[X] Close

அதிக வெயில் காரணமாக ஏற்படும் வனத் தீயைக் கட்டுப்படுத்த செயற்கைக்கோள் தரவுகள்: குரங்கணி விபத்துக்குப் பிறகு கட்டாயமாகும் தொழில்நுட்ப பயன்பாடு


kurangani-accident-tech

  • நாகப்பன்
  • Posted: 25 Mar, 2018 16:19 pm
  • அ+ அ-

குரங்கணி விபத்து, வழக்கத்தை விட அதிகமான வெயில் காரணமாக தமிழக வனப் பகுதி யில் தீ விபத்துக்கான அறிகுறிகள் அதிகமாகியுள்ளன. காடுகளில் ஏற்படும் தீ விபத்துகளை உடனுக்குடன் கண்டறிந்து தடுப்பதற்காக செயற்கைக்கோள் தரவுகளை வனத்துறையினர் ஒருங்கிணைத்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் ஏற்படும் தீ விபத்துகள் வனப் பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், தீத்தடுப்பு, வனப் பாதுகாப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப பயன்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. கடந்த 11-ம் தேதி ஏற்பட்ட குரங்கணி தீ விபத்தும், அதில் அதிகரித்து வரும் உயிர்ப்பலிகளுமே வனத் தீயின் உண்மையான பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிறகே, தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் வன தீத்தடுப்பு, மலையேற்றத்துக்கு தடை போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் வழக்கமான தீத்தடுப்பு பணிகளோடு செயற்கைக்கோள் அடிப்படையிலான தீவிபத்து எச்சரிக்கை திட்டத்தையும் இணைந்து செயல்படுத்த வனத்துறை உத்தரவிட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம் தீ விபத்து தகவல்களை அறியும் திட்டம் கடந்த ஆண்டே செயல்பாட்டுக்கு வந்திருந்தாலும், குரங்கணி தீ விபத்தைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினர் கூறுகின்றனர். கோவையில் மண்டல வன பாதுகாவலர் அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கீழ் உள்ள இந்திய வன ஆய்வு நிறுவனம் மூலம் மோடிஸ் (நாசா), எஸ்என்பிபி (இந்தியா) இரண்டு செயற்கைக்கோள்களிடம் இருந்து வன தீ விபத்து தகவல்கள் உடனுக்குடன் பெறப்படுகின்றன. தெர்மல் சென்சார் மூலம் வனப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை உடனுக்குடன் அவை தெரிவிக்கின்றன. இந்திய வன ஆய்வு நிறுவனத்தில் அனைத்து மாநில வனத்துறை தகவல்களும் இருப்பதால், தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்டம் அல்லது மண்டலத்துக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தி வந்துவிடும். அதனை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதி வன ஊழியர்களுக்கு உடனே அனுப்பி, தீத்தடுப்பு பணிகளை முடுக்கி விடுகிறார்கள். பாரஸ்ட் பயர் அலாரம் சிஸ்டம் 2.0 என்ற தொழில்நுட்பத்தில் இந்த திட்டம் இயங்கு கிறது. கடந்த ஆண்டே இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் இந்த திட்டம் மிகத் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், செயற்கைக்கோள் கொடுத்த எச்சரிக்கையின் படி, தீ அணைக்கப்பட்டு விட்டால், அதில் ஏற்பட்ட சேதம், இடம், காலம் உள்ளிட்டவற்றை இந்திய வன ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்புகிறோம். அந்த தகவல் அடிப்படையிில் வன தீ விபத்து வரைபடம் வெளியிடப்படுகிறது. அப்படி கோவை வனக் கோட்டத்துக்காக வன ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தீ விபத்து வரைபடங்களை டிஜிட்டலில் தொகுத்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் பதிவான தீ விபத்து முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய தீத் தடுப்புப் பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. நம்மிடம் வனத்தீ விபத்தை முன்கூட்டியே கண்டறியவும், உடனுக்குடன் தடுக்கவும் தொழில்நுட்பங்கள் இல்லை. எனவே இதுபோன்ற வசதிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டியுள்ளது’ என்றனர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை செயற்கைக்கோள் தரவுகள் மூலம் ஒவ்வொரு வனச் சரகங்களிலும் தீ அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது, தீத்தடுப்பு காவலர்கள், கிராம குழுக்கள் மூலம் தொடர் கண்காணிப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் வனத் துறையினர் கூறுகின்றனர். தமிழகத்தின் மொத்த பரப்பளவில் 17.59 சதவீதம் வனம். அதில் தீத் தடுப்பு பணிக்காக 11 எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 374 தீ விபத்துகள் நடப்பதாக அறியப்பட்டுள்ளன. அதிலும் பிப்ரவரி முதல் மார்ச் வரை அதிகபட்சமாக 72.4 சதவீதம் வனத் தீ விபத்துகள் ஏற்படும். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 44 வனப்பிரிவுகளில் அதிக அளவில் தீ விபத்துகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியாக எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-ர.கிருபாகரன்

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close