[X] Close

அஸ்வினியை கொன்றது எது?


which-killed-aswini

  • முத்தலீப்
  • Posted: 10 Mar, 2018 03:42 am
  • அ+ அ-

அஸ்வினி, இந்துஜா, ஸ்வாதி, மதுரை சித்ரா தேவி, உள்ளிட்டோர் முதல் பல இளம் பெண்கள் ஆண்களால் அல்லது முன்னாள் காதலர்களால் கொல்லப்பட்டார்கள். அவர்களை கொன்றது எது?இது என்ன கேள்வி அதுதான் அவர்களை கொன்றது யார் என்று தெரிந்து கைது செய்துவிட்டார்களே என்று கூறலாம். ஆனால் உண்மையில் அவர்களை கொன்றது மேலோட்டமாக பார்த்தால் அந்தந்த நபர்களாக இருக்கலாம் ஆனால் உண்மையில் கொன்றது வேறு புறக்காரணிகளே.

உளவியல் ரீதியாக இதை அணுக வேண்டியது அவசியம். தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்கிற கோபத்தின் வெளிப்பாடு, இது போன்ற நிகழ்வுகளுக்கு பிரதான காரணம் என்கிறோம். நாம் பல நவீன தொழில் நுட்பங்களை கடந்து வந்தாலும் நமக்குள் இன்னும் பழைய விட்டொழிக்க வேண்டிய பல விஷயங்களை விடுவதில்லை. என்பதின் வெளிப்பாடே இத்தகைய படுகொலைகள். 

காதல் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நமது சினிமாக்கள் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் பள்ளி வயதில் தொடங்குவது, முன்பெல்லாம் கல்லூரி வாழ்க்கையில் காதல் வருவதாக காண்பித்தவர்கள் நாட்கள் செல்ல செல்ல பள்ளிவயதில் வருவது போல் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர். அடுத்து எப்படி காதலிப்பது, பார்த்தவுடன் வருவது. அதாவது கதாநாயகன் ஆயிரம் அழகிகளை கடந்துச்சென்றாலும் ஒரே ஒரு பெண்ணைப் பார்த்தால் மனதுக்குள் ஒரு இது வரும். 

ஏதோ ஒன்று சொல்லும், இவள் தான் என் வாழ்க்கை துணை என்று. சரி கதாநாயகனுக்கு சொல்லிவிட்டது கதாநாயகிக்கு சொல்ல வேண்டாமா? மூச் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். நாயகி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவளை துரத்தி துரத்தி அவள் சம்மதத்தை பெற வேண்டும். அதுவரை ஒழுங்காக பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றுக்கொண்டிருக்கும் நாயகியை எப்படியாவது கவர்ந்து காதலிக்க வைத்த பின் அப்புறம் ஏது பள்ளி, கல்லூரி படிப்பு. டூயட்டோடு சந்தோஷமாக முடியும் படத்தில் காதலித்த பின் சமுதாயத்தில் கஷ்டப்பட்டு வாழ்வதை காட்டவே மாட்டார்கள். சில படங்கள் விதிவிலக்கு.

சரி கதாநாயகி சம்மதிக்கவில்லை அதற்கும் இருக்கிறது செண்டிமெண்ட். அவளுக்காக கையில் பிளேடால் கிழித்துக்கொள்வது, உயிரைப்போக்கிக்கொள்ள முயல்வது, அனுதாபத்தை பெற முயல்வது என்று சாம, பேத, தான, தண்டத்தை உபயோகித்து காதலை அடைய வேண்டும். அதன் பின்னரும் கதாநாயகி சம்மதிக்காமல் இருப்பாளா? சம்மதித்தாக வேண்டுமே ஏனென்றால் அவள் கதாநாயகி.

இப்படி சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவர்கள் நாம். நீங்கள் ஏன் சினிமாவை பின் பற்றுகிறீர்கள் என்று கேட்கலாம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹீரோ, ஹிரோயின் மறைந்துள்ளாரே,  ஆகையால் எங்காவது நம்முடைய தெருவில், பள்ளியில், மார்க்கெட்டில் பார்க்கும் பெண்ணை அவள் சம்மதம் இல்லாவிட்டாலும் துரத்தி துரத்தி பின் தொடர்ந்தால் சினிமா சொல்லிக்கொடுத்தது போல் அவள் எப்பேற்பட்டவளாக இருந்தாலும் காதலித்து தான் ஆக வேண்டும் என்ற தியரிப்படி காதலிக்க ஆரம்பித்து விடுவாள் என்று ஒவ்வொரு ஆண் மகனும் நம்புகிறான்.

