுப்புக் கீச்சான்கள்,சின்ன கள்ளிப் புறா, பூனைப்பருந்துகள், பொறி வல்லூறு என வலசைப் பறவைகளின் எண்ணிக்கை மட்டும் நாற்பதுக்கும் மேல் வந்துள்ளன.

இயற்கை வளத்துடன் பல்லுயிர்களும் மனிதர்களும் பகிர்ந்து வாழும் இடமாக இந்த சிவரக்கோட்டையின் மலையூரணி உள்ளது.

இத்தகைய பல்லுயிர்ச் சூழலை அனைவரும் போற்றிப் பாதுகாக்க வேண் டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ் 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close