[X] Close

அரக்கோணம் அருகே கணவரை கொலை செய்த மனைவி கைது : மற்றொரு இளம்பெண் கொலை வழக்கில் தனிப்படை அமைத்து விசாரணை 


crime-news-arakkonam

  • kamadenu
  • Posted: 23 Oct, 2018 18:36 pm
  • அ+ அ-

அரக்கோணம் அருகே கணவரின் கழுத்தை துப்பட்டாவால் நெறித்து கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், அரக்கோணம் அருகே இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபர் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். அரக்கோணத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலை சம்பவங்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் காவல் துறையினர் கூறும்போது, ‘‘அரக்கோணம் அடுத்த மோசூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (30). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு கோகுல் (8), சூர்யா (7) என்ற மகன்கள் உள்ளனர். பிரபுவுக்கு மது பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிய பிரபு, வழக்கம்போல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரபு, மனைவி லட்சுமியை சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த லட்சுமி, ஆத்திரத்தில் தான் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து பிரபுவின் கழுத்தை நெறித்துள்ளார். மூச்சுத்திணறிய பிரபு அந்த இடத்திலே மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த லட்சுமி, அக்கம் பக்கத்தினரை வரவழைத்து பிரபு மயக்கமடைந்து விழுந்துவிட்டதாக கூறியுள்ளார். பின்னர், அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பிரபு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, பிரபுவின் கழுத்தை நெறித்ததற்கான அடையாளம் இருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் லட்சுமியிடம் போலீஸார் தனியாக விசாரித்தனர். அப்போது, கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, லட்சுமியை போலீஸார் கைது செய்தனர்.

இளம்பெண் கொலை

அரக்கோணம் அடுத்த குருவராஜபேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் செல்வி (30). தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கணவரை இழந்த செல்வி தனது 6 வயது மகன் காந்த் என்பவருடன் தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலை உறக்க கலக்கத்தில் இருந்த காந்த், எழுந்து பார்த்தபோது செல்வி அரை நிர்வாண நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்துள்ளார். அவரது தலையில் ரத்த காயம் இருப்பதைப் பார்த்ததும் கூச்சலிட்டபடி வீட்டில் இருந்து வெளியே ஓடிச் சென்று பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் துரைபாண்டியன், அரக்கோணம் தாலுகா காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் சிம்பா சிறிது தொலைவு ஓடிச் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். செல்வியின் கழுத்தை காலால் நெறித்து கொலை செய்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன’’ என்று தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close