சினிமா எவ்வளவோ பல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ஆனாலும் நமக்கு தோதான ஒன்றை எடுத்துக்கொள்வதில் தான் அலாதியான சுகம் உள்ளது. பள்ளிபருவத்தில் வருவது காதல் என்கிறது சினிமா. ஆனால் பள்ளிப்பருவத்தில் இரு பாலருக்கிடையில் ஏற்படுவது இனக்கவர்ச்சியின் ஈர்ப்பு என்கிறது உளவியல்.

ஒரு பெண் அவள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இளம் வயதில் சந்திக்கும் ஆணை பெரிதாக நினைக்கிறாள். இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு அவனை விரும்புகிறாள். இதே தான் ஆணுக்கும் மாற்றுப்பாலினம் அருகாமையில் இருக்கும் போது உள்ள ஈர்ப்பை காதல் என்று உருவகப்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் தன்னுடைய அழகிய பிம்பத்தைத்தான் இருபாலரும், அதாவது பாசிட்டிவ் பர்சனாலிட்டியை காண்பித்துத்தான் ஒருவரை ஒருவர் கவர்கிறார்கள். ஆனால் எதார்த்தம் வேறல்லவா? போக போக ஒவ்வொருவரின் நிஜ முகம் , நெகடிவ் பர்சனாலிட்டியும் தெரிய துவங்குகிறது. விளைவு தாம் தவறான ஒரு நபரை தேர்வு செய்து விட்டோமா? என்கிற எண்ணம் தோன்றுகிறது. அங்குதான் ஆரம்பமாகிறது பிரச்சினை.

அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நோக்கம் எதுவுமில்லாம் இனக்கவர்ச்சியால் வரும் காதல் நீடிப்பதில்லை. இதில் ஏதோ ஒருவர் மாறும்போது பிரச்சினை ஆரம்பமாகிறது. பொதுவாக பெண்கள் ஆண்களை விட ஜாக்கிரதை உணர்ச்சியும், நிதானமான சிந்தனையும் உள்ளவர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால் பால்ய பருவத்திலிருக்கும் பெண்ணுக்கு எந்த அளவுக்கு ஜாக்கிரதை உணர்ச்சி இருக்கும். பால்யப் பருவத்தில் தெரியாமல் இதில் சிக்கி ஒன்று வாழ்க்கையை இழப்பது அல்லது உயிரை விடுவதுதான் பெண்களின் நிலையாக உள்ளது.  

ஆரம்பத்தில் இதுபோன்ற பாசிடிவ் அப்ரோச்சில் மயங்கும் பெண்கள் சில ஆண்டுகளில் தனக்கு உண்டான சரியான துணை இவன் இல்லை என்று தெரியும் போதோ, அல்லது அந்த நபர் தன் சுயரூபத்தை காட்டும் போது வேண்டாம் இவன் சரியான வாழ்க்கை துணை இல்லை என்று மறுக்கும்போதோ அல்லது ஆண் கல்வியில் மற்ற தகுதியில் குறைவானவனாக இருந்து பெண் மேலும் மேலும் படித்து புதிய பணிக்கு புது வகையான சூழ்நிலைக்கு மாறும்போது அதை தனது தோழியின் வளர்ச்சியாக பார்க்காமல், அவன் வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது சிக்கல் ஆரம்பிக்கிறது.  இதே வகையைச் சேர்ந்தது தான் மடிப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன் இந்துஜா என்ற பெண் பெட்ரோல் ஊற்றி காதலனால் எரிக்கப்பட்ட விவகாரத்திலும் நடந்தது.

