[X] Close

அரசு குறிப்பிட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடிக்கலாம்: தீபாவளி நாளில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை; 188-வது பிரிவின் கீழ் நடவடிக்கை என காவல்துறை எச்சரிக்கை


diwali-crackers-burst-rules

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 08:43 am
  • அ+ அ-

தீபாவளி தினத்தன்று அரசு குறிப்பிட்ட 2 மணி நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தடையை மீறுவோருக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் விசேஷம். அன்றைய தினத்தில் காலை முதல் இரவு வரை பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இந்நிலையில், தீபாவளி தினத்தில் காற்று மாசு அதிகரிப்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.தமிழகத்தைப் பொறுத்தவரை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, தரையில் வெடிக்கும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுத்தான் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்தாப்பு போன்ற சத்தம் எழுப்பாத பட்டாசுகள், வானத்தில் சென்று வெடிக்கும் ராக்கெட் பட்டாசுகளை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று தீயணைப்புத் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால், இதை தீயணைப்புத் துறை மறுத்துள்ளது. இதுகுறித்து தீயணைப்புத் துறை அளித்துள்ள விளக்கத்தில், ‘அரசு விதித்துள்ள நேரக் கட்டுப்பாடு அனைத்து வகை பட்டாசுகளுக்கும் பொருந்தும். அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் மட்டுமே அனைத்து வகையான பட்டாசுகளையும் வெடிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.அரசு நிர்ணயித்துள்ள நேரம் தவிரத்து மற்ற நேரங்களில் தடையை மீறி பட்டாசு வெடித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க போலீஸார் ரோந்து வருவார்கள்.

தீபாவளி தினத்தில் ரோந்து செல்வதற்கு என்றே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்ததும் எத்தனை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேட்க வாய்ப்புள்ளது. அதனால் அரசு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸார் உயர்ந்த கட்டிடங்களில் நின்று, தடையை மீறி யாராவது பட்டாசு வெடிக்கிறார்களா என கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். எங்காவது பட்டாசு வெடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அந்த இடத்துக்கு ரோந்து போலீஸார் வருவார்கள். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் குறித்து தொலைபேசியில் அதிக புகார்கள் வரலாம் என்பதால் தொலைபேசி அழைப்புகளை கவனிக்க மட்டுமே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு போலீஸ்காரருக்கு பணி ஒதுக்கப்படும்.உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.மாநகர பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் வீடியோ எடுத்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த பகுதி போலீஸார் தனியார் ட்ரோன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பட்டாசு வெடிப்பவர்களை பிடிக்க கிருஷ்ணகிரியில் சில இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-வது (அரசின் உத்தரவுக்கு கீழ்படியாமை) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தச் சட்டத்தின்படி 1 முதல் 6 மாதம் வரை சிறை தண்டனையோ ரூ.200 முதல் ரூ.1,000 வரை அபராதமோ விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.டெல்லியில் சாதாரண நாட்களிலும் பட்டாசு வெடிக்க ஏற்கெனவே தடை உள்ளது. இந்நிலையில்,காசிபூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தொடர்ந்து பட்டாசு வெடிக்கவே, அதே தெருவில் வசிக்கும் சிலர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பட்டாசு வெடித்த வழக்கில் முதல் கைது டெல்லியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close