[X] Close

பாலித்தீன் இல்லாமலும் வாழ முடியும்! - நம்பிக்கையை விதைத்த கண்காட்சி


plastic-awareness-exhibition

தென்னை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட கரண்டி, அகப்பை உள்ளிட்டவை.

  • kamadenu
  • Posted: 25 Dec, 2018 13:01 pm
  • அ+ அ-

இன்னும் சரியாக ஒருவார காலம்தான் உள்ளது. பாலித்தீனுக்கான தடை. அவை இல்லாமல் வாழ்வதற்கு நாம் எவ்வளவு தூரம் மனதளவிலும், நடைமுறையிலும்  தயாரகி உள்ளோம் என்பது இப்போதுவரை ஒவ்வொரு வீட்டிலும் கேள்விக்குறியே. வீடுகளில் ஒவ்வொருநாளும் திரளும்  பாலித்தீன் குப்பையை அப்படியே குப்பைத் தொட்டியில்  வீசுகிறோம்.

ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய பாலித்தீன் பொருட்களான பாலித்தீன் விரிப்பு, தட்டு,  டம்ளர், ஸ்ட்ரா, பைகள் (கேரி பேக்), கொடிகள், தண்ணீர் பாக்கெட் ஆகியவைகளுக்கு நிரந்தரத் தடை விதித்துள்ளது  தமிழக அரசு. இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில்,  பாலித்தீன் மாற்றுப் பொருட்கள் மற்றும் குப்பை மேலாண்மை கண்காட்சி திருப்பூரில் நடைபெற்றது. 

இதில், பாலித்தீனுக்கு மாற்றாக, மக்கும் மற்றும் மண்ணுக்கு  கேடு இல்லாதவற்றை விளக்கும் வகையில் 61 அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தன. பாலித்தீன் பயன்பாட்டால், எவ்வாறு மிக மோசமான சுற்றுச்சூழலில்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அவற்றைத்  தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியது இந்த கண்காட்சி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்திய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் தேவை குறித்தும், வீடுகளில் அவற்றை எப்படி எளிதாகக் கையாள்வது என்பது குறித்தும் விளக்கும் மழைநீர் சேகரிப்பு மாதிரி வீடு  கண்காட்சி முகப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.   வீட்டுக் குப்பையிலேயே உரம் தயாரித்து,  அதை வீட்டில் வளர்க்கும் காய்கறிகளுக்கு உரமாக பயன்படுத்தும் முறையை விவரித்தல் என பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை முன்வைத்தது இந்தக் கண்காட்சி.

400 ஆண்டுகள்?

நம் வாழ்வின் சகல திசைகளிலும் ஊடுருவிவிட்ட பாலித்தீனை  எப்படி கவனமாகக் கையாண்டால், அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும் என்பதை இந்தக் கண்காட்சி விளக்கியதாக கூறுகிறார் பள்ளி மாணவி திவ்யா. "வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடையில், நாம் அரை லிட்டர் பால் பாக்கெட் வாங்கும்போது, நம் வீட்டுக்கு ஒரு பாலித்தீன் பை வந்து சேரும். அடுத்தகணமே அது குப்பைக்குச் சென்றுவிடும்.

ஆனால், அந்த ஒரு பாலித்தீன் பை  அழிவதற்கு  400 ஆண்டுகளாகும் என்பதை நினைத்து பார்க்கும்போதே, பூமியின் மீது பாலித்தீன் தொடுத்துள்ள  பெரும் பாதிப்பை உணர்ந்து விட்டோம். ஒரு பாலித்தீன் பைக்கே இந்த நிலை என்றால், நாம் வாழ்நாளில் எவ்வளவு பாலித்தீன் குப்பையை சேர்த்துவிட்டு சென்றிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போதே குற்ற உணர்ச்சியே மேலோங்குகிறது. பாலித்தீன் பயன்பாடு, மனித சமூகத்துக்கு எவ்வளவு பெரிய தீங்கு என்பதை இந்தக் கண்காட்சி உணர்த்தியது” என்றார் மிக அழுத்தமாக.

மாணவி தாரணி கூறும்போது “மரத்தை வெட்டி,  அதன்மூலம் பென்சில் மற்றும் காகிதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்தும் வகையில், மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதக்கூழ் மூலம் பென்சில், காகிதம் ஆகியவற்றைத்  தயாரித்துள்ளனர்.

விதைப்பந்து பென்சில்கள்

பென்சிலிலும் பசுமையின் தேவையை உணர்த்தும்வகையில்,  பென்சிலின் பின்புறம் தக்காளி, வெள்ளரி, கீரை என பல்வேறு விதைகளைக்கொண்டு அடைக்கப்பட்ட விதைப்பந்து பென்சில் தயாரித்துள்ளனர். இதன் மூலம் பென்சிலைப் பயன்படுத்தி எறியும்போது, அவை மீண்டும்  இந்த மண்ணில் விதையாக மலரும். பசுமையின் தேவையையும், அத்தியா வசியத்தையும் இந்த விதை பென்சில் எங்கள் மனதில் ஆழமாக விதைத்துள்ளது” என்றார்.

விதைப்பந்து பென்சில்கள்.

உபயோகமான பொருட்கள்

வறட்சியால் வெட்டி வீசப்படும் தென்னை மரங்களில் இருந்து உபயோகமான பொருட்களைத் தயாரிக்கலாம். தேங்காய் ஓட்டில் இருந்து சிறிய கரண்டிகள், ஐஸ்கிரீம் கிண்ணம், உப்பு வைக்கப் பயன்படுத்தும் கிண்ணம் மற்றும் ஊறுகாய் போட்டு வைக்கப்பயன்படுத்தும் ஜார் ஆகியவற்றை தென்னை பொருட்களில் இருந்து தயாரிக்கலாம். அதேபோல, பீட்ரூட், கேரட் ஆகியவற்றிலிருந்து இயற்கை சாயம் எடுத்து, அவற்றில் வர்ணம்பூசி, அழகிய  பொருட்களைத்  தயாரித்து காட்சிக்கு வைத்திருந்ததை பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

சோளம், கரும்புக்கழிவு பைகள்

கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் கூறும்போது, "பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக,  மண்ணில் மக்கக்கூடிய சோளம் மற்றும் கரும்புக் கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட பைகள்,  துணிப்பைகளின் பயன்பாடு குறித்து பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மறுசுழற்சிக்கு ஏற்ற, எளிதில் மக்கக்கூடிய, உரமாகக் கூடிய உணவு கொள்கலன்கள், வீடுகள், உணவகங்கள், விடுதிகள், உணவு விடுதிகள், ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்துகளில் எளிதில் பயன்படுத்தும் வகையில், கரும்பு சக்கை மற்றும் மக்காச்சோள கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சி நிச்சயம் பாலித்தீனைத் தவிர்க்க, மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல, எதிர்காலத்தில் பாலித்தீன்  இல்லாமல் மனித சமூகம் வாழ முடியும் என்ற உணர்வையும் இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி யுள்ளது” என்றனர். பாலித்தீனை பயன்படுத்த வேண்டாம் என்ற எண்ணம்  மக்கள் மனங்களில் ஏற்பட்டால், சட்டங்களால் கட்டுப்படுத்தும் தேவையே இருக்காது.

- இரா.கார்த்திகேயன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close