சில வாரங்களுக்கு முன் அண்ணா நகர் டவரில் காதலித்துவிட்டு பின்னர் படிக்க வேண்டும் என்று ஒதுங்கிய பெண்ணை, அவரது முன்னாள் காதலரான மென் பொறியாளர் கத்தியால் குத்திவிட்டு தன்னையும் கத்தியால் குத்திக்கொண்டார். நல்ல வேளை இருவரும் காயங்களுடன் பிழைத்தனர்.

ஆனால் நேற்று அஸ்வினி கொடுமையாக கொல்லப்பட்டு விட்டார். தனது மனைவியாக உருவகப்படுத்திக்கொண்டு காலமெல்லாம் தன்னுடன் வாழபோகிறாள் என்று நினைத்த பெண்ணை எப்படி கொடூரமாக கொல்ல ஒரு ஆணுக்கு மனம் வருகிறது.

அவள் தன் கையை விட்டு போகிறாள், வேறொரு வாழ்க்கையை சந்தோஷமாக வாழப்போகிறாள் எப்படி அதை சகித்துக்கொள்வது என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது. இத்தகைய மோசமான நடத்தையின் வெளிப்பாட்டுக்கு காதலன் அழகேசன் மட்டுமா காரணம்? நம்மைச்சுற்றி நாம் ஏற்படுத்தியுள்ள சமூக சிந்தனைகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. விட்டுக்கொடுக்கும் மனம் இல்லாததும் இந்த பெண்ணோடு நம் உலகமே முடிந்து விடப்போகிறது என்ற எண்ணத்தையும் யார் உருவாக்கியது. 

ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினிகாந்தை காதலிக்கும்  பெண் பின்னர் நல்ல வசதியான மாப்பிள்ளை வந்ததும் உதறிவிட்டு சென்றுவிடுவார். அப்போது துயரத்துடன் இருக்கும் ரஜினியிடம் அவரது நண்பரான சோ ஒரு வசனத்தை சொல்வார். உண்மையில் அதுதான் நம் வாழ்க்கையின் எதார்த்தம். “ஆரம்பத்தில் அவள் காதலிக்கும் போது அவளுக்கு உண்மையிலேயே உன்னை பிடித்து காதலித்திருக்கலாம், பின்னாடி சூழ்நிலை மாறும்போது உன்னைவிட பெட்டரான ஒருவன் வந்தவுடன் மாறியிருக்கலாம் இதை போய் பெரிது படுத்தாதே இவ்வளவு மாறுபட்ட எண்ணம் உள்ள அந்த பெண்ணும் நீயும்  சேர்ந்து வாழாததை நினைத்து சந்தோஷப்படு” என்பார்.

இதுபோன்று எத்தனை பேர் வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் காதல் பலமுறை வரும். அதில் இளமையில் வருவது இனக்கவர்ச்சி,  சிலசமயம் சில காதல்கள் ஒருதலைக் காதலாக முடியும். இறுதியில் எது சேருகிறதோ அதுதான் நல்ல காதல் என்று பொருள்பட கமல் பட பாடல் ஒன்று உண்டு. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறோம்.

தனக்கு விருப்பமில்லை என்று ஒரு பெண் மறுக்க உரிமை இல்லை. மறுத்தால் இந்த உலகத்திலேயே இல்லை என்கிற மனப்பான்மை வக்கிரத்தின் வெளிப்பாடே. அறியாத சின்ன வயதில் ஒருவனை தேர்வு செய்த பின்னர்,  உலகம் புரியும் போது ஒரு பெண் மனம் மாறும்போதும், தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்று ஒரு ஆண் நினைக்கும் போதும் நடக்கும் ஒரு கொடூர நிகழ்வே நேற்று நடந்த கொலை.

இளம் பருவத்தினருக்கு காதல், இனக்கவர்ச்சி பற்றிய புரிதலை உருவாக்காத வரை, திரைப்படங்களில் இதே போன்ற கருத்துகள் தொடரும் வரை, தங்களது பொறுப்பு, கடமை குறித்த புரிதலை குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்கும் வரை, பெண்கள் குறித்த ஆணாதிக்க புரிதல் மாறாதவரை, ஆணாதிக்க சிந்தனை உள்ளவரை அஸ்வினிகள், ஸ்வாதிக்கள், இந்துஜாக்கள் கொடூரமாக கொல்லப்படுவது தொடரